Election bannerElection banner
Published:Updated:

நாகர்கோவில்: அ.தி.மு.க எம்.பி விஜயகுமார் வீட்டுக்கு முன் கிடந்த வெடிகுண்டு! - அரசியல் பகை காரணமா?

எம்.பி விஜயகுமார் வீட்டுக்கு முன்பு கிடந்த வெடிகுண்டு
எம்.பி விஜயகுமார் வீட்டுக்கு முன்பு கிடந்த வெடிகுண்டு

``இந்தச் சம்பவத்தில் எனக்கு வேறு சந்தேகம் இல்லை. எதுவாக இருந்தாலும் அரசியல்தான். மற்றபடி எனக்கு எந்த பிசினஸோ, வேறு பிரச்னையோ கிடையாது" என வெடிகுண்டு கிடந்த சம்பவம் பற்றி அ.தி.மு.க எம்.பி விஜயகுமார் கூறுகிறார்.

அ.தி.மு.க நாடாளுமன்ற மேல்சபை எம்.பி-யாக இருப்பவர் நாகர்கோவிலைச் சேர்ந்த விஜயகுமார். இவர் கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க முன்னாள் செயலாளர். மண்டைக்காடு அருகேயுள்ள பரப்பற்றைச் சேர்ந்த விஜயகுமார், நாகர்கோவில் சிதம்பரநாதன் தெருவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இன்று காலை சுமார் 8:30 மணியளவில் விஜயகுமாரின் வீட்டுக்கு அவரது கார் டிரைவர் அகில் வந்திருக்கிறார். அப்போது, விஜயகுமார் வீட்டு கேட் முன்பு உருண்டையாக வெடிகுண்டு கிடந்ததைப் பார்த்திருக்கிறார்.

அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அகில், உடனடியாக விஜயகுமார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். விஜயகுமார் எம்.பி டெல்லியில் இருப்பதால், அவர் குடும்பத்தினரிடம் தகவலைக் கூறியிருக்கிறார். பிறகு, வீட்டிலிருந்து மோட்டார் மூலம் அந்த வெடிகுண்டு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்திருக்கிறார். இது குறித்து நேசமணிநகர் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் உடனடியாக விஜயகுமார் எம்.பி வீட்டுக்குச் சென்றனர்.

மோப்பநாய் உதவியுடன் விசாரணை
மோப்பநாய் உதவியுடன் விசாரணை

விஜயகுமார் எம்.பி வீட்டுக்கு முன்பு கிடந்த அந்த வெடிபொருளை மீட்டு தடவியல் ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். வேறு எங்காவது இது போன்ற பொருள்கள் இருக்கின்றனவா எனவும் விஜயகுமார் வீட்டிலும், வெளிப்புறத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. விஜயகுமார் வீட்டுக்கு முன்பு கிடந்த வெடிகுண்டை நிபுணர்கள் சோதனை நடத்தியதில், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் மருந்துகளை உருண்டையான ஐஸ்க்ரீம் டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்திருக்கிறது.

கன்னியாகுமரி: `வாழ்நாள் முழுவதும் உழைத்த பணம்!’ - பெண்களிடம் நூதன மோசடி; சர்ச்சையில் தம்பதி

மேலும், அதில் ஒரு திரி போடப்பட்டு, துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அந்த வெடிகுண்டை போட்டுச் சென்றது யார் என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். எம்.பி விஜயகுமார் தினமும் காலையில் வெளியே செல்வது வழக்கம் என்றும், அவரது கார் சக்கரம் செல்லும் தடம் பார்த்து அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜயகுமார் எம்.பி
விஜயகுமார் எம்.பி

இது குறித்து விஜயகுமார் எம்.பி நம்மிடம் கூறுகையில், ``நான் நேற்றுதான் டெல்லிக்கு வந்தேன். இன்று காலையில் இப்படி ஒரு பொருள் கிடப்பதாக போட்டோ எடுத்து அனுப்பினார்கள். நான் உடனே டவுன் டி.எஸ்.பி-க்கு கூப்பிட்டுச் சொன்னேன். அது சம்பந்தமாக புகார் பதிவு செய்யக் கூறியிருக்கிறென். இந்தச் சம்பவத்தில் எனக்கு வேறு சந்தேகம் இல்லை. எதுவாக இருந்தாலும் அரசியல்தான். மற்றபடி எனக்கு எந்த பிசினஸோ, வேறு பிரச்னையோ கிடையாது. நான் நேற்று அங்கிருந்து டெல்லிக்குக் கிளம்பியது தெரியும். நான் வீட்டில் இல்லை என்பதும் தெரியும். இன்றைக்குக் காலையில் இப்படி நடந்திருக்கிறது. எதுவாக இருந்தாலும் சட்டரீதியா நடவடிக்கை எடுக்கச் சொல்லிவிட்டோம்" என்றார்.

இந்தநிலையில் விஜயகுமார் எம்.பி வீட்டுக்குச் சென்ற தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். அ.தி.மு.க எம்.பி வீட்டுக்கு முன்பு கிடந்த வெடிகுண்டால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு