Published:Updated:

75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள்; பாலியல் வன்கொடுமை; - ஒப்புக்கொண்ட பிரான்ஸ் கத்தோலிக்க பாதிரியார்

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3,30,000 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக (பிரெஞ்சு ரிப்போர்ட்) அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3,30,000 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற விசாரணை ஆணையம் (Independent Commission) மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில், தேவாலயப் பாதிரியார்கள் கடந்த 70 ஆண்டுகளாக திரைமறைவில் அரங்கேற்றிவந்த பாலியல் அத்துமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயம்
பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயம்

பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆராய, கடந்த 2018-ம் ஆண்டு ஜீன்-மார்க் சாவ் (Jean-Marc Sauve) என்பவர் தலைமையில் ஒரு வலுவான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், சம்மந்தப்பட்டவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை வாக்குமூலமாகப் பெற்றனர். மேலும் தேவாலயம், நீதிமன்றம், காவல் நிலையம், பத்திரிகை செய்திகளின் மூலம் பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டனர். மிக முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்குழுவை தொடர்புகொள்ள ஏதுவாக ஹாட் லைன் எண் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டு சுமார் 6,500-க்கும் மேற்பட்டோர் தாங்கள் சந்தித்தப் பிரச்னைகள், தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள், தெரிந்த தகவல்கள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கின்றனர்.

ஜீன்-மார்க் சாவ் விசாரணைக்குழுவினர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக நடத்திய விசாரணையில் கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வ தரவுகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் அடிப்படையில் சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட முழு அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை விசாரணைக்குழு தலைவர் ஜீன்-மார்க் சாவ், நேற்று நடந்த கூட்டத்தில் கத்தோலிக் பிஷப் எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட (Bishop Eric de Moulins-Beaufort) உள்ளிட்ட தலைவர்களின் முன்னிலையில் வெளியிட்டார்.

ஜீன்-மார்க் சாவ் மற்றும்  எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட கைகளில் பிரெஞ்சு ரிப்போர்ட்
ஜீன்-மார்க் சாவ் மற்றும் எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட கைகளில் பிரெஞ்சு ரிப்போர்ட்
ap international

``பிரெஞ்சு ரிப்போர்ட்" (French report) என அழைக்கப்படும் இந்த ஆய்வறிக்கை கடந்த ஏழு தசாப்தங்களாக, கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த பாலியல் கொடுமைகளை ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தியது. மிக முக்கியமாக அந்த அறிக்கையில், 1950-ம் ஆண்டு முதல் கடந்த 70 ஆண்டுகளில் பாதிரியார்களால் சுமார் 3,30,000 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 3,30,000 பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 2,16,000 பேர் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு சாரணர் தலைவர்கள், முகாம் ஆலோசகர்கள் (scout leaders or camp counselors) போன்ற தேவாலயப் பிரமுகர்களால் பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

கத்தோலிக்க சிலுவை
கத்தோலிக்க சிலுவை

பாதிக்கப்பட்டதாக கூறப்படுவோரில் 80 சதவீதம் பேர் ஆண் குழந்தைகள் (பதின்ம வயது சிறுவர்கள்) என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் பாதிரியார்களால் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பல்வேறு சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தக் குற்றச்செயல்கள் 3,000-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், அவர்களின் உதவியாளர்கள், தேவாலய ஊழியர்களால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது" எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த குற்றச்செயல்களையெல்லாம் பல தசாப்தங்களாக கத்தோலிக்க தேவாலயம் ஓர் ``அமைப்பு முறையில்" (systemic manner) மூடி மறைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அறிக்கை குறித்து பேசிய பாதிக்கப்பட்டவர்களின் குழுத்தலைவர் ஃபிரான்கொய்ஸ் டிவாக்ஸ் (Francois Devaux), ``இந்த ஆய்வறிக்கை பாதிக்கப்பட்ட எங்களின் வரலாற்றில் மிகப்பெரியதொரு திருப்புமுனை. பாதிரியார்களின் இந்த குற்றச்செயல்கள் மூலம் மிக மோசமான துரோகத்தை செய்துள்ளனர். அது, நம்பிக்கைத் துரோகம்! அறநெறிக்கு எதிரான துரோகம், குழந்தைகளுக்கு எதிரான துரோகம், அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்! பல தசாப்தங்களாக மறைக்கப்பட்ட இந்த மாபெரும் அநீதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என கருத்து தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போப் ஃபிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கையில் `` பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகுந்த வேதனை அடைகிறேன், மேலும் பாதிக்கப்பட்டவர்களில் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டித்துச் சுட்டிக்காட்டிய தைரியத்துக்கு நன்றி கூறுகிறேன். இந்த பயங்கரமான யதார்த்தத்தின் மூலம் பெற்ற விழிப்புணர்வு நிச்சயம் மீட்பின் பாதையில் கொண்டுசெல்லும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஃபிரான்கொய்ஸ் டிவாக்ஸ்
ஃபிரான்கொய்ஸ் டிவாக்ஸ்
ap international
பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபை: `3.3 லட்சம் சிறார்கள் பாலியல் வதை; அதிர்வலைகளை ஏற்படுத்திய அறிக்கை!'

கடந்த 2020-ம் ஆண்டு பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் பெர்னார்டு பிரெய்னட் (Bernard Preynat) மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணையில் 1970 முதல் 1990 காலகட்டத்தில் சுமார் 75-க்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதன்காரணமாக, பெர்னார்டு பிரெய்னட்டுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெர்னார்டு பிரெய்னட்
பெர்னார்டு பிரெய்னட்
ap international

இந்நிலையில், ஜீன்-மார்க் சாவ் விசாரணைக்குழு வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்தத் தகவல் பிரான்ஸ் நாடு மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து பிரான்ஸ் அரசாங்கம் தற்போது உயிருடன் இருக்கும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, தண்டனை வழங்கவுள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு