Published:Updated:

காவல்துறையினர் சித்ரவதை? உயிரிழந்த மாற்றுத்திறனாளி... சேலத்தில் பரபரப்பு!

பிரபாகரன் உடல் அடக்கம் செய்தபோது

விசாரணைக்கு என அழைத்துச் சென்று போலீஸார் அடித்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் சித்ரவதை? உயிரிழந்த மாற்றுத்திறனாளி... சேலத்தில் பரபரப்பு!

விசாரணைக்கு என அழைத்துச் சென்று போலீஸார் அடித்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பிரபாகரன் உடல் அடக்கம் செய்தபோது

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 20 பவுன் தங்க நகை திருடு போயுள்ளது. இதுசம்பந்தமான புகாரின் பேரில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தத் திருட்டு சம்பவத்தில் சேலம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் (45), அவருடைய மனைவி ஹம்சலா (32), அரூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன், நடராஜன், இவருடைய மனைவி லலிதா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உயிரிழந்த பிரபாகரன்
உயிரிழந்த பிரபாகரன்

அதனையடுத்து ஜனவரி 8-ம் தேதி மதியம் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவருடைய மனைவி ஹம்சலாவை சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதோடு, போலீஸ் குவார்டர்ஸில் வைத்து அடித்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திவிசாரித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு ஜனவரி 11-ம் தேதி பிரபாகரனை நாமக்கல் கிளைச் சிறையிலும், ஹம்சலாவை சேலம் சிறையிலும் அடைத்துள்ளனர். இந்த நிலையில், போலீஸ் தாக்குதலால் திடீரென பிரபாகரனுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட, அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருந்தபோதிலும் சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 12-ம் தேதி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்து போனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

விசாரணை என்ற பெயரில் போலீஸார் செய்த சித்ரவதையால்தான் பிரபாகரன் உயிரிழந்தார் என அவர் குடும்பத்தாரும், வி.சி.க மற்றும் சி.பி.எம்., கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் சேலம் கலெக்டர் அலுவலகம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் இறங்கினர். மேலும், பிரபாகரனின் சாவுக்குக் காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்ததோடு, இவை நிறைவேறும் வரை பிரபாகரனின் சடலத்தை வாங்க மாட்டோம் என உறுதியாக நின்றனர். இதையடுத்து சேந்தமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பூங்கொடி மற்றும் ஏட்டு குழந்தைவேலு ஆகியோரை ஜனவரி 15-ம் தேதி சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) நஜ்மல்ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன்பிறகே பிரபாகரனின் குடும்பத்தார் அவருடைய சடலத்தை பெற்றுக்கொண்டு ஜனவரி 16-ம் அடக்கம் செய்தனர்.

உயிரிழந்த பிரபாகரனின் மனைவி ஹம்சலா
உயிரிழந்த பிரபாகரனின் மனைவி ஹம்சலா

இதுகுறித்து உயிரிழந்த பிரபாகரனின் மனைவி ஹம்சலாவிடம் பேசினோம். ``விசாரணைக்குன்னு கூட்டிட்டு போய் நாங்க நகையை திருடிட்டோம்னு ஒத்துக்கச் சொல்லி அடிச்சி துன்புறுத்துனாங்க. என் கணவருக்கு 2 காலும் செயல்படாது. எந்த வேலையும் அவரால செய்ய முடியாது. 7 வருஷமா வீட்லயே படுத்த படுக்கையா செயல்படாம இருக்காரு. அப்படியிருக்க அவரை நகையை திருடிட்டார்ன்னு அடிச்சே இந்த போலீஸ்காரங்க கொன்னுட்டாங்க" என தலையில் அடித்துக்கொண்டு கதறியழுதார். இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட விவகாரம் பரபரப்பாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபாகரனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவருடைய குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism