Published:Updated:

சாத்தான்குளம் முதல் செல்லூர் வரை... காவல்துறையால் தொடரும் மர்ம மரணங்கள்!

கோவில்பட்டி கிளைச்சிறை
கோவில்பட்டி கிளைச்சிறை

சாத்தான்குளம் சம்பவம் மிகக் கொடுமையானது. இதுவரை சித்ரவதைக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தில் நம் நாடு கையொப்பமிடவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸும் அவர் தந்தை ஜெயராஜும் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. காவல்துறையினர் தாக்கியதால்தான் மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்
பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்

தமிழகத்தில் இதுபோன்று காவல்துறை விசாரணையிலும், சிறையில் இருக்கும்போதும் கைதிகள் மரணமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். தவறு செய்யும் காவல்துறையினருக்கு அதிகப்பட்ச தண்டனையாக ஆயுதப்படைக்கு மாற்றுவது சடங்காக நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று நடக்கும் மர்ம மரணங்கள் அரசியல், சமூகப் பின்னணி இருந்தால் வெளியில் தெரிகிறது. சாமானியர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் வெளியே வருவதில்லை, 

சமீபத்தில் மதுரை மத்திய குற்றப்பிரிவு வழக்கு விசாரணைக்குச் சென்ற தவிட்டுச்சந்தையைச் சேர்ந்த 65 வயதான அழகர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அழகர்
அழகர்
ஈ.ஜெ.நந்தகுமார்

இதுபற்றி அழகரின் மகன் ஆனந்த் நம்மிடம், ''என் தந்தை ரியல் எஸ்டேட் தரகராக இருந்தார். மதுரையில் ஜவுளிக்கடை ஒன்றுக்கு நிலம் வாங்கிக் கொடுத்ததில் அவர்களுக்கும் மற்றொரு ஜவுளி நிறுவனத்துக்கும் பிரச்னை உண்டானது. இந்த வழக்கு சம்பந்தமாக என் தந்தையை விசாரணைக்கு வருமாறு மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைத்திருந்தனர். கடந்த ஜுன் 11-ம் தேதி மாலை விசாரணைக்காக சென்றார். இரவு 7.30 மணிக்கு என் தந்தை இறந்து விட்டதாகவும் உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் சொன்னார்கள். நல்ல விதமாக விசாரணைக்குச் சென்றவரை காவல்துறையினர் தாக்கியதில்தான் இறந்திருக்கிறார்.

அவர் உடல் நலமில்லாமல் இருந்ததாகவும், விசாரணை முடிந்து செல்லும்போது மயக்கமடைந்து விழுந்து விட்டதாகவும் உடனே அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் சொன்னார்கள். உண்மையிலேயே அவர் மயங்கி விழுந்திருந்தால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கலாம். அதைவிட்டு நீண்ட நேரம் கழித்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். நாங்கள் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை. அதனால் நீதிமன்றம் செல்லப் போகிறோம்'' என்றார்.  

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், ''மூத்த பேராசிரியர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. வீடியோ செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்து அடுத்து டி.ஆர்.ஓ விசாரணை நடத்துவார்'' என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஜெயராஜ்,பெனிக்ஸ் உறவினர்கள்
ஜெயராஜ்,பெனிக்ஸ் உறவினர்கள்
சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது காவல்துறையா, நீதித்துறையா?

இதேபோல் சில மாதங்களுக்கு முன் அவனியாபுரத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற பாலமுருகன் என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி கேட்டு தந்தை முத்துக்கருப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், திடீரென்று வழக்கை வாபஸ் பெற்றார். காவல்துறை மிரட்டியதால் அவர் வழக்கை வாபஸ் பெற்றதாக நீதிபதி கவனத்துக்குக் கடிதம் ஒன்று சென்றது. இதனால் நீதிமன்றமே இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்தது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது கருப்பாயூரனியில் ரோந்து வந்த காவலர்கள் விரட்டியதால் கோழிக்கடை நடத்தி வந்த அப்துல் ரகீம் என்ற பெரியவர் கீழே விழுந்து மரணமடைந்தார். காவல்துறையை எதிர்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். பின்பு காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் இறந்தவரின் குடும்பத்தினர் புகார் ஏதும் அளிக்காமல் உடலை வாங்கிக் கொண்ட சம்பவமும் நடந்தது.

கோவில்பட்டி கிளைச்சிறை
கோவில்பட்டி கிளைச்சிறை

அதற்கு சில மாதங்களுக்கு இரவில் இருசக்கர வாகனத்தில் நண்பரை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த விவேகனந்தகுமார், செல்லூர் அருகே  விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். இது எதிர்பாராத விபத்து அல்ல, அங்கிருந்த டெல்டா பிரிவு காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் லத்தியை வீசியதால் விவேகானந்தகுமார் தடுமாறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக புகார் சொல்லப்பட்டது. அவர் குடும்பத்தினரும் சமுதாயத்தினரும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட காவலர்கள் சிலர்  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். சில நாள்களில் அது விபத்துதான் என்று வழக்கை முடித்தது காவல்துறை. விவேகானந்தகுமாரின் குடும்பம் ஆதரவில்லாமல் நிற்கிறது.

சாத்தான்குளம்:`இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்!’ -ராகுல் காந்தி முதல் தவான் வரை

இப்படி பல சம்பவங்கள்... இதைத் தடுக்க என்ன வழி?  என்று மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமம் குடிமக்கள் இயக்கத்தின் தலைவருமான சி.ஜே.ராஜனிடம் கேட்டோம், ''இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் சர்வதேச சித்ரவதைக்கு எதிரான தினம் உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால்,  சித்ரவதைக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தில் நம் நாடு இதுவரை கையொப்பமிடவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். சாத்தான்குளம் சம்பவம் மிகக் கொடுமையானது. அப்பாவை போலீஸ் அடிக்கும்போது அதை ஒரு மகன் கேள்வி கேட்கக் கூடாதா?

பொது மக்கள் கேள்வி எழுப்பினாலே போலீஸுக்குக் கோபம் வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்பதால் தங்கள் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் காவல்துறையின் சித்ரவதையால் மூச்சு முட்டுகிறது என்று கூறி மரணமடைந்த கறுப்பின இளைஞருக்காக உலகமே போராடியது. போலீஸ் அப்படி நடந்துகொண்டது தவறுதான் என்று அமெரிக்கக் காவல்துறை அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால், இங்கு போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பதற்கு சங்கடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

சி.ஜே.ராஜன்
சி.ஜே.ராஜன்
ஈ.ஜெ.நந்தகுமார்

இழப்பீடு அறிவித்துவிட்டு மூச்சுத் திணறலால் இறந்தாக அறிக்கை விடுகிறார். நீண்ட காலமாக காவல்துறையின் சித்ரவதையால் பல மரணங்கள் நடந்து வருகின்றன. ஆனால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சரியான தண்டனை கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அரசுகள்தான்.

1995-ல் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மனித உரிமை ஆணையங்கள் உருவாகின. இவை தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்பட்டாலே காவல்துறை சித்ரவதைகள் தடுக்கப்படலாம். குற்றம் நிகழந்தவுடன் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது வழக்கு பதிவு செய்திருக்கலாம். இப்போது நீதிமன்றம் தலையிட்டுள்ளதால் சில விஷயங்கள் நடந்து வருகின்றன. அடுத்து கீழ்நிலைக் காவலர்களுக்கு மனித உரிமை சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். மக்கள் உங்கள் நண்பர்கள் என்று அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். சாதி, மதம், பார்த்து மக்களிடம் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதையெல்லாம் நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க முடியும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு