சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மனைவி முருகம்மாள். இந்தத் தம்பதி இன்று காலை 5 மணியளவில் பாரிஸ் செல்லவேண்டி பெரும்பாக்கம் பேருந்து நிலையத்துக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, 5 மணிக்கு அங்கிருந்து புறப்படவேண்டிய பேருந்து, 5:30 மணி ஆகியும் புறப்படாததால் செந்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரிடம், `பேருந்து எப்போது கிளம்பும், நேரமாகிறது' என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர்கள், `காத்திருக்க முடிந்தால் காத்திருங்கள். இல்லையென்றால் பேருந்தைவிட்டு இறங்குங்கள்' என்று அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, செந்திலும் அவர் மனைவி முருகம்மாளும் பேருந்து நடத்துநர், ஓட்டுநரிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநரும் நடத்துநரும் அந்தத் தம்பதியை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் தாக்கியதில் முருகம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் பேருந்து முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
தம்பதியர் பேருந்து ஓட்டுநர், நடத்துநரால் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றா.
பேருந்து எப்போது புறப்படும் எனக் கேட்டவர்களை, பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தாக்கியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
