சேலம், மேட்டூர் நகராட்சியின் 14-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் திமுக-வைச் சேர்ந்த வெங்கடாஜலம். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இன்று மாலை மேட்டூர் நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெறவிருந்தது. நகராட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெங்கடாசலம் காரில் நகராட்சி வளாகத்திற்கு தன்னுடைய மனைவியுடன் வந்துள்ளார். காரைவிட்டு இறங்கியபோது மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது.

வெங்கடாஜலத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த கவுன்சிலர்களும் பொதுமக்களும் ஓடி வரவே... அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வெங்கடாஜலத்தை கொலைசெய்ய முயற்சி செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேட்டூர் பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் மேட்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயமடைந்த வெங்கடாஜலத்தை மேட்டூர் அரசு மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.