நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த ஆண்டு, ஜூலை மாதம் மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பணத்துக்குக் கஷ்டப்பட்ட சிறிய நடிகைகளைப் பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்தது தொடர்பாக கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் ஐந்து பேரை மும்பை போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள் மும்பை மலாடு மத் தீவிலுள்ள பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் ஆபாச வீடியோ எடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஒரு முறை அவ்வாறு வீடியோ எடுத்தபோது போலீஸார் அதிரடி சோதனை நடத்தி கைதுசெய்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு, ஜூலை 20-ம் தேதி ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டார்.

அவர் ஆபாச வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்து, அங்கிருந்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்துவந்தது விசாரணையில் தெரியவந்தது. வீடியோவை ஹாட்ஷாட் என்ற மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்ய உதவியதாக ராஜ் குந்ராவின் ஐடி பிரிவு தலைவர் ரேயான் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் ராஜ் குந்த்ரா பிரிட்டன் நிறுவனத்துக்கு வீடியோ எடுத்துக் கொடுத்த நிறுவனத்தை அவரின் மைத்துனர்தான் நடத்திவந்தார் என்றும் தெரியவந்தது.
அந்த நிறுவனத்தை ராஜ் குந்த்ராதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக மும்பை போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனன. ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தொடர்பாக வெளிநாடுகளுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரித்துவருகிறது.
