Published:Updated:

குடிநீர் கேட்டு ரகளை; முற்றிய வாக்குவாதம்! -அதிமுக ஊராட்சி தலைவரை பிளேடால் வெட்டிய திமுக நிர்வாகி

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி முருகன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மயில்சாமியின் கைகளிலும், முதுகிலும் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் மயில்சாமி (55). இவர் பித்தளைபட்டி ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த மயில்சாமி ஆத்தூர் தொகுதி கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், பித்தளைபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முருகன் (66) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் பகுதிக்குக் குடிநீர் வரவில்லை எனக் கூறி ஊராட்சிச் செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது முருகன் ஊராட்சிச் செயலாளரை அநாகரிகமாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் ஊராட்சி செயலாளர், தலைவரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, நேற்றைய தினம் ஊராட்சி மன்றத் தலைவர் மயில்சாமி வாக்கிங் சென்றுவிட்டுத் திரும்பியபோது, அவரை மறித்த முருகன் குடிநீர் பிரச்னை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பதிலுக்கு மயில்சாமியும் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி முருகன் தான் மறைத்து வைத்திருந்த ஆக்சா பிளேடை எடுத்து மயில்சாமியின் கைகளிலும், முதுகிலும் சரமாரியாக வெட்டியிருக்கிறார். மயில்சாமி கத்தி கூச்சலிட்டதை அடுத்து, முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றார். அதைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் மயில்சாமியை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மயில்சாமியை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாலுகா போலீஸார் முருகனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ``தி.மு.க-வைச் சேர்ந்த முருகனுக்கும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மயில்சாமிக்கும் முன்விரோதம் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், மதுப்பழக்கம் உள்ள முருகன், குடித்துவிட்டு அடிக்கடி சிறு சிறு தகராறுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஏற்கெனவே, அவர் மீது தாலுகா காவல்நிலையத்தில் கூட இரு வழக்குகள் இருக்கின்றன" என்றனர்.

திண்டுக்கல்: மதுபானம் வாங்குவதில் தகராறு; கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு