Published:Updated:

லண்டன் சிறையில் நீரவ் மோடி - ஆகஸ்ட் 22 வரை காவல் நீட்டிப்பு!

ஆ.பழனியப்பன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல், ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடி
நீரவ் மோடி

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார், குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

நீரவ் மோடி
நீரவ் மோடி

அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்தனர். தற்போது, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஜாமீன் பெறும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த வழக்கு, நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 25-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக அவர் ஆஜரானார். பழுப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த நீரவ் மோடி, உற்சாகமாகக் காணப்பட்டாராம். வழக்கை விசாரித்த நீதிபதி, நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

நீரவ் மோடி
நீரவ் மோடி

கடன் மோசடி வழக்கில் நீரவ் மோடி, அவரின் மனைவி எமி, அவரின் சகோதரர்கள் மற்றும் அவரின் தொழில் கூட்டாளி மெஹுல் சோக்ஸி ஆகியோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

நீரவ் மோடியின் வைர நகைக் கடைகள், இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் உட்பட உலகின் பல நாடுகளில் உள்ளன. 2010-ம் ஆண்டு, குளோபல் டைமண்டு ஜுவல்லரி ஹவுஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, அவரின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில்தான், வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார்.