Published:Updated:

பயங்கரவாதிகளை டெல்லிக்கு அழைத்து செல்ல திட்டம்... காஷ்மீரில் கைதான டிஎஸ்பி தாவீந்தர் சிங் யார்?

டி.எஸ்.பி தாவீந்தர் சிங்
டி.எஸ்.பி தாவீந்தர் சிங்

ஜம்மு காஷ்மீரில் பணத்தாசையில் தீவிரவாதிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்த போலீஸ் டி.எஸ்.பி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு தன் வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதிய அப்சல் குரு,' நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட முகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாதியை ஜம்மு காஷ்மீர் சிறப்புப்படைப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பியாக இருந்த தாவீந்தர் சிங் என்னிடத்தில் டெல்லி அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். டெல்லியில் முகமதுவுக்கு நான் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்தும் கார் வாங்கியும் தந்தேன்'' என்று தெரிவித்திருந்தார். அப்சல் குருவின் கடிதம் குறித்து அவரின் வழக்கறிஞர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ஒரு புள்ளி கிடைத்தால் கோடு போட்டு விட வேண்டும்தானே.... ஆனால், அப்சல் குருவிடம் இருந்து தாவீந்தர் சிங் பற்றி கிடைத்த தகவல்களை ஜம்மு காஷ்மீர் காவல்துறை உதாசீனப்படுத்தியது. முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. இப்போதோ, அதே தாவீந்தர் சிங் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பிடிபட்டுள்ளார்.

தீவிரவாதிகள் தங்கியிருந்த டி.எஸ்.பி வீடு
தீவிரவாதிகள் தங்கியிருந்த டி.எஸ்.பி வீடு

கடந்த சனிக்கிழமை மாலை ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்கு ரகசிய அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் தீவிரவாதிகள் காரில் சென்று கொண்டிருப்பதாக தகவல் சொல்லப்பட்டது. போலீஸ் படை அலெர்ட் ஆனது. ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் காரை குல்காம் செக்போஸ்டில் பாதுகாப்பு படையினர் மடக்கினர். காரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தின் கமாண்டர் சையத் நவீத் முஸ்தாக் மற்றோரு தீவிரவாதி ரஃபீ ராதர் ஆகியோர் இருந்தனர். தீவிரவாதிகளுடன் இருந்த மற்றோருவரைக் கண்டதும் பாதுகாப்பு படையினருக்கு கடும் அதிர்ச்சி. போலீஸாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தவர் வேறு யாருமல்ல அப்சல் குரு தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அதே தாவீந்தர் சிங்தான். பிடிபட்ட தீவிரவாதிகள் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருப்பவர்கள். 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவர்கள். உடனடியாக அனைவரையும் கைது செய்த பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானக்கடத்தல் தடுப்பு பிரிவில் டி.எஸ்.பியாக இருந்து வரும் தாவீந்தர் சிங், கடந்த ஆண்டு வீரதீரச் செயலுக்காக ஜம்மு காஷ்மீர் அரசிடத்தில் இருந்து விருது பெற்றவர். பணத்தாசை தாவீந்தர் சிங்கின் கண்ணை மறைக்கவே, தீவிரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு பணம் பெற்று வந்துள்ளார். ஸ்ரீநகரில் இந்திரா நகர் பகுதியில் படாமிபாக் கன்டோன்ட்மென்ட் பகுதியில் முக்கிய ராணுவ அதிகாரிகள் வசிக்கும் பகுதியில்தான் இவரின் வீடும் உள்ளது. தன் வீட்டிலேயே இரு தீவிரவாதிகளை தங்க வைத்திருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜம்மு வழியாக, தீவிரவாதிகளை டெல்லிக்கு அனுப்பத் திட்டமிட்டார். டி.எஸ்.பி வீட்டில் இருந்துத அந்த கார் புறப்பட்டு ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்த போதுதான் பாதுகாப்பு படையினரிடத்தில் தாவீந்தர்சிங் பிடிபட்டுள்ளார். தீவிரவாதிகளை ஜம்மு கொண்டு செல்வதற்காக, ரூ.12 லட்சம் வரை பேரம் பேசியுள்ளார் தாவீந்தர் சிங்.

`அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!'- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை போராடிய இன்ஸ்பெக்டர்

சமீபத்தில், புல்வாமாவில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில், 40 துணை ராணுவப் படையினர் பலியாகினர். அப்போது, புல்வாமா பகுதிக்கும் இவர்தான் டி.எஸ்.பி. இதனால், புல்வாமா தாக்குதலுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை 15 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தனர். அவர்களை வரவேற்ற குழுவிலும் தாவீந்தர் சிங் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜயகுமார் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த சம்பவம் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் தாவீந்தர் சிங்கிடத்தில் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஜம்மு போலீஸில் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் தாவீந்தர் சிங். 1990-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சிறப்புப் படையில் சேர்ந்த தாவீந்தர் சிங், தீவிரவாதிகளுடன் உக்கிரமாக போரிட்டவர். ஒரு முறை தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட போது காலில் கூட குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் டிராஃபிக் போலீஸ் துறைக்கு மாற்றப்பட்டார்.

ஸ்ரீநகருக்கு வந்த வெளிநாட்டு பார்வையாளர்களை வரவேற்ற  டி.எஸ்.பி
ஸ்ரீநகருக்கு வந்த வெளிநாட்டு பார்வையாளர்களை வரவேற்ற டி.எஸ்.பி
`தீவிரவாதியை ட்ரேஸ் செய்த போலீஸ்... சிக்கிய டி.எஸ்.பி!' - காஷ்மீர் காவல்துறை அதிர்ச்சி

தற்போது 57 வயதான தாவீந்தர் சிங், கடந்த சில வாரங்களாக சோபியான் மாவட்ட எஸ்.பி சந்தீப் சௌத்ரியின் நேரடி கண்காணிப்பில் இருந்தார். இவரின், போன் அழைப்புகளும் எஸ்.பியால் பதியப்பட்டு வந்தன. தற்போது, ஜம்மு காஷ்மீர் போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தாவீந்தர் சிங்கின் வீட்டில் இருந்து மூன்று ஏ.கே 47 துப்பாக்கிகளும் 5 ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு