Published:Updated:

`காயினை சுண்டிவிடுவார்கள், கொள்ளையடிப்பார்கள்!' - 1 கிலோ தங்கத்தால் சிக்கிய 5 திருடர்கள்

குருபிரசாத்

ஓடும் பேருந்தில், 1 ரூபாய் காயினை சுண்டிவிட்டு, நூதன முறையில் கொள்ளை அடிக்கும் கும்பல் சிக்கியுள்ளது.

மலைச்சாமி
மலைச்சாமி

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அபினவ் என்ற தங்க நகை வியாபாரி, நகைகளை விற்பனை செய்வதற்காக, தன் ஊழியரை சேலத்துக்கு அனுப்பி வைத்தார். அதன்படி, அவரிடம் வேலை பார்த்து வந்த ரவிச்சந்திரன் என்ற 60 வயது முதியவர், நகைகளை சேலத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளார்.

ஓடும் பேருந்தில் கொள்ளை
ஓடும் பேருந்தில் கொள்ளை

அப்போது, சின்னியம்பாளையம் பேருந்து நிலையத்தில் ஐந்துக்கு மேற்பட்டவரால் அவருக்கே தெரியாமல் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

இந்த வழக்கை பீளமேடு போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மலைச்சாமி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்கக் கட்டிகள்
தங்கக் கட்டிகள்

போலீஸ் விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மலைச்சாமி, சீனிவாசபாண்டியன், வீரபாண்டி, பாலமுருகன், மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தமிழகம் முழுவதும் இதே பாணியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளை முயற்சியில் இறங்கும்போது, 5 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், பேரூந்தில் அதிக நகை, பணம் கொண்டு வருகிறவர்களை நோட்டமிட்டு அவர்களின் அருகில் சென்று அமர்ந்து கொள்வார்கள். இந்த 5 பேர் அமரும் தங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் பையைக் கவனிப்பார்கள். அதிக நகை, பணம் யார் பக்கத்தில் இருக்கிறதோ அவர் மட்டும் ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிடுவார். காயினைத் தேடுவது போல பாவ்லா காட்டிவிட்டு அந்தப் பயணிக்கே தெரியாமல் நகையைக் களவாடுவது இவர்களது பாணி. கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராக பேருந்தில் இருந்து இறங்கிவிடுவார்கள். பயணிகளிடம் திருடிய நகைகளையும் உருக்கிக் கட்டியாக்கிவிடுவார்கள்.

இந்தத் தங்க நகைகளை உருக்கிக் கட்டியாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். மலைச்சாமிதான் இந்த கும்பலின் தலைவனாக இருந்து வந்துள்ளார். அவர் மீது மட்டும், தமிழகம் முழுவதும் 25 வழக்குகள் இதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

மலைச்சாமி
மலைச்சாமி

மேலும், இரண்டு முறை அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டுள்ளார். ஏற்கெனவே இருமுறை மலைச்சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.