Published:Updated:

கொலை, கொள்ளை, கஞ்சா... சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!

கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருக்கிறன. சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!

கொலை, கொள்ளை, கஞ்சா... சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருக்கிறன. சட்டம்-ஒழுங்கைப் பேணுவதில் கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!

Published:Updated:
கோட்டைவிடுகிறதா தமிழ்நாடு காவல்துறை?!

சமீபத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் ஆண் ஒருவர் ஏற முயன்றிருக்கிறார். அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர் ஆசிர்வா அந்த நபரை இறங்கும்படி கண்டித்திருக்கிறார். ஆத்திரமடைந்த மர்மநபர், தான் மறைந்துவைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிர்வாவை நெஞ்சுப்பகுதி, கழுத்துப்பகுதியில் குத்திவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கின் தற்போதைய நிலைக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இப்படிக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கொடூரக் கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ``மக்களைப் பாதுகாக்கவேண்டிய காவலர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு காவல்துறை?" என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சியில் வன்முறை, சாதி ச்சண்டை, மத மோதல், அராஜகம் இல்லை. தமிழ்நாட்டில் மக்கள் அமைதியாக வாழ அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பான, அமைதியான மாநிலம் தமிழ்நாடு. இந்த அரசின் நோக்கம் குற்றங்களைத் தடுப்பதே. கூலிப்படைவைத்து தொழில் செய்பவர்களைத் துடைத்தெறிய வேண்டும். கூலிப்படைகளைக் கட்டுப்படுத்த ஈவு இரக்கம் இல்லாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கூலிப்படையினர் எங்கோ ஓடி ஒளிந்து மறைந்துவிட்டனர் என்ற அளவுக்கு அவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டிவருகிறது இந்த ஆட்சி" என்று பேசியிருந்தார்.

பாதுகாப்பான மாநிலம் என்று முதல்வர் சொல்கிறார்... ஆனால், சமீபத்தில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலைசெய்யப்படும் காட்சிகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் காவல்துறை செயலில்தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஆறு மாதங்களில்  940 கொலைகள்!

தமிழ்நாட்டில் கடந்த 22-23-ம் தேதி மட்டுமே 12 கொலைகள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 940 கொலைகள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டைப் பொறுத்தவரை இதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1,041 கொலைகளும் நடந்திருப்பதாகக் காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் மாதம் 130-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலைச் சம்பவங்களைப் பொறுத்தவரை, முன்விரோதம் ஒரு காரணமாக இருந்தாலும், பல இடங்களில் மது, கஞ்சா போதையில் நடந்த கொலைகள்தான் அதிகம். சமீபத்தில், கிருஷ்ணகிரி அருகே பாலேப்பள்ளி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டான்.

கொலை
கொலை

அதேபோல சென்னை, அம்பத்தூர் அன்னை சத்யா நகர், எம்.கே.பி.நகரைச் சேர்ந்த இரு தரப்பு இளைஞர்களுக்கிடையே நீண்டநாள் கோஷ்டி மோதல் இருந்துவந்தது. இந்த மோதலின் எதிரொலியாகக் கடந்த மே மாதம் எம்.கே.பி.நகரைச் சேர்ந்த லோகேஷை அம்பத்தூர் உதவி ஆணையர் அலுவலகம் அருகில் ஒரு தரப்பினர் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தனர். இந்தக் கொலையில் சண்முகம் என்ற இளைஞர் உட்பட 14 பேரைக் கைதுசெய்தது காவல்துறை. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பழிதீர்க்க லோகேஷின் தம்பியும், அவர் நண்பர்களும் நீண்டநாள்களாகத் திட்டம் தீட்டிவந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சண்முகத்தின் சகோதரன் கார்த்திக்கை, லோகேஷின் தம்பியும், அவரின் நண்பர்களும் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு எதிரில் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தனர். தமிழ்நாட்டில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இப்படியான பழிதீர்க்கும் கொலைச் சம்பவங்கள் தினமும் அரங்கேறிவருகின்றன.

அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்!

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சார்பில் `கஞ்சா வேட்டை 2.0' போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவருவதாகச் சொல்லப்பட்டது. இருந்தபோதிலும், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர்மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன. இவர் மனைவி ஜாம் பஜார் பகுதியில் சிற்றுண்டிக்கடை நடத்திவருகிறார். இவருக்கும், அந்தப் பகுதியில் இருக்கும் மற்றொரு குழுவுக்கும் கஞ்சா விற்பனையில் முன்பகை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, பட்டப்பகலில் முகமூடி அணிந்துவந்த ஒரு மர்மக்கும்பல் ராஜாவைச் சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 11 பேரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா
கைப்பற்றப்பட்ட கஞ்சா

கஞ்சா விற்பனை அதிகரிப்பது ஒருபக்கம் இருக்க... கஞ்சா விற்பனையில் ஏற்படும் முன்பகை தொடர்பாகப் பல்வேறு குற்றச்சம்பவங்களும் நடந்துவருகின்றன. குறிப்பாக, சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப்பொருள் கடத்திவந்தவர்கள், பதுக்கிவைத்திருந்தவர்கள், விற்பனை செய்தவர்கள் என 12 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து 8.6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதோடு, 15 கிராம் பெட்டமைன், 1,200 மாத்திரைகள் மற்றும் LSD ஸ்டாம்ப்புகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. நேற்று (24.08.2022) நுங்கம்பாக்கம் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை நடத்தியதில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இப்படியாக கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

அதிகரிக்கும் திருட்டு, ஆள் கடத்தல் சம்பவங்கள்!

நகைத் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை, கடையை உடைத்துக் கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. கொள்ளைச் சம்பவங்களைத் தாண்டி சமீபத்தில் ஆள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பாதரைப் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். நிதி நிறுவனம் நடத்திவரும் கௌதம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கொ.ம.தே.க இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வசூல் செய்த பணத்துடன் நிறுவனத்திலிருந்து அவர் வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். அவர் செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மர்மநபர்கள் சிலர் வழிமறித்து மிளகாய்ப்பொடியைத் தூவி அவரை காரில் கடத்தியிருக்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட கடத்தல் கும்பல்
கைதுசெய்யப்பட்ட கடத்தல் கும்பல்

அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் கௌதமைத் தீவிரமாகத் தேடிவந்தனர். கடத்தப்பட்டு இரண்டு நாள்களான நிலையில், அவர் சேலம் அருகே உள்ள ஏரிக்கரையில் கொலைசெய்யப்பட்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கோவில்பட்டியில் உள்ள ஒரு கடையில் புகுந்து தொழிலதிபர் தங்கம் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தல் கும்பல் அவரின் குடும்பத்தினரை மிரட்டி ஐந்து லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள். பணம் வந்ததுமே தங்கத்தை விட்டுவிட்டுக் கடத்தல் கும்பல் காரில் தப்பித்தது. இந்தக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் பின்தொடர்ந்து கைதுசெய்தனர். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கடத்தப்பட்டு பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டனர்.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை தொடங்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை என நடக்காத குற்றங்களே இல்லை என்ற சூழல் நிலவுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே இரண்டு ஊராட்சித் தலைவர்கள் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் தொடங்கி மக்கள் பிரதிநிதிகள் வரை பலருக்கும் பாதுகாப்புக்கு இல்லை என்பதே உண்மை நிலவரம். ஆனால், காவல்துறை சார்பில், 2019-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு 101 கொலைக் குற்றங்கள் குறைவாகப் பதிவாகியிருக்கின்றன என்று அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குற்றம் நடந்த பிறகு, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வது மட்டும் காவல்துறையின் கடமை கிடையாது. எந்தக் குற்றமும் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் காவல்துறையின் முக்கியக் கடமை என்பதை உணர்த்து செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.