ராமநநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடைபெற்ற கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் தொடர்பான கருத்தரங்கைத் தொடங்கிவைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், 58 விவசாயிகளுக்கு ரு.2 கோடி மதிப்பிலான விவசாய இடுபொருள்களை வழங்கினார்.
இந்நிலையில் இந்த விழாவில் அமைச்சரை வரவேற்கச் சென்ற தன்னைச் சாதிப் பெயரைக் கூறி அமைச்சர் ஒருமையில் திட்டியதால் மனவேதனை அடைந்துள்ளதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள ராஜேந்திரன், ``அமைச்சர் ராஜகண்ணப்பனை நானும் சக அதிகாரிகளும் வரவேற்றோம். அப்போது அமைச்சர் என்னைப் பார்த்து, சாதியைச் சொல்லி அழைத்து. `நீ ஒரு பி.டி.ஓ., நீ சேர்மன் சொல்வதைத்தான் கேட்பே, நாங்கள் சொல்வதைக் கேட்க மாட்டே, உன்னை இந்த சீட்டிலே வைக்க மாட்டேன், பஞ்சாயத்து பி.டி.ஓ-வாக இருக்க உனக்குத் தகுதியில்லை, உன்னை மாவட்டம்விட்டு மாவட்டம் அல்லது வட மாவட்டங்களுக்கு இமீடியட்டா மாத்திருவேன். நீ யார் பேச்சையும் கேட்பதில்லை எனப் புகார் வருகிறது’ எனக் கடுமையாகப் பேசி, என்னை ஐந்து முறைக்கு மேல் சாதிப் பெயரைச் சொல்லிக் காயப்படுத்தி ஒருமையில்தான் பேசினார். நான் அழக்கூடிய நிலைக்குச் சென்றுவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் அதிகாரிகளிடம், `இவனை மாத்துங்க, அதற்கான ரிப்போர்ட்டை கொண்டு வாருங்கள்’ எனக் கூறினார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, யாருக்கும் துரோகம் செய்யவில்லை, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரை முரணாகப் பேசியதில்லை. என்மீது அவருக்கு ஏன் ஆக்ரோஷம் எனத் தெரியவில்லை. மேலும் `நீ வா, போ’ என ஒருமையில் பேசினாலும், அவர் என் தகப்பன் ஸ்தானத்தில் இருந்ததால் நான் பொறுத்துக்கொண்டேன்.

அமைச்சரைக் குறை சொல்லவில்லை, கூட்டியும் சொல்லவில்லை. அவர் கூறியதை உள்ளதை உள்ளதென்று அப்படியே சொல்லியிருக்கிறேன். 57 வயதில் நான் சந்திக்காத மனக்காயத்தைச் சந்தித்தேன். வீட்டில் சோகமாக இருந்தேன், சாப்பிடவில்லை, இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. இது தொடர்பாக மாவட்டஆட்சியரைச் சந்திக்கச் சென்றேன். ஆனால் சந்திக்க முடியவில்லை. இதனால் முதுகுளத்தூர் அலுவலகத்துக்கு வந்து பணி செய்துகொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு கருத்துகளைக் கேட்பதற்காக, நாம் அவரைப் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.