Published:Updated:

எச்சரித்த உளவுத்துறை, கோட்டைவிட்டதா காவல்துறை? – சின்னசேலம் கலவரத்தின் பின்னணி என்ன?!

கலவரம் | தனியார் பள்ளி

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்புகளால் நடத்தப்பட்ட போராட்டம் காவல்துறைமீது கல் வீச்சு, பேருந்துகள் எரிப்பு என பெரும் கலவரத்தில் முடிந்திருக்கிறது.

எச்சரித்த உளவுத்துறை, கோட்டைவிட்டதா காவல்துறை? – சின்னசேலம் கலவரத்தின் பின்னணி என்ன?!

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்புகளால் நடத்தப்பட்ட போராட்டம் காவல்துறைமீது கல் வீச்சு, பேருந்துகள் எரிப்பு என பெரும் கலவரத்தில் முடிந்திருக்கிறது.

Published:Updated:
கலவரம் | தனியார் பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி காலை அந்த மாணவி பள்ளி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது. அதையடுத்து படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அழுத்தம் கொடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறிய கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வகுமார், மாணவி எழுதியதாக தற்கொலை கடிதம் ஒன்றையும் உறவினர்கள் முன் படித்துக் காட்டினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் கைதுசெய்ததாக தெரிவித்தது போலீஸ்.

உயிரிழந்த மாணவி
உயிரிழந்த மாணவி

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இதேபோல 6 மாணவிகள் மர்மமாக உயிரிழந்திருப்பதாக குற்றம்சுமத்திய மாணவியின் உறவினர்கள், அவரின் மரணத்துக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின்மீதும், ஆசிரியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மகள் கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் கூறி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கிடையில் மாணவியின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து அவர் தாய் செல்வி கேள்வி எழுப்பியிருந்தார். ``மூணாவது மாடியிலிருந்து விழுந்த புள்ளையோட முகம், கை, காலெல்லாம் நல்லா இருக்கும்போது சட்டைக்குள்ள மட்டும் எப்படி அவ்ளோ காயம் வரும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே அவ குதிச்சதா சொன்ன இடத்தில் ஒரு சொட்டு ரத்தம்கூட இல்லை” என்று அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து ’உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும்’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்த அவர் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதுடன், மாணவியின் மர்ம மரணத்தை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும்... உடலை மறு உடற்கூறாய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி நான்காவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தாவது நாளான இன்று காலை 9 மணிக்கு பள்ளி அமைந்திருக்கும் கனியாமூரில் ஒன்று கூடிய மாணவர் அமைப்புகள், மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்தில் பள்ளியை நோக்கி நகர ஆரம்பித்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தது போலீஸ்.

கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்
கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்

ஆனால் போலீஸாரின் எண்ணிக்கையைவிட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் போலீஸாரின் முயற்சி தொய்வை சந்தித்தது. அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து போலீஸார் நடத்திய தடியடியில் போராட்டக்காரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட, பதிலுக்கு போலீஸார்மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. அதில் டி.ஐ.ஜி பாண்டியன் உட்பட சுமார் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போராட்டக்கார்களை கட்டுப்படுத்த முடியாமல் அமைதியானார்கள் போலீஸார்கள். அந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்ட போராட்டக்காரர்கள், காவல்துறையினர் வந்த பேருந்தை அடித்து நொறுக்கினார்கள். அதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த பேருந்துகள், சாலை தடுப்புகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தார்கள்.

பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 8 பேருந்துகள் மற்றும் ஜே.சி.பி வாகனம் போன்றவை ஒரே நேரத்தில் தீ வைக்கப்பட்டதால் பல அடி தூரத்திற்கு எழுந்த கரும்புகை அந்த பகுதியை போர்க்களமாக மாற்றியது. அதையடுத்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதன் காரணமாகவும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியதன் காரணமாகவும் சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்குள் பள்ளி வளாகத்தில் பெரும்பகுதி சூறையாடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியிருக்கும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இன்று பிற்பகலிலிருந்து 31.07.2022 வரை 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்
கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்

இந்நிலையில் ஒரேநேரத்தில் 4,000 பேர் கூடியது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ‘மாணவிக்கு நீதி வேண்டும்’ என்று நேற்று ஒரு வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு, அதன் லிங்க் மற்ற வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டிருக்கிறது. காட்டுத் தீயாக பரவிய அந்த குழுவில் மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் என பலரும் இணைந்திருக்கின்றனர். அந்த குழுவில்தான் இன்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போகிறோம், அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதையடுத்துதான் நேற்று தமிழகத்தின் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் கள்ளக்குறிச்சியில் குவிந்திருக்கிறார்கள். உளவுப் பிரிவின் கண்காணிப்பு மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி 4,000 போராட்டக்காரர்கள் அங்கு குவிந்தது எப்படி என்பது குறித்து கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

காயமடைந்த போலீஸார்
காயமடைந்த போலீஸார்

பெயர் வேண்டாமென்று நம்மிடம் பேசிய அந்த அதிகாரி, “சம்பவம் நடந்த 13-ம் தேதியில் இருந்தே விழுப்புரம் மாவட்ட உளவுத்துறை எங்களை எச்சரித்துக் கொண்டேதான் இருந்தது. ஆனால் அதனை இங்கிருக்கும் அதிகாரிகள், மேலதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் மாணவியின் தாய் செல்வி, தன் மகளுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த வாருங்கள் என்று வாட்ஸ்அப் மூலம் அழைப்பு விடுத்தார். அதேபோல நேற்று திடீரென மாணவியின் பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இன்று (17.07.2022) பள்ளி முன்பு போராட்டம் நடைபெறவிருக்கிறது என்றும், அதற்கு அனைவரும் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதையடுத்து நேற்று மாலை உளவுத்துறை எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தது.

ஆனால் ஏனோ தெரியவில்லை எங்கள் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. எங்களிடம் போதுமான போலீஸ் பலம் இல்லை என்பது உண்மைதான் என்றாலும், இருப்பவர்களை முறையாக பயன்படுத்தியிருந்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம். அந்த பள்ளிக்கு வருவதற்கு ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. ஆனால் எங்கள் அனைவரையும் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையிலேயே குவித்து வைத்துவிட்டார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் கிராமங்களின் வழியாக வந்து பள்ளியை சூழ்ந்துவிட்டார்கள். அதேபோல அந்த போராட்டக்காரர்கள் அனைவரும் மாணவர்கள் இல்லை” என்றார் ஆதங்கத்துடன்.