Published:Updated:

தங்கக் கடத்தல் விவகாரம்; விசாரணையில் கஸ்டம்ஸ் அதிகாரி! - திருச்சி ஏர்போர்ட்டில் நடப்பது என்ன?

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

விசாரணையின் முடிவில், இந்தக் கடத்தல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், இந்த கடத்தலுக்குத் துணை போகும் அதிகாரிகள் சிக்குவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சில மாதங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்துவது அதிகரித்துவருகிறது. ``சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிட் தங்கத்தைக்கூடக் கடத்திவர முடியாது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். இது எப்படிச் சாத்தியம்?" என்று தொடர்ந்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரின் செல்போனில் தங்கம் கடத்திவரும் பயணியின் புகைப்படங்கள் இருந்ததால், அவரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் கூடாரமாக மாறியிருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கத்தைக் கடத்திவரும் சம்பவம் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. தற்போது கொரோனா பிரச்னையால் இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

இதற்கிடையிலும் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துவது குறைந்தபாடில்லை. இந்தநிலையில்தான், சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த புதுக்கோட்டை, பரமக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பயணிகளின் உடைமைகளைப் பரிசோதனை செய்திருக்கிறார்கள்.

அதில், ரூ.1.5 கொடி மதிப்பிலான 3 கிலோ 390 கிராம் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்திருக்கிறது. மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அவர்கள் நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின்படி விமான நிலையத்தின் வெளியில் தங்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருந்த மூன்று பேர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எட்டுப் பேரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

முதற்கட்ட விசாரணையில் திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரின் செல்போனில் தங்கம் கடத்திவரும் பயணியின் புகைப்படங்கள் இருந்ததால் அவரையும் அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

திருச்சி
திருச்சி

விசாரணையின் முடிவில், இந்தக் கடத்தல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், இந்தக் கடத்தலுக்குத் துணை போகும் உண்மையான அதிகாரிகள் சிக்குவார்களா என்பது தெரியும். `கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கக் கடத்தலுக்குத் துணைபோனதாக அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அந்த வழக்கு என்ன ஆனது... அதேபோல் இந்த வழக்கும் அப்படியே மூடி மறைக்கப்படுமா?’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு