Published:Updated:

விவசாய சங்கத் தலைவரை இழுத்துச் சென்று கைதுசெய்த போலீஸ்! - ஸ்டாலினுடன் நடந்த சந்திப்பு காரணமா?

விவசாய சங்கத் தலைவரை அடித்து இழுத்துச் செல்லும் போலீஸார்
விவசாய சங்கத் தலைவரை அடித்து இழுத்துச் செல்லும் போலீஸார்

தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வந்த பிறகு இவரை போலீஸார் இப்படிக் கைதுசெய்கிறார்கள் என்றால், இதன் பின்னணியில் ஆளுங்கட்சி இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு பல்வேறு கிராமப் பகுதிகளில் இடங்களைத் தேர்வுசெய்தனர் அதிகாரிகள். இந்தநிலையில், வீரானந்தபுரம் கிராமத்தில் வீடுகளை இடிப்பதற்கு வந்த அதிகாரிகளையும், பொக்லைன் எந்திரத்தையும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தடுத்து நிறுத்தியதோடு, கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும், எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

விவசாய சங்கத் தலைவர்கள் ஸ்டாலின் சந்திப்பு
விவசாய சங்கத் தலைவர்கள் ஸ்டாலின் சந்திப்பு

இதைத் தொடர்ந்து ஆலோசனை செய்த அதிகாரிகள், கால அவகாசம் வழங்க முடியாது எனத் தெரிவித்து, அருகேயுள்ள இடங்களை பொக்லைன் இயந்திரம்கொண்டு இடிக்கும் பணியைத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தினர்.

விவசாய சங்கத் தலைவரை அடித்து இழுத்துச் செல்லும் போலீஸார்
விவசாய சங்கத் தலைவரை அடித்து இழுத்துச் செல்லும் போலீஸார்

அப்போது காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன், போலீஸாரால் இழுத்துச் செல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டார். விவசாய சங்கத் தலைவர் போலீஸாரால், தாக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எத்தனையோ போராட்டங்களில் கலந்துகொண்டவரை போலீஸார் இப்படிக் கைதுசெய்ததில்லை. ஆனால், இப்போது கைதுசெய்திருப்பதில் அரசியல் உள்விவகாரம் இருக்குமோ என்று யோசிக்கவைப்பதாகக் கூறுகிறார்கள் பொதுமக்கள்.

என்ன நடந்தது என்று பொதுமக்கள் தரப்பில் பேசியபோது, "விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நடக்கும் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கக் கூடிய மனிதர். மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து அடிக்கடி போராட்டம் நடத்துவதால், இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு இவரைக் கண்டாலே பிடிக்காது.

ஸ்டாலின் விவசாயிகள்
ஸ்டாலின் விவசாயிகள்

இவரைப் பார்த்தாலே விரோதியைப்பார்பதுபோல் பார்ப்பார். இது போன்ற விவகாரத்தை மனதில் வைத்துக்கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் எப்படியாவது சிறையில் வைக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸாரை இளங்கீரன் அடித்துவிட்டார் என்று பொய்யான காரணத்தைச் சொல்லி இவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப் போட்டுள்ளார் ஆய்வாளர் ராஜா. இன்ஸ்பெக்டருக்கு இருக்கும் சொந்த பிரச்னைக்காகப் பொதுவெளியில் விவசாயச் சங்கத் தலைவரை அடித்து ஜீப்பில் ஏற்றுவது மனிதாபிமானமற்ற செயல்.

இளங்கீரன்
இளங்கீரன்

`தி.மு.க ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஆகும்' என்று தேர்தல் பரப்புரை மேற்கொண் வந்தார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறார். இதன் விளைவாக தி.மு.க தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் கடந்த 10-ம்தேதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி கூறியிருக்கிறார்.

இளங்கீரன் எத்தனையோ போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் இவரைக் கைதுசெய்யாமல், தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வந்தது பின்பு இவரை அடித்து இழுத்து போலீஸார் கைதுசெய்கிறது என்றால், இதன் பின்னணியில் ஆளுங்கட்சி இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது. மக்கள் பிரச்னைக்காக வீதியில் இறங்கும் விவசாய சங்கத் தலைவருக்கே இந்த நிலைமையா?" என்று ஆதங்கப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி, `காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்காகப் போராடிவருபவர். ஒரு பொது நோக்கத்துக்காக அவர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பரிந்து பேசும்போது காட்டுமன்னார்கோவில் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவர், ஒரு விவசாய சங்கத் தலைவர், ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர், பொதுநோக்கத்துக்காகச் சென்றவரை காவல்துறை அதிகாரிகள் கைநீட்டி அடிப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தத் தவறான செயலை உடனடியாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அந்தப் பகுதி விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாகப் போராடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசினோம். ``இந்தப் பகுதியில் விவசாய சங்கம் என்ற போர்வையில் இவர் ரெளடித்தனம் செய்துகொண்டிருக்கிறார். அரசு உத்தரவு மற்றும் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொண்டிருக்கும்போது, இவருக்குச் சம்பந்தமே இல்லாமல் அந்த இடத்துக்கு வந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து ஜே.சி.பி மற்றும் டிராக்டர் இயந்திரங்கள் மீது ஏறி அதிகாரிகளிடம் பிரச்னையில் ஈடுபட்டார். இதைத் தடுக்கச் சென்ற போலீஸாரை இவர்தான் முதலில் அடித்தது. அதன் பிறகுதான் இவர் அட்ராசிட்டி தாங்க முடியாமல் இவரைக் கைதுசெய்தோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு