Published:Updated:

`ஒழுங்கா இரு; இல்லன்னா உன் மகனை உயிரோடு பார்க்க முடியாது!'- மிரட்டிய ஓனர்; தவிக்கும் தந்தை

``ராஜஸ்தான்ல இருந்து உங்க பையன் ரயில்ல வந்துக்கிட்டு இருக்கான். இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்துடுவான்னு சொன்னாங்க. ஏழு மாசமாச்சு இன்னும் என் பையன் வீடு வந்து சேரலை.''

மாயமான நாகராஜ்
மாயமான நாகராஜ்

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், சண்முகம். விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு காலில் முள் ஏறி, அது விஷமாகியிருக்கிறது. இதனால், பாதி காலை அறுவைசிகிச்சை செய்து அகற்றியிருக்கின்றனர். அப்போதிலிருந்தே சண்முகத்தால் வேலைக்குச் செல்ல முடியாமல் போக, மகன்களின் வருமானம்தான் குடும்பத்தின் பசியைப் போக்கியிருக்கிறது. ஒருகட்டத்தில், மூத்த மகன் திருமணமாகிச் சென்றுவிட, இளையமகன் நாகராஜ் தான் குடும்பத்திற்கு அச்சாணியாய் இருந்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்; இன்ஜினீயரிங் மாணவியுடன் திருமணம்- 7வது நாளில் நடந்த சோகம்

உள்ளூரில், விவசாயக் கூலி வேலை இல்லாமல் போக, நாகராஜ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர்வெல் தொடர்பான வேலைக்காக வட மாநிலத்துக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். வேலைக்குச் சென்றதோடு சரி, நாகராஜிடம் இருந்து வீட்டுக்குப் பணமும் வரவில்லை, வேலைக்குப் போன நாகராஜும் வீடு வந்து சேரவில்லை.

‘வேலைக்கு அழைத்துச்சென்ற போர்வெல் வண்டியின் உரிமையாளர், என் மகனைப் பற்றி எந்தத் தகவலும் சொல்ல மாட்டேங்குறாரு. என் புள்ளை எங்க இருக்கான்னு கண்டுபுடிச்சிக் கொடுங்கய்யா!’ என ஒற்றைக் காலுடன் தள்ளாடியபடி, முதியவர் சண்முகம் தன் மகனுக்காக ஈரோடு கலெக்டரிடம் மனு அளிக்க வந்தது, பார்ப்போரைக் கலங்க வைத்தது.

மனு அளிக்க வந்த பெரியவர் சண்முகம்
மனு அளிக்க வந்த பெரியவர் சண்முகம்

சண்முகத்திடம் பேசினோம். “ கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நம்பியூர் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் போர்வெல் வண்டிக்கு என் மகன் நாகராஜ் வேலைக்குப் போனாங்க. 2019-பிப்ரவரியில் ஃபோன் செஞ்ச பையன், ‘முதலாளி எனக்கு 6 மாச சம்பளத்தைத் தராம இழுத்தடிக்கிறாரு. எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அவர்கிட்ட சம்பளக் காசை வாங்கிக்கிட்டு, ஊருக்கு வர்றேன்'னு சொல்லி வருத்தப்பட்டான். முதலாளி சம்பத்தும் என்கிட்ட ஃபோன்ல பேசினார். ‘ இன்னும் ரெண்டு வாரத்துல நான் ஊருக்கு வர்றப்ப, உன் பையனை கூட்டிட்டு வர்றேன். கவலைப்படாதீங்க, சம்பளத்தையும் செட்டில் பண்ணிடலாம்’னு சொன்னாருங்க.

ஆனா, வட நாட்டுல இருந்து போர் வண்டியும் வந்துருச்சி, ஓனர் உட்பட வேலைக்குப் போன எல்லா ஆளுங்களும் வந்துட்டாங்க. ஆனா, என் பையன் நாகராஜை மட்டும் காணலை. ஓனர்கிட்ட கேட்டதற்கு, ‘அவன் ரயில்ல வந்துக்கிட்டு இருக்கான். ஒரு வாரத்துல வீட்டுக்கு வந்துடுவான். கைச்செலவுக்கு, உனக்கு இந்தப் பணத்தை உம்மவன் கொடுக்கச் சொன்னான்னு 5 ஆயிரத்தை எடுத்து நீட்டினார். அஞ்சு நாள்ல வந்துடுவான்னு சொன்னாங்க. ஆனா, ஏழு மாசமாச்சு, இன்னும் காணலை. நான் ஓனர்கிட்ட போய் போலீஸ்ல புகார் கொடுக்கட்டுமான்னு கேட்டதுக்கு, ‘ஒழுங்கா இருந்தின்னா உன் பையன் ராஜஸ்தான்ல இருந்து உயிரோட வருவான். இல்லைன்னா, என்னைக்குமே உன் பையனை நீ பார்க்க முடியாதுன்னு’ மிரட்டினார்.

மாயமான நாகராஜ்
மாயமான நாகராஜ்

ஒருகட்டத்தில், ‘உன் மகன் எங்க இருக்கான்னு எங்களுக்கும் தெரியலை. நாங்களும் போஸ்டர் ஒட்டி தேடிக்கிட்டு இருக்கோம். ராஜஸ்தான்ல எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் உன் பையன் படத்தைக் கொடுத்திருக்கோம். கண்டுபுடிச்சிடுவாங்க’ என இந்தியில என் பையன் படம் போட்ட நோட்டீஸைக் கொடுத்தாரு. நீயும் தேடு, நானும் தேடுறேன்னு அசால்ட்டா சொல்லுறாரு. எனக்கு என்னமோ என் பையனை ஏதோ செஞ்சிருப்பாங்கன்னு தோணுதுய்யா. உயிரோட இருந்திருந்தான்னா, இந்நேரம் எனக்கு போன் பண்ணியிருப்பான். இல்லைனா, வீடு வந்து சேர்ந்திருப்பான். தயவுசெஞ்சு எம்மவன் எங்க இருக்கான்னு தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுங்கய்யா’ எனக் கண்ணீர்விட்டு கதறியழுதார் சண்முகம்.