Published:Updated:

திரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம்! - அதிலும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்?

திரிபுரா மாநிலம் 1972-ம் ஆண்டு உருவானது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் ஒரு பாலம்கூடக் கட்டப்படவில்லை.

திரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம்
திரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம்

`ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் பரிதாபத்துக்குரியவை. அதில், திரிபுராவின் நிலையோ இன்னும் மோசம். திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பி.எம்.டபிள்யூ போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு நல்ல சாலை வசதி கிடையாது. கடந்த ஒலிம்பிக் போட்டியில், ஜிம்னாஸ்டிக் பிரிவில் 4-வது இடத்தைப் பிடித்த தீபா கம்ராகர் திரிபுரா தலைநகர் அகர்தலாவைச் சேர்ந்தவர். இவரின் சாதனையைப் பாராட்டி, பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது.

பி.எம்.டபிள்யூ காருடன் தீபா
பி.எம்.டபிள்யூ காருடன் தீபா

`இந்தக் காரை ஓட்ட எங்க ஊரில் சாலை வசதி கிடையாது. வேறு மாற்றித் தாருங்கள்' என்று கார் வழங்கியவர்களிடத்தில் சொல்லக்கூடிய நிலைக்குத் தீபா தள்ளப்பட்டார். பின்னர், தீபா கம்ராகருக்கு வேறு கார் மாற்றிக் கொடுக்கப்பட்டது. தலைநகர் அகர்தலாவின் நிலையே இப்படியென்றால், கிராமங்களின் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன?

திரிபுரா மாநிலம் கடந்த 1972-ம் ஆண்டு உருவானது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் ஒரு பாலம்கூட கட்டப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்தான், அகர்தலாவில் பாலம் ஒன்று கட்ட முடிவெடுக்கப்பட்டது. சவுமுகானி என்ற இடத்திலிருந்து, அருந்ததி நகர் என்ற பகுதி வரை 2.3 கிலோ மீட்டர் நீளத்துக்குப் பாலம் கட்ட, ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

திரிபுரா மாநிலத்தின் முதல் பாலம்
திரிபுரா மாநிலத்தின் முதல் பாலம்

இந்த மாநிலத்தில் கட்டப்பட்ட முதல் பாலம் இந்நிலையில் இதில் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் பாதல் சௌத்ரி ஊழலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.