Published:Updated:

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு: கடலூர் தி.மு.க எம்.பி, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடலூர் தி.மு.க எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்
கடலூர் தி.மு.க எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்

``நான் உயிரினும் மேலாகப் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்துவிட வேண்டாம் எனக் கருதி சரணடைகிறேன்” - கடலூர் தி.மு.க எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்

கடலூர் மாவட்டத்தின் தி.மு.க எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரித் தொழிலதிபரான இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பண்ருட்டியை அடுத்திருக்கும் பனிக்கன்குப்பம் வடக்குத் தெருவில் இவருக்குச் சொந்தமான `ஸ்ரீகாயத்ரி கேஷுவ்ஸ்’ என்ற முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. அதில் மேல்பாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றிவந்தார். செப்டம்பர் 19-ம் தேதி மாலை வேலையை முடித்துவிட்டு ஆலையைவிட்டு வெளியேறும்போது கோவிந்தராஜைத் தடுத்து நிறுத்திய மேனேஜர் கந்தவேலுவும், காவலாளி சண்முகமும் முந்திரி திருடியதாகக் கூறி, அவரைக் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

உயிரிழந்த முதியவர் கோவிந்தராஜ் (இறப்பதற்கு முன்பு காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம்)
உயிரிழந்த முதியவர் கோவிந்தராஜ் (இறப்பதற்கு முன்பு காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம்)

அதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜுவுக்கு மூக்கில் ரத்தம் வழிந்திருக்கிறது. எம்.பி ரமேஷ் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அன்றிரவு சுமார் 10:30 மணிக்கு கந்தவேலுவும், சண்முகமும் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு கோவிந்தராஜை அழைத்துச் சென்று அவர்மீது திருட்டு வழக்கு பதிவு செய்யும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் கோவிந்தராஜுக்குக் கடுமையான ரத்தக்காயங்கள் இருந்ததைப் பார்த்த போலீஸார் புகாரை வாங்க மறுத்ததுடன், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் முந்திரித் தொழிற்சாலைக்கே அழைத்துச் சென்று மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கேயே மர்மமான முறையில் உயிரிழந்தார் கோவிந்தராஜ். மறுநாள் சென்னையிலிருந்து ஊருக்கு திரும்பிய கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல், எம்.பி ரமேஷ் உள்ளிட்ட பலர் தனது தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டார்கள் என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் `சந்தேக மரணம்’ என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எம்.பி-க்குச் சொந்தமான பனிக்கன்குப்பம்  முந்திரி ஆலை
எம்.பி-க்குச் சொந்தமான பனிக்கன்குப்பம் முந்திரி ஆலை

ஆனால், ``இறந்த கோவிந்தராஜின் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதுடன், எம்.பி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்த நிலையில், இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார் அந்தக் கட்சியின் வழக்கறிஞர் பாலு. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இறந்த கோவிந்தராஜின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பிறகு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையிலும், காவல்துறை விசாரணையிலும் கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து செம்படம்பர் 26-ம் தேதி சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது வழக்கு. இந்த நிலையில்தான் வழக்கை முழுமையாக ஆய்வு செய்தது சி.பி.சி.ஐ.டி டீம். சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேலு, அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்ற சுந்தரராஜன் உள்ளிட்ட ஐந்து பேரையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவர்களிடம் வாக்குமூலம் பெறும் பணியை மேற்கொண்டனர். அதில் நடராஜன் என்பவர் விசாரணையின்போதே மயங்கி விழுந்ததால் உடனடியாக அவர் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மற்ற நால்வரும் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி பிரபாகரன் முன்பு அக்டோபர் 9-ம் தேதி காலை 6:30 மணிக்கு ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதன் பிறகு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடராஜனும் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதையடுத்து தலைமறைவான வழக்கின் ஏ1 குற்றவாளியான எம்.பி ரமேஷ் தலைமறைவாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முயன்றார். அதேசமயம் அவரைக் கைதுசெய்ய மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்டுக் காத்திருந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். இந்த நிலையில்தான் இன்று காலை 10:45 மணிக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கற்பகவள்ளி முன்பு சரணடைந்திருக்கிறார்.

ரமேஷ் அறிக்கை
ரமேஷ் அறிக்கை
தொழிலாளி கொலை: திமுக எம்.பி டிஆர்வி ரமேஷ் ஏ1 குற்றவாளியாக சேர்ப்பு -  போலீஸ் தேடுதலால் தலைமறைவு?!

அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் விளக்கக் கடிதத்தில், ``சி.பி.சி.ஐ.டி என்மீது பதிவு செய்திருக்கும் எஃப்.ஐ.ஆர்-ஐ அடிப்படையாகவைத்து தி.மு.க மீது அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதுக்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது. ஆகவே, நான் உயிரினும் மேலாகப் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்துவிட வேண்டாம் எனக் கருதி சரணடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே, அவருக்கு மூன்று நாட்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு