Published:Updated:

`எனக்கு உரிமையான மதிப்பெண்ணை பெற்றே தீருவேன் என்றாள்!’- மாணவி ஃபாத்திமாவின் தந்தை கண்ணீர்

மதிப்பெண் குறைந்ததால் என் மகள் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் தகவல் சொன்னார்கள். லாஜிக் தேர்வில் 13 மதிப்பெண் பெற்று என் மகள் முதலிடம் பிடித்திருக்கிறாள்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

சென்னை ஐ.ஐ.டி-யில் கடந்த 9-ம் தேதி மரணமடைந்த ஃபாத்திமாவின் மரணம் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மொபைலில் இருந்து முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அது தன்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப். இதுகுறித்து அவர் கூறுகையில்,``ஐ.ஐ.டி-யில் ஹிமாட்டீஸ் படித்து முதல் தரத்தில் வெற்றிபெற வேண்டும் என்று எட்டாம் வகுப்பு முதல் என் மகள் ஆசைப்பட்டாள். அதுபற்றி என்னிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். ஐ.ஐ.டி-யில் நடந்த நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றாள். முதல் மாதம் நடந்த க்விஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாள். ஐ.ஐ.டி-யில் ஆயிக்கணக்கான மாணவ, மாணவிகள் அதில் கலந்துகொண்டனர். ஐ.ஐ.டி-யில் சேர்ந்து ஒரே மாதம் ஆன நிலையில் அந்த க்விஸ் போட்டியில் மூன்றாம் ரேங்கில் வெற்றிபெற்று சாதனை படைத்தார். எல்லா மாதம் நடந்த செமினார்களில் என் மகள் முதலிடம் பெற்று வந்தாள்.

முதல்வரிடம் மனு கொடுக்கும் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்
முதல்வரிடம் மனு கொடுக்கும் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்

மதிப்பெண் குறைந்ததால் என் மகள் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் தகவல் சொன்னார்கள். லாஜிக் தேர்வில் 13 மதிப்பெண் பெற்று என் மகள் முதலிடம் பிடித்திருக்கிறாள். இரண்டாவது இடம் பிடித்தவர் 11 மதிப்பெணும், மூன்றாவது இடம் பிடித்தவர் 9 மதிப்பெண்ணும்தான் எடுத்திருந்தார். அப்படியானால் மதிப்பெண் குறைவு என்று எப்படிச் சொல்ல முடியும். 13 மதிப்பெண் எடுத்த பிறகு எனக்கு போன் செய்து எனக்கு 13 மதிப்பெண் கிடைத்துள்ளது, அதுவே டாப்தான். ஆனால், எனக்கு 18 மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும். எனவே, நான் அப்பீலுக்குப் போகிறேன் என்றாள். அப்பீலுக்குச் செல்லவேண்டாம் என நான் கூறினேன். இணையதளத்தில் விடைகளை சரிபார்த்தபோது நான் எழுதிய விடை சரியானது என தெரியவந்துள்ளது. எனவே, எனக்கு உரிமையான மதிப்பெண்ணை நான் பெற்றே தீருவேன் என்றாள். அப்போது எனக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது.

ஐந்து நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் என்னை அழைத்து அப்பீல் செய்ததாகவும், ஹெச்.ஓ.டி அழைத்து டிப்பார்ட்மெண்டை தொடர்புகொள்ளுமாறும் சொன்னார்கள் என்றாள். சுதர்சன் பத்பநாபன்தான் ஐந்து மதிப்பெண் வழங்க வேண்டியவர். சுதர்சன் பத்பநாபனை தொடர்புகொண்டிருப்பாள். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஃபாத்திமா மிகவும் பயப்பட்டாள். என் மகள் மார்க் ஷீட் வாங்கப் போகவில்லை. அவளது கிளாசில் உள்ள ஒரு பெண்தான் மதிப்பெண் பட்டியல் வாங்கியிருக்கிறாள். தூக்கில் தொங்கியபடி இருந்த ஃபாத்திமாவின் கால் முட்டிகள் தரையில் தொட்டபடி இருந்துள்ளன.

அப்துல் லத்தீப்
அப்துல் லத்தீப்

பின்னர் கயிற்றை அறுத்து மகளைக் கிடத்தியுள்ளனர். என் மகள் கொல்லப்பட்டாள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். சுதர்சன் பத்பநாபன் என் மகளின் மரணத்துக்கு காரணம் என நான் உறுதியாகக் கூறுகிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டனை வாங்கிக்கொடுப்பேன். எனது சொத்து முழுவதும் விற்று சுப்ரீம் கோர்ட் வரை சென்றாவது என் மகள் மரணத்துக்கு காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுப்பேன். அதன்பிறகு நான் செத்துப்போனாலும் எனக்குக் கவலை இல்லை” என்றார் வேதனை நிறைந்த கண்களுடன்!