Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவா..? - மீனவர் சங்கத்தின் போலி லெட்டர் பேடால் கிளம்பிய சர்ச்சை!

தூத்துக்குடி வடபாகம் மீனவர்கள்

`ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என தூத்துக்குடி, வடபாகம் மீனவர் சங்கத்தின் லெட்டர் பேடில் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதம் சமூக வலைதளங்களில் வைராகிவருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவா..? - மீனவர் சங்கத்தின் போலி லெட்டர் பேடால் கிளம்பிய சர்ச்சை!

`ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என தூத்துக்குடி, வடபாகம் மீனவர் சங்கத்தின் லெட்டர் பேடில் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதம் சமூக வலைதளங்களில் வைராகிவருகிறது.

Published:Updated:
தூத்துக்குடி வடபாகம் மீனவர்கள்

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போரட்டத்தின் 100-வது நாளில் ஏற்பட்ட கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலை, தமிழ்நாடு அரசால் சீல் வைத்து மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், ஆலையைத் திறக்க வேண்டும் என ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை திறக்கக் கூடாது என போராட்டக்காரர்களும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்துவருகின்றனர்.

வைரலாகும் போலி லெட்டர் பேடு - ஒரிஜினல் லெட்டர் பேடு
வைரலாகும் போலி லெட்டர் பேடு - ஒரிஜினல் லெட்டர் பேடு

சில தொழில் அமைப்புகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், `ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என தூத்துக்குடி, வடபாகம் மீனவர் சங்கத்தின் லெட்டர் பேடில் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் சமூக வலைதளங்களில் வைராகிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 18.7.22 தேதியிட்ட வடபாகம் நாட்டுப்படகு மீனவர் பொதுப் பஞ்சாயத்தார் என்ற தலைப்பிலான அந்த லெட்டர் பேடில், ``கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் தொழில் மீன்பிடித்தலைச் சார்ந்தது. எங்கள் சங்கத்தில் 400 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது பற்றி எங்களுடைய கருத்துகளை தங்களிடம் பதிவுசெய்ய விரும்புகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் போட்டத்தைத் தூண்டியவர்களின் பேச்சைக் கேட்டு எங்கள் அறியாமையால் மூளைச்சலவை செய்து, எங்களை சிலர் போராட்டத்தில் ஈடுபடவைத்தனர். தற்போது ஆலை நான்குல் ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

கேன்சர், கழிவுநீர் கடலில் கலத்தல், மழையளவு குறைதல், தண்ணீர்த் தட்டுப்பாடு, ஊனமுற்ற குழந்தை பிறப்பு உள்ளிட்ட எல்லாவிதமான நோய்களைச் சொல்லி ஸ்டெர்லைட் நிறுவனத்தின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி எங்களை நம்பவைத்தனர். தற்போது எங்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த ஆலைக்கும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை, பல்வேறு ஆதாரபூர்வமான கருத்துகளைச் செய்தித்தாள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டோம்.

இதனால், நாங்கள் அறிவது என்னவென்றால், சுமாராக 34,000 குடும்பங்கள் தூத்துக்குடியிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குப் பிழைப்பைத் தேடிச் சென்றுவிட்டன. துத்துக்குடியில் இதை நம்பியிருந்த சிறு, குறு தொழில் மற்றும் வியாபாரிகள் தொழிலை இழந்து தங்கள் வாழ்வாதாரம் பெரிய கேள்விக்குறியாக வறுமையில் வாடுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டு அதில் சங்கத்தின் சீல் வைக்கப்பட்டு கையெழுத்தும் இடப்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற பொருள் அடங்கிய முதலமைச்சருக்கு மனு செய்த லெட்டர் பேடு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், அந்த லெட்டர் பேடு போலியாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

``எங்கள் சங்கத்தின் பேரில் போலியான லெட்டர் பேடு தயாரிக்கப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. போலி லெட்டர் பேடு தயாரித்து மீனவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பது போன்ற சர்ச்சையைக் கிளப்பியவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வடபாகம் நாட்டுப்படகு மீனவர் பொதுப் பஞ்சாயத்தார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். மேலும், பிடிக்கப்பட்ட மீன்களை படகிலிருந்து ஏலக்கூடத்துக்கு இறக்காமல், இன்று காலை திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டுப்படகு  மீனவர்கள்
நாட்டுப்படகு மீனவர்கள்

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு மீனவர் பொது பஞ்சாயத்தார் சங்கத்தின் தலைவர் ராபர்ட்டிடம் பேசினோம். ``தூத்துக்குடி வடபாகம் மீனவர் பஞ்சாயத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதவராக இருப்பதாக எங்கள் சங்கத்தின் லெட்டர் பேடில் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திட்டு முதலமைச்சருக்கு அனுப்பியதாக ஒரு லெட்டர் பேடு நகல் உலவிவருகிறது. அந்த லெட்டர் பேடு நகலில் குறிப்பிடப்பட்ட 25, 26-வது வரிசை எண்கள் கொண்ட எங்கள் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் திருமணத்துக்காக சங்கத்தின் ஒரிஜினல் லெட்டர் பேடு தாளில், திருப்பத்தூர் ஜமாத் தலைவருக்குக் கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் அதே வரிசை எண் குறிப்பிடப்பட்ட லெட்டர் பேடில் எப்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகக் கடிதம் அனுப்பியிருக்க முடியும்... எங்கள் சங்கத்தின் லெட்டர் பேடு போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. போலியாக லெட்டர் பேடு அடித்தவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், எஸ்.பி-யிடம் மனு அளிக்கவிருக்கிறோம். ஸ்டெர்லைட்டை அன்றும் எதிர்த்தோம், இன்றும் எதிர்கிறோம், நாளையும் எதிர்ப்போம். எந்தக் காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இதனையடுத்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகே மீனவர்கள் படகிலிருந்து மீன்களை இறக்கி ஏலமிட்டனர்.