Published:Updated:

`கஞ்சா விக்கிற இடத்துல நீ யாருடா?' -கடலூர் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ரௌடியால் நேர்ந்த விபரீதம்

சிஐஎஸ்எப் வீரரை கத்தியால் மிரட்டும் கஞ்சா மணி
News
சிஐஎஸ்எப் வீரரை கத்தியால் மிரட்டும் கஞ்சா மணி

கஞ்சா விற்கும் ரௌடி ஒருவர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதோடு, மற்றொரு வீரரை முட்டி போடவைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-15 என்எல்சி குடியிருப்பில் வசித்துவருபவர் செல்வேந்திரன். மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப் -மத்திய தொழிலக பாதுகாப்பு படை) வீரரான இவர், என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கஞ்சா மணி (எ) மணி, தன் நண்பர்களுடன் என்எல்சி சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த காப்பர் கம்பிகளைத் திருடுவதற்கு முயன்றுள்ளார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி)
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி)

அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த செல்வேந்திரன், மணியைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். இதனையடுத்து, கையில் வைத்திருந்த கத்தியால் செல்வேந்திரனை குத்திவிட்டு அங்கிருந்து மணி தப்பிச்சென்றுவிட்டார். உடனே அவரை மீட்ட சக பாதுகாப்புப் படை வீரர்கள், செல்வேந்திரனை என்எல்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அங்கு அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தப்பிச்சென்ற மணியை சக வீரர் ஒருவருடன் இணைந்து விரட்டிப்பிடித்த தாஸ் என்ற சிஐஎஸ்எப் வீரர், மணி மீண்டும் தப்பிவிடாமல் இருக்க அவரது இருசக்கர வாகனத்தின் சாவியைப் பிடுங்கிக்கொண்டார்.

முட்டி போட வைத்து மிரட்டப்படும் சி.ஆர்.பி.எஃப் வீரர்
முட்டி போட வைத்து மிரட்டப்படும் சி.ஆர்.பி.எஃப் வீரர்

இதில் ஆத்திரம் அடைந்த கஞ்சா மணி, தாஸை சுற்றி வளைத்துத் கடுமையாக தாக்கியதுடன், அவரை முட்டிபோட வைத்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். அதில் மிரண்டுபோன பாதுகாப்புப்படை வீரர் தாஸ், ’'சாரி... தெரியாமல் செய்துவிட்டேன்’' என்று கெஞ்ச, ”என்னது, சாரி கேட்கிறாயா?” என்று சொல்லி அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கடுமையாகத் தாக்கியுள்ளார், கஞ்சா மணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, ``என்னையே புடிக்க வர்றியா... கஞ்சா விக்கிற இடத்துல யாருடா இவன்? க்ரைமா நீ... வீடியோவுல சொல்றா. நானே குண்டாஸ்ல இருந்து வெளியில வந்து ஒரு மாசம் ஆகுது. இவன் யாருனே தெரியல. க்ரைம்னு சொல்றான் என்னை” (மேலும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்).

கஞ்சா கும்பல்
கஞ்சா கும்பல்

இந்தச் சம்பவத்தை வீடியோவில் பதிவுசெய்துகொண்டிருந்த மற்றொரு வீரரையும் கத்தியால் தாக்க முயல, அப்போது நெய்வேலி உளவுப் பிரிவு ஏட்டான ஜான் பெயரைக் கூறி, `அவரது நண்பர்தான் இவர்' என்கிறார் அந்த வீரர். அதற்கு கஞ்சா மணி, ``என்னது ஜான் சார் ஃபிரண்டா நீ... டேய் ஜான் சாருக்கு போன் போடுடா'' என்று தனது சகாக்களுக்கு கட்டளையிட்டுவிட்டு மீண்டும் அந்த வீரரைக் கத்தியால் குத்த முயல்கிறார்.

அதன்பிறகு, ஒருவழியாக அங்கிருந்து தப்பித்த அவர்கள், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரிவு எஸ்.ஐ உள்ளிட்ட காவலர்களுடன் அங்கு சென்ற மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள், ` ஏம்பா, பொண்ணை கையப் பிடிச்சி இழுத்தியா?' என்ற வடிவேல் காமெடி ரேஞ்சுக்கு, `நீ கம்பி திருடினியா... நீ ஏன் இங்க வந்தே?' என்று சாதாரணமாகக் கேட்டுள்ளார்.

அதற்கு, ``நான் திருட வரவில்லை மேடம். எனக்கே உடம்பு சரியில்லை'' என்று மணி சொன்னதும், இன்ஸ்பெக்டர் மீனாள் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். இந்த வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கஞ்சா மணி கும்பலிடம் விசாரனை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் மீனாள்
கஞ்சா மணி கும்பலிடம் விசாரனை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் மீனாள்

கடந்த 2019 ஜூன் மாதம், கையில் கஞ்சா பாக்கெட்டுகளுடன், `நான்தான் பெங்களூரு மணி. என் பேருல 28 கேஸ். நெய்வேலில நான் கஞ்சா விக்கிறேன். நான் 307 செய்து மூனு நாள் ஆகுது' என்று ஓப்பன் டாக் கொடுத்த வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு வீரர்களையே முட்டி போட வைத்துத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினரின் கரிசனத்தோடு நெய்வேலி முழுவதும் தனது கஞ்சா தொழிலை மணி விரிவுபடுத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள் அப்பகுதி மக்கள்.

“ மாசம் 10 லட்ச ரூபாய் வரைக்கும் கஞ்சாவில் கல்லா கட்டுகிறார் மணி. அதில் 5 லட்சம் ரூபாயை மாதா மாதம் 1-ம் தேதியே காவல்துறையினருக்கு பட்டுவாடா செய்துவிடுகிறார். அதனால்தான், காவல்துறையினர் அவனைக் கண்டுகொள்வதில்லை” என்று அப்பகுதி மக்கள் கொதிக்கின்றனர்.

மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில், கஞ்சா மணி மீது கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இவர், மூன்றே மாதங்களில் ஜாமீனில் வந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதுடன், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரரைக் கத்தியால் குத்தியிருக்கிறார்.

கஞ்சா பாக்கெட்டுகளுடன் மணி
கஞ்சா பாக்கெட்டுகளுடன் மணி

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் புகார் அளித்தும், அவர்கள் கத்தி முனையில் மிரட்டப்படும் காட்சிகள் வெளியாகியும்கூட, காவல்துறையினர் மணியைக் கைதுசெய்ய வில்லை. ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான், தற்போது மணியை வலைவீசி (!?) தேடிக்கொண்டிருக்கிறது கடலூர் மாவட்ட காவல்துறை.

இதுகுறித்து விளக்கம் கேட்க நெய்வேலி டிஎஸ்பி லோகநாதனைத் தொடர்பு கொண்டபோது, “நான் ரைட்டர் பேசுறேன். சார் மீட்டிங்ல இருக்காங்க. வந்தவுடனே சொல்றேன்” என்றதோடு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.