தமிழக சத்துணவுத்துறை மற்றும் சமூகநலத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மீது, வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணமோசடி செய்ததாக, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில், சத்துணவு மற்றும் சமூகநலத்துறை அமைச்சராகப் பதவிவகித்தவர் சரோஜா. இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, ராசிபுரத்தைச் சேர்ந்த சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் காவல் நிலையத்தில், ஒரு புகாரை அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ``அமைச்சர் சரோஜா, 'நீங்கள் சத்துணவு வேலைக்குப் பணம் வாங்குங்கள். நான் தொகுதியில் வீடுகட்ட வேண்டும்' என்று என்னையும் என் மனைவியையும் அழைத்துச் சொன்னார். அதன்பிறகு, என் மனைவி மூலம், 15 நபர்களிடமிருந்து ரூ.76,50,000 பெற்று, சரோஜாவிடமும் அவர் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்தப் பணத்தையும் கொடுத்தேன். அந்தப் பணத்தை வைத்துத்தான், தற்போது லோகரஞ்சன் ராசிபுரத்தில் ஒரு வீட்டை கிரையம் செய்திருக்கிறார். எங்களிடம் பணம் கொடுத்தவர்களின் விவரங்களையும் இந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்ட சரோஜா, அவர் கணவர் லோகரஞ்சன், அதற்குப் பிறகு திட்டமிட்டு எங்களைத் தவிர்த்தனர். இது தொடர்பாக, இரண்டு முறை முன்னாள் அமைச்சரை நேரில் சந்திக்க முயன்றேன் ஆனால், முடியவில்லை. அப்போது தொடர்ந்து பேச முயன்றபோதுதான், 'உன்னைத் தொலைத்துவிடுவேன். நான் அமைச்சராக இருந்தவள். என்னை மீறி உன்னால் என்ன செய்ய முடியும்?' என்று அவர் கணவருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்தத் தொகையைக் கேட்டு சில பேர் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். மேலும், `நாங்கள் முன்னாள் அமைச்சரிடம் கொடுக்கவில்லை. உங்களிடம்தான் கொடுத்தோம். எனவே, உங்கள்மீது காவல்துறையிடம் புகார் கொடுப்போம்' என்றும் மிரட்டுகிறார்கள். அவர்களுக்காகச் சில இடங்களில் பணம் வாங்கி திருப்பிக் கொடுத்திருக்கிறேன். கடன் தொல்லையால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டால், அதற்கு சரோஜாவும், அவர் கணவரும், அவரின் மருமகன் ராஜவர்மனும்தான் காரணம்.

எனவே, முன்னாள் அமைச்சரிடமிருந்து எனக்கு வரவேண்டிய ரூ.76,50,000 ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குணசீலன் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், குணசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், 406, 420, 506/1 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்துவருகின்றனர்.