2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து பிரதமர் மோடி உள்ளிட்ட சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இப்படி விடுவிக்கப்பட்டது செல்லாது எனக் கலவரத்தில் இறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்ஸான் ஜஃப்ரியின் மனைவி ஸகியா ஜஃப்ரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது சரியானதே எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஸகியா ஜஃப்ரி இந்த வழக்கைத் தொடர்வதற்குக் காரணமாகச் செயல்பட்டது டீஸ்டா செடல்வத்தான் எனக் கூறப்படுகிறது.

அதனால், இந்த வழக்கைத் தொடுப்பதற்குப் பின்னணியிலிருந்து செயல்பட்ட முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வத்(Teesta Setalvad) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராகப் பதியப்பட்ட ஒன்பது பக்க முதல் தகவல் அறிக்கையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஏற்கெனவே வேறொரு வழக்கில் தொடர்புடைய அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு முதல் சிறையிலிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், குஜராத் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை இடமாற்ற வாரண்ட் மூலம் கைதுசெய்துள்ளது. இது தொடர்பாக, அகமதாபாத் குற்றப்பிரிவு துணை காவல்துறை ஆணையர் சைதன்யா மாண்ட்லிக், ``பலான்பூர் சிறையிலிருந்து சஞ்சீவ் பட்டை மாற்றுவதற்கான உத்தரவின் பேரில் காவலில் எடுத்து செவ்வாய்க்கிழமை மாலை அவரை முறையாகக் கைதுசெய்துள்ளோம். தீவிர விசாரணைக்குப் பிறகு பிற தகவல்கள் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.