கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக அந்தப் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டத்தில் சில அமைப்பினர் சேர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலர் அந்த தனியார் பள்ளியை அடித்து நொறுக்கி, அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும், அங்கு பாதுகாப்பிலிருந்த காவலர்கள் பலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது. மாணவியின் பெற்றோர்கள் சின்னசேலம் பகுதி காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும், கலவரத்தில் ஈடுபட்டதாக 300-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இந்தக் கலவரம் குறித்து விசாரணை நடத்த, சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் ஆறுபேர்கொண்ட ஒரு சிறப்புக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு, கலவரம் நடைபெற்ற இடத்தில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவுகளைக்கொண்டு கலவரக்காரர்களை அடையாளம் காணும். மேலும், வாட்ஸ்அப் குழு அமைத்து தவறான தகவல் பரப்பியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புலனாய்வுக்குழு, கலவரம் குறித்து யூடியூபில் பதிவிடப்பட்டிருக்கும் தவறான தகவல்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கும். சிறப்புப் புலனாய்வுக்குழு குறித்த நேரத்தில் விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.