பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்

தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கில்தான் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகமும் உள்ளது. அந்த பிளாக்கின் சிசிடிவி பதிவுகளை என்.ஐ.ஏ கேட்டிருப்பதால் ஆளும் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்தவர்களிடம், சுங்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்திவருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித்திடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், `சிவசங்கரனை தனக்கு நன்கு தெரியும்' எனக் கூறியிருந்தார். அதேசமயம் ஸ்வப்னாவுடன் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர், சிவசங்கரனை தனக்கு தெரியாது எனக் கூறியிருந்தார். இந்தநிலையில் சிவசங்கரனிடம் சுங்கத்துறை இதற்கு முன்பு 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்தும், ஐ.டி துறை செயலாளர் பதவியில் இருந்தும் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் திடீரென நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள், போரூர்க்கடை போலீஸ் கிளப்பில் வைத்து சிவசங்கரனிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீண்டது. ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு சிவசங்கரன் அவரது உறவினரின் காரில் வீடு திரும்பினார்.

இந்த விசாரணையில் சிவசங்கரன் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கம் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித், தனது உறவினர் என்று சிவசங்கரன் கூறியிருக்கிறார். மேலும், ஸ்வப்னா சுரேஷின் கணவர் தனது உறவினர் என்றும், அதனால்தான் ஸ்வப்னாவின் குடும்பத்தினருடன் நட்பாக இருந்தததாகவும் சிவசங்கரன் தெரிவித்திருக்கிறார். ஸ்வப்னா எதுவரை படித்திருக்கிறார் என தனக்குத் தெரியவில்லை என்றும், ஸ்வப்னாவுக்கும் தங்கம் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், அப்படி தெரிந்திருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருந்திருப்பேன் எனவும் சிவசங்கரன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
யு.ஏ.இ தூதரகத்துக்கு தங்கம் கடத்தி வந்த பார்சலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியே விடாமல் இரண்டு நாள்களாக சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சிலர் போன் செய்து பார்சலை விடுவிக்கும்படி கூறியிருக்கிறார்கள். அப்போது சிவசங்கரன் போன் செய்தாரா என்ற ரீதியிலும் விசாரணை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சிவசங்கரன் பணிபுரிந்த அலுவலகம் அமைந்துள்ள கேரள தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கின் இரண்டு மாத சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்கும்படி என்.ஐ.ஏ கேட்டுள்ளது. கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரையிலான சி.சி.டி.வி பதிவுகள் வேண்டும் என தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்று கேட்டிருக்கிறார்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள். தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கில்தான் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகமும் உள்ளது. அந்த பிளாக்கின் சிசிடிவி பதிவுகளை என்.ஐ.ஏ கேட்டிருப்பதால் ஆளும் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.