Published:Updated:

மார்த்தாண்டம்: வீடு புகுந்து மிரட்டினார்களா எம்.எல்.ஏ-வின் மகன்கள்? சி.சி.டி.வி காட்சியால் பரபரப்பு!

சி.சி.டி.வி காட்சிகள்
சி.சி.டி.வி காட்சிகள்

'அவங்க குடும்பத்துக்குள்ள ஏதோ பிராப்ளம் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால ஏற்பட்ட மனத்தாங்கலில் உணர்ச்சிவசப்பட்டு எம்.எல்.ஏ பத்தி தவறா முகநூலில் பதிவு போட்டிருக்கிறார்போல' என்கிறார் இதுகுறித்து விசாரணை நடத்திய டி.எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியை சேர்ந்தவர் மேக்ளின் ஜவஹர். தி.மு.க கட்சியைச் சேர்ந்த இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பேராசிரியர் நியமனத்தில் பல்கலைகழக துணைவேந்தர் ஒருவருடன் இணைந்து, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எல்.எல்.ஏ பிரின்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பிரின்ஸ் எம்.எல்.ஏ-வின் மகன்களான டோனல் மற்றும் ரோனிஷ் ஆகியோர் அடியாட்களுடன் சிராயன்குழியிலுள்ள மேக்கிளின் வீட்டிற்கு சென்று ஆவேசமாக அவரை தேடியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் அங்கு இல்லாததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் மேக்ளின் ஜவஹர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் இதுகுறித்து மேக்ளின் ஜவஹரின் தாய் கில்டா ரேணுகா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ
பிரின்ஸ் எம்.எல்.ஏ

அந்த புகாரில், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் அவரது மொபைல் எண்ணில் இருந்து தனக்கு போன்செய்து மகனைப்பற்றி கூறி மிரட்டியதாகவும். அவரது மகன்கள் டோனல், ரோனிஸ் ஆகியோர் சிலருடன் வீட்டுக்கு வந்து மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேக்ளின் ஜவஹர் கூறுகையில், "நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் தகுதியுடையவர்களை நியமனம் செய்யாமல் துணை வேந்தர் ஒருவருடன் இணைந்து குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த முறைகேடு குறித்து எனது முகநூலில் வெளியிட்டதால் எம்.எல்.ஏ பிரின்ஸ் தனது மகன்களான டோனல் மற்றும் ரோனிஷ் அகியோரை அனுப்பி வீட்டிலிருந்த எனது தாயாரிடம் என் தலையை துண்டித்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன் மீது தவறு இருப்பதால்தான் பிரின்ஸ் எம்.எல்.ஏ என் மீது ஆத்திரத்தில் இதுபோன்று செயல்படுகிறார்" என்றார்.

மேக்ளின் ஜவஹர்
மேக்ளின் ஜவஹர்

இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸிடம் பேசினோம், "எனக்கு பல்கலைகழக துணை வேந்தர் யாரையும் தெரியாது. சிராயன்குழி பகுதியில்தான் என் வீடும் உள்ளது. எல்லாம் சொந்தகாரங்க. என்மகன்கள் அவரது வீட்டுக்கு சென்று வந்ததை கொலை மிரட்டல் என தவறாக கூறுகின்றனர். சொந்தத்துக்குள்ள சில பிரச்னைகள் இருக்கு. அதனால அதை மனதில் வைத்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து என்னைப்பற்றி தவறாக பதிவுகளை போடுகிறார். அவர் ஒரு சைக்கோ போன்று செயல்படுகிறார்" என்றார்.

இந்த புகார் பற்றி விசாரணை நடத்திய தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரனிடம் பேசினோம், "அவங்க ரெண்டுபேரும் சொந்தகாரங்க. பக்கத்து பக்கத்து வீடு. அவங்க குடும்பத்துக்குள்ள ஏதோ பிராப்ளம் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால ஏற்பட்ட மனத்தாங்கலில் உணர்ச்சிவசப்பட்டு எம்.எல்.ஏ பத்தி தவறா முகநூலில் பதிவு போட்டிருக்கிறார்போல. இந்த பிரச்னை பற்றி இரண்டு தரப்பிலும் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறாங்க. இப்ப ரெண்டு பேரும் சமாதானமா போயிட்டாங்க" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு