Election bannerElection banner
Published:Updated:

`முடிந்தால் 15 நாள் ஸ்டேஷனில் உட்காரவை, பார்ப்போம்!’ - போலீஸை மிரட்டிய குடியாத்தம் தி.மு.க பிரமுகர்

குடியாத்தம் தி.மு.க பிரமுகர் ஞானபிரகாஷ்
குடியாத்தம் தி.மு.க பிரமுகர் ஞானபிரகாஷ்

குடியாத்தத்தில், போதையில் பைக்கை ஓட்டிய நண்பருக்கு ஆதரவாகக் காவல்துறையினரை மிரட்டிய தி.மு.க பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரக் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாண்டியன் நகரைச் சேர்ந்த கங்காதரன் மகன் ரோஷன்ராஜ் (24) என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். போலீஸார் தடுத்து நிறுத்திச் சோதித்தபோது அவர் மது போதையில் இருந்தார்.

ஸ்டாலினுடன் ஞானபிரகாஷ்
ஸ்டாலினுடன் ஞானபிரகாஷ்

அதையடுத்து, அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். ஆத்திரமடைந்த ரோஷன்ராஜ் காவல்துறையினரிடம் ஆபாசமாகப் பேசியதுடன், தன் நண்பர்களையும் போன் செய்து வரச்சொன்னார். குடியாத்தம் தொகுதி தி.மு.க தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாஷ் (30) அங்கு வந்தார்.

அவரும் மது போதையில் இருந்தார். போலீஸாரிடம், `நான் யார் தெரியுமா... உங்களால என்ன செய்ய முடியும்; நார் நாராகக் கிழித்து 15 நாள் ஸ்டேஷனில் உட்கார வை பார்ப்போம்’ என்று மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. நடுரோட்டில் வாகனங்களுக்கு வழிவிடாமல் அவர் தகராறில் ஈடுபட்டார். காவல்துறையினர் சமாதானம் செய்தும் கேட்கவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை
ஒழுங்கு நடவடிக்கை

தி.மு.க பிரமுகரின் செயலை அங்கிருந்த பொதுமக்களும் காவல்துறையினரும் செல்போனில் வீடியோகப் பதிவுசெய்துள்ளனர். அதன்பிறகு, பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாகப் பேசியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தி.மு.க பிரமுகர் ஞானபிரகாஷையும் அவரின் நண்பர் ரோஷன்ராஜையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டுவந்ததால் தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஞானப்பிரகாஷை நீக்கியிருக்கிறது, தி.மு.க தலைமை.

ஞானபிரகாஷ்
ஞானபிரகாஷ்

இதற்கான உத்தரவைத் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். இதுபற்றி, குடியாத்தம் தி.மு.க நகரச்செயலாளர் சௌந்தரராஜன் கூறுகையில், ``ஞானப்பிரகாஷ் மது போதையில் காவல்துறையினரிடம் தகராறு செய்ததாகச் சொல்கிறார்கள். அதனால், அவர் மீது தற்காலிகமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு