Published:Updated:

`காவல் ஆய்வாளரைக் கொல்லச் சொன்னாரா?’ - பெண் இன்ஸ்பெக்டரை விசாரிக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்

ஜி.சதாசிவம்
எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டம் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, போலீஸ்காரரை லாரி ஏற்றிக் கொலை செய்யச் சொன்னதாக கூறப்படும் வழக்கில் மனித உரிமை ஆணையம் உத்தரவின் பேரில் அவரிடம் ஏ.டி.எஸ்.பி. பாண்டியன் விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி
இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ( எஸ். தேவராஜன் )

கடலூர் மாவட்டம் கல்லூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு பாறைகளை உடைக்க ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உட்பட வெடி பொருள்கள் கீற்றுக் கொட்டகையில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது. இதை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு உத்தரவின்படி தலைமைக் காவலர் ராஜசேகரன் கடந்த ஜூன் 1-ம் தேதி அங்கு பார்க்கச் சென்றுள்ளார்.

Vikatan

பின்னர் இது குறித்து தங்கள் மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையறிந்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, ராஜசேகரை மிரட்டியதோடு கல் குவாரி பணியாளர்களிடம் அவரை லாரி ஏற்றிக் கொல்லச் சொல்லியதாக புகார் எழுந்தது. இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிந்துள்ளது.

மேலும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க கடலூர் மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி. பாண்டியன், நேற்று மாலை விருத்தாசலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் கல்லூரைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், செய்தியாளர்களை மிரட்டிய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி நேரில் ஆஜராக வேண்டும் என மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் கோயில் பிரச்னையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் வேப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்பொழுது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தாக்கி, அவர்களை காவல் நிலையத்தில் அமரவைத்தார்.

விருத்தாசலம் காவல் நிலையம்
விருத்தாசலம் காவல் நிலையம்
எஸ். தேவராஜன்

இது தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய நீதிபதி ஆகஸ்ட் 21-ம் தேதி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமைகள் ஆணையம் ஒரு வழக்கில் விசாரணை நடத்தவும், ஒரு வழக்கில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியிடம் கேட்டதற்கு,``அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. எங்கள் டிபார்ட்மெண்டை சேர்ந்த காவலரை நான் எப்படி அது மாதிரி சொல்வேன். சம்பவம் நடந்த அன்று டிபார்ட்மெண்டை சேர்ந்த 8 பேர் மற்றும் பத்திரிகையாளார்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தால் தெரியும். நான் அப்படி சொல்லவே இல்லை'' என்றார்.