Published:Updated:

தஞ்சை மாணவி தற்கொலை சம்பவம்: மதமாற்ற தடைச் சட்டத்தை அண்ணாமலை கையிலெடுத்ததன் பின்னணி என்ன?!

தஞ்சை மாணவி தற்கொலை சம்பவம்

இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் பா.ஜ.கவினர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் எனவும் உடனே நிர்வாகிகளை கைதுசெய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாணவி தற்கொலை சம்பவம்: மதமாற்ற தடைச் சட்டத்தை அண்ணாமலை கையிலெடுத்ததன் பின்னணி என்ன?!

இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் பா.ஜ.கவினர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் எனவும் உடனே நிர்வாகிகளை கைதுசெய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published:Updated:
தஞ்சை மாணவி தற்கொலை சம்பவம்

தஞ்சை அருகிலுள்ள மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம்செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க-வினர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் எனவும், உடனே நிர்வாகிகளைக் கைதுசெய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் பாஜகவினர்
போராட்டத்தில் பாஜகவினர்

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா, ``முதற்கட்ட விசாரணையில் மாணவியை மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக எந்தவொரு குற்றச்சாட்டும் கிடைக்கப்பெறவில்லை. மாணவி உயிரிழந்தது தொடர்பாக 305 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தரப்பில் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரிக்க உள்ளோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா
தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா

அதேசமயம், தற்போது வெளியாகியிருக்கும் மாணவி அளித்த மரண வாக்குமூலத்திலும் மதமாற்றம் என்ற சொல் இடம்பெறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ``பள்ளியின் ஆசிரியர் மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், மனமுடைந்த மாணவி விஷதிரவத்தை அருந்தி உயிரிழந்திருக்கிறார். மரணத்துக்கு முன்பு மாணவி பேசிய வீடியோ பதிவு மனதை பதறவைக்கும். ஆனால், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்துக்கு முன்பு மாணவி பேசிய வீடியோ பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது. எனவே, நடுநிலையான விசாரணை நடக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம்செய்தவர்கள் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என்றார். பின்னர் இறுதியாக, ``தமிழகத்திலும் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

மேலும் தனது ட்விட்டரில் மாணவி பேசிய வீடியோவைப் பகிர்ந்தும், எஸ்.பி. ரவளிப்பிரியாவின் செய்தியாளர் சந்திப்பை குறிப்பிட்டும், ``காவல்துறைக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

1. சிறுமியின் வீடியோகிராப் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. இது போலியானது என்ற முடிவுக்கு எஸ்பி வந்தாரா? ஆம் எனில், எப்படி?

2. பெற்றோர் மற்றும் அனைத்து நெருங்கிய உறவினர்களும் தெளிவான அறிக்கையை அளித்துள்ள நிலையில், எஸ்.பி மாணவியின் பெற்றோரை பொய்யர்கள் என்று குற்றம் சாட்டுகிறாரா?" எனக்கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாஜக அறிக்கை
பாஜக அறிக்கை

இந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்க, மாணவின் தற்கொலையை அரசியலாக்கி, தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இதுகுறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியிடம் பேசியபோது, ``மதமாற்றம் என்ற வார்த்தையை பா.ஜ.க தனது சுயலாபத்திற்காக பயன்படுத்துகிறது. தற்கொலை செய்துகொண்ட மாணவி எந்த இடத்திலும் தான் விஷம் அருந்தியதற்கு காரணம் மத மாற்றம்தான் என்று கூறவில்லை. மரண வாக்குமூலத்திலும் மதமாற்றம் என்ற சொல்லை மாணவி பயன்படுத்தவில்லை. காவல்துறை விசாரணையிலும் மதமாற்றம் காரணமில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், மாணவி பேசியிருக்கும் வீடியோவிலும் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசிரியர் மதம்மாறுகிறாயா என்று எங்களைக் கேட்டார்கள், நாங்கள் மாறவில்லை என்று சொல்லிவிட்டதாகக் கூறுகிறார். அன்றைக்கே அந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது.

ராஜீவ்காந்தி
ராஜீவ்காந்தி

ஆகவே, இப்போது நிகழ்ந்திருக்கும் சம்பவம் பள்ளி விடுதியின் நிர்வாகச் சிக்கல் காரணமாக ஏற்பட்ட ஒன்று. மாணவியை மன உலைச்சலுக்குத் தள்ளி தற்கொலைக்குத் தூண்டிய பள்ளி நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், இதற்கும் மதமாற்றத்திற்கும் சம்பந்தமில்லை" என்று கூறினார்.

உயிரிழந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது
உயிரிழந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது

மேலும், ``பா.ஜ.க இதை வேண்டுமென்றே சமூகப் பதற்றத்தை உண்டு பண்ணுவதற்காகவும், சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்துவதற்காகவும் இப்படி அற்பத்தனமான அரசியலை செய்துவருகிறது. ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையே சட்டத்திற்கு புறம்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய தவறு. மேலும், அண்ணாமலை சொல்வதுபோல, மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டுவர இது குஜராத்தோ, கர்நாடகாவோ இல்லை; இது தமிழ்நாடு! விரும்பிய மதங்களை தேர்வுசெய்வது அவரவர்களின் விருப்பம். வற்புறுத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்யும்பட்சத்தில், அதில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருந்தால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்போமே ஒழிய, மத அடிப்படையில் செய்யமாட்டோம்!" என தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, மாணவியின் தற்கொலைக்காக போராட்டம் நடத்திவரும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்திடம் பேசியபோது, ``தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர்களே, மாணவியின் மரணத்திற்கு காரணம் பள்ளி ஆசிரியர் மதமாறக்கூறியது என்றுதான் புகாரளித்திருக்கிறார்கள். இரண்டு ஆண்டுக்கு முன்புதானே மதமாறக்கோரி கேட்டார்கள் என்று சொன்னால் அது மட்டும் சரியா? அதைத்தொடர்ந்து தான் மாணவியை விடுமுறைக்கு வீட்டுக்கு அனுப்பாமல், விடுதியிலேயே வைத்து வேலைபார்க்க வைத்திருக்கிறார்கள். அந்த மாணவியை மட்டுமல்ல ஏற்கெனவே இதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவியும் நிர்வாகத்தின் மதமாற்ற துன்புறுத்தலால் இரண்டுமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இதுபோன்ற பள்ளி தொடர்பான பல விஷயங்கள் எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. அரசாங்கம் ஒரு குழு அமைத்து முறையாக பள்ளி நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும்" என்றார்.

 கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

மேலும், ``மாணவியிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் வாங்கியது ஜனவரி 16-ம் தேதி. அதற்கு மறுநாள் ஜனவரி 17-ம் தேதிதான் மாணவி மதமாற்றம் குறித்துபேசிய வீடியோ எடுக்கப்பட்டது. எனவே, மாணவி உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக, ​இதுகுறித்து விசாரணை நடத்திவரும் எஸ்.பி. ரவளிப்பிரியாமீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். எனவே, இந்த வழக்கை மாநில அரசாங்கம் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்!

சம்மந்தப்பட்ட பள்ளி
சம்மந்தப்பட்ட பள்ளி

தற்போது வார்டன் சகாய மேரியை மட்டும்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிஸ்டர் ராக்கிளின் மேரியையும் கைதுசெய்ய வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும். மாணவியின் சகோதரருக்கு அரசுவேலை கொடுக்கவேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தவிருக்கிறோம்! பா.ஜ.க அனைவருக்கும் பொதுவான கட்சிதான்; ஆனால் இதுபோன்ற மதமாற்ற வேலைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என பதிலளித்தார்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் மாணவியின் தற்கொலை சம்பவத்தை அரசியலாக்காமல் நேர்மையான முறையில் உரிய விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism