Published:Updated:

டெல்லி: `எல்லை விவகார ஆவணங்கள்; சீனத் தொடர்பு!’ - ராஜீவ் சர்மா உட்பட மூவர் கைது

ராஜீவ் சர்மா
ராஜீவ் சர்மா

டெல்லி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துணைக் கண்காணிப்பாளர் சஞ்ஜீவ் குமார் யாதவ் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ராஜீவ் சர்மாவைக் கண்காணித்து வந்தனர்.

இந்திய ராணுவப் பாதுகாப்பு ரகசியங்களை சீனாவுக்கு விற்றதாக டெல்லி பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, சீனப் பெண் கிங் ஷி, நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர் சிங் ஆகியோரை Officials Secret Act சட்டத்தின் (OSA) கீழ் கைது செய்தது டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு.

ஆய்வாளரும், ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளருமான ராஜீவ் சர்மா பிரபல செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். இவர், சமீபத்தில் சீனச் செய்தித்தாள் நிறுவனமான குளோபல் டைம்ஸுக்கு ஒரு கட்டுரை எழுதிய பிறகு, டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டார். `ராஜீவ் கிஷ்கிந்தா' என்ற யூடியூப் சேனலை நடத்திவரும் சர்மா, கைதுசெய்யப்பட்ட அன்று, இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து இரண்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு நிமிட வீடியோ ஒன்றில், `இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டாலும், அமைதிக்கான பாதை இன்னும் தடுக்கப்படுகிறது’ என்று சொல்லப்பட்டிருந்தது. மற்றொரு நான்கு நிமிட வீடியோவில், `இன்று இந்திய ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது’ என்று கூறப்பட்டிருந்தது.

கைது
கைது

ராஜீவ் சர்மா, சீனாவின் உளவுத்துறைக்கு, எல்லையில் இந்திய ராணுவத்தை வரிசைப்படுத்துதல் குறித்த தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்ததாகவும், அதற்காக அவருக்கு ஒன்றரை ஆண்டுகளில் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு தொகை என்ற அடிப்படையில் 40 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி டெல்லி போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துணைக் கண்காணிப்பாளர் சஞ்ஜீவ் குமார் யாதவ் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் ராஜீவ் சர்மாவை கண்காணித்துவந்தனர். அதில் அவர் சீன உளவாளியாகச் செயல்படுவது உறுதியானதையடுத்து, சீனப் பெண், அவருடைய நேபாள கூட்டாளி, ராஜீவ் சர்மா ஆகியோரைக் கைதுசெய்தது டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு.

கைதுசெய்யப்பட்ட அடுத்த நாள் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, ஆறு நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் சர்மா. அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவந்தது.

இது குறித்து, துணைக் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் யாதவ், ``ராஜீவ் சர்மா 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை சீனாவின் குளோபல் டைம்ஸுக்கு வாரக் கட்டுரை எழுதினார். இதையறிந்த சீனாவைச் சேர்ந்த மைக்கேல், சர்மாவை லிங்க்டுஇன் மூலம் தொடர்புகொண்டு, சர்மாவை சீன ஊடக நிறுவனத்தின் நேர்காணலுக்காக அழைத்தார். முழுப் பயணச் செலவையும் மைக்கேல் ஏற்றுக்கொண்டதையடுத்து நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது, ​​மைக்கேலும் அவரது ஜூனியர் ஸோவும் ராஜீவ் சர்மாவிடம் இந்தியா-சீனா உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். சர்மா, மைக்கேல் மற்றும் ஸோவுடன் 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்பிலிருந்தார்" என்று யாதவ் கூறினார்.

இந்தியா-மியான்மர் ராணுவ ஒத்துழைப்பு, இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை, டோக்லாம் உள்ளிட்ட பூட்டான்-சிக்கிம்-சீனா முத்தரப்பு சந்திப்பில் இந்திய வரிசைப்படுத்தல் போன்ற தகவல்களை வழங்குவது தொடர்பாக சர்மாவுக்கு பணி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, லாவோஸ் மற்றும் மாலத்தீவில் மைக்கேல் மற்றும் ஸோவுடன் சர்மா அவ்வப்போது சந்திப்புகளை நடத்தியதுடன், தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்’’ என்றார்.

கைது செய்யப்பட்ட மூவர்
கைது செய்யப்பட்ட மூவர்

``2019 ஜனவரியில், சீன ஊடக நிறுவனத்தின் பொது மேலாளர் ஜார்ஜுடன் சர்மாவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. காத்மாண்டு வழியாக குன்மிங்குக்குச் சென்று அடிக்கடி ஜார்ஜை சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது தலாய் லாமா தொடர்பான பிரச்னைகள் குறித்து எழுத சர்மாவை ஜார்ஜ் கேட்டுக்கொண்டார். ஒரு கட்டுரைக்கு / தகவல்களுக்கு 500 டாலர் அவருக்கு வழங்கப்பட்டது’’ என்றும் சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்தார்.

``டெல்லியில் கிங் என்ற சீனப் பெண்ணால் இயக்கப்படும் மஹிபால் புர் நகரைத் தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனத்தின் மூலம் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. சர்மா தனது தகவல்களுக்காக 2019 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை சுமார் 10 தவணைகளில் ஜார்ஜிடமிருந்து ரூபாய் 30 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கியிருப்பதாகவும், சர்மாவுக்கு நிதியை மாற்றுவதற்காக ஷெல் நிறுவனங்கள் வெளிநாட்டு உளவுத்துறையால் இயக்கப்படுகின்றன என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது’’ என்றும் யாதவ் கூறினார்.

மேலும், ``கைப்பற்றப்பட்ட மொபைல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் தடயவியல் ஆய்வு, முழு நெட்வொர்க்கையும் சதித் திட்டத்தையும் கண்டறியும் வகையில் நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு