பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சேத்தன் சிங் ஜுரமஜ்ரா, அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை படுக்கைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக்கண்டு கோபமடைந்த அவர், ``ஏன் மெத்தைகள் இவ்வளவு அழுக்காக இருக்கின்றன?" என பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூரிடம் கேள்வி எழுப்பினார்.
``இது மாதிரி அழுக்கான மெத்தைகளில் நோயாளிகள் எப்படி படுப்பார்கள்" என துணைவேந்தரிடம் ஆத்திரமாக கேட்டதுடன், அவரைக் கட்டாயப்படுத்தி நோயாளிகள் மெத்தையில் படுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
அமைச்சரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு இந்திய ஆர்த்தோ சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், துணைவேந்தர் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று முதல்வரிடம் அளித்தார். இவர் நாட்டின் தலைசிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் ஆவார். இந்தச் சம்பவத்தில் சுகாதாரத்துறை அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் பர்கத் சிங் தனது ட்விட்டர் பதிவில், ``இது மாதிரியான நடத்தை பஞ்சாப்பின் மருத்துவ ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்கும் . மருத்துவ வல்லுநர்களில் ஒருவரை பகிரங்கமாக அவமானப்படுத்தியதற்காக பகவந்த் மான், சுகாதார அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
