Published:Updated:

`கட்டுக்கட்டாகப் பணம், 100 கிலோ ஆப்பிள் குவியல்!’ -மின்வாரிய அதிகாரியைச் சிக்கவைத்த புத்தாண்டு பரிசு

லஞ்சமாகப் பரிசு பொருள்களை வாங்கிக் குவித்த, வேலூர் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் கையும் களவுமாகச் சிக்கினார்.

வேலூர் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் நந்தகோபால்
வேலூர் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் நந்தகோபால்

தமிழ்நாடு மின்வாரியத்தில், வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராக நந்தகோபால் என்பவர் உள்ளார். இவரின் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதற்கான தலைமை அலுவலகம், வேலூரை அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ளது.

மின்வாரிய ஆய்வு மாளிகை
மின்வாரிய ஆய்வு மாளிகை

இந்தநிலையில், தலைமைப் பொறியாளர் நந்தகோபால் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனக்குக்கீழ் நிலையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி நகை, பணத்தைப் பரிசு பொருள்களாகப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி, பிரியா உட்பட 9 பேர் அடங்கிய குழுவினர் காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நேற்று மாலை 5 மணியளவில் அதிரடியாக நுழைந்தனர்.

அனைத்துக் கதவுகளையும் அடைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். மாளிகையின் உள்ளே கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சாக்கன் உட்பட 7 அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதனால், நடுநடுங்கிப் போன அவர்கள், பரிசுப் பொருள்களை அலுவலர்களிடமிருந்து வசூலித்து நந்தகோபாலிடம் கொடுக்க வந்திருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

நந்தகோபால்
நந்தகோபால்

மாளிகை முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 48 கிராம் தங்க நாணயங்கள், ரூ.1,53,000 ரொக்கப் பணம், வெள்ளி டம்ளர்கள், குங்குமச் சிமிழ், பண்டல் பண்டல்களாகப் புது ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. பரிசுப் பொருள்களை லஞ்சமாக வாங்கிக் குவித்த மண்டல தலைமைப் பொறியாளர் நந்தகோபால் மற்றும் பரிசுப் பொருள்களை வசூலித்துக் கொடுக்க வந்த அதிகாரிகள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே ஆண்டில் சிக்கிய 2 உயர் அதிகாரிகள்! - அதிரடி காட்டிய வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை

ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். `மண்டல தலைமைப் பொறியாளர் நந்தகோபால் மின்வாரியத்துக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் வைத்தே பொருள்களை லஞ்சமாக வாங்கியிருக்கிறார். 11 தங்க நாணயங்கள், 64 கிராம் வெள்ளி, பணம், சால்வை, பேன்ட் போன்றவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தன் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கோட்டப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆகியோர் மூலம் பரிசுப் பொருள்களை வசூலித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சாக்கன்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சாக்கன்

100 கிலோவுக்கு மேல் ஆப்பிள்களும் குவித்துவைக்கப்பட்டிருந்தன. அது, கெட்டுப்போகக் கூடிய பொருள் என்பதால் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. புத்தாண்டையொட்டி, கட்டாயப்படுத்தி பரிசுப் பொருள்கள் கேட்பதாக வந்த புகாரின் பேரில்தான் ரகசியமாகக் கண்காணித்து சோதனை நடத்தினோம்.

நந்தகோபால் உட்பட மேலும் சில அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும். தலைமைப் பொறியாளர் பதவியில் உள்ள நந்தகோபால் இன்னும் 7 மாதங்களில் பணி ஓய்வுபெறுகிறார். அதனால்தான், லஞ்சம் வாங்கிக் குவிக்க முடிவுசெய்துள்ளார்’ என்றனர்.