Published:Updated:

``நித்யானந்தாவின் வலையில் பெண் தொழில் அதிபர்“- அதிர்ச்சி தரும் ஆசிரமக்கதை!

அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் அமைத்துக்கொடுத்ததே அந்த மாநிலத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை நடத்திவரும் பெண் தொழில் அதிபர் ஒருவர்தான் என்கிறார்கள் நித்யானந்தாவுக்கு நெருக்கமானவர்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

நாளுக்கு ஒரு அதிரடி என்று இந்திய ஊடகங்களை கலங்கடித்துக்கொண்டிருக்கிறார் சர்ச்சை புகழ் நித்யானந்தா. தற்போது அவரைப் பற்றி புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. நித்தியின் பிடியில் குஜராத்தைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் பெண் அதிபர் ஒருவர் சிக்கியிருப்பதாகப் பரவியுள்ள தகவல்தான் அந்த பரபரப்பின் பின்னணி.

மஞ்சுளா பூஜா ஷெராஃப்
மஞ்சுளா பூஜா ஷெராஃப்

நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் இருந்த காலத்தில் அவரைச் சுற்றி பெண் சிஷ்யைகளே அதிகம் வலம்வந்தனர். அதைத்தாண்டி தென் மாநிலங்களைச் சேர்ந்த பல தொழில் அதிபர்களும் நித்யானந்தாவுக்கு பக்தர்களாக மாறி பல கோடிகளைக் கொட்டினார்கள். இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு பள்ளிக்கூட வளாகத்தில் ஆசிரமம் ஒன்று புதிதாக உருவானது. இந்த ஆசிரமத்தில்தான் ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் உட்பட பல குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் அமைத்துக்கொடுத்ததே அந்த மாநிலத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை நடத்திவரும் பெண் தொழில் அதிபர் ஒருவர்தான் என்கிறார்கள் நித்யானந்தாவுக்கு நெருக்கமானவர்கள்.

மஞ்சுளா பூஜா ஷெராப்- குஜராத் மாநிலத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைக் கொண்ட கலோரெக்ஸ் நிறுவனங்களின் அதிபர். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பிசினஸ் கல்லூரியான ஐ.ஐ.எம்-மில் பட்டப்படிப்பை முடித்த இவர் லண்டன் பிசினஸ் கல்லூரியில் மேற்படிப்பு படித்து குஜராத்தில் பல பகுதிகளில் சி.பி.எஸ்.இ கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார். அதோடு குஜராத் மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி அரசின் முக்கிய நபர்களும் இவருடைய நட்புப் பட்டியலில் இருக்கிறார்கள்.

பிடதி ஆசிரமம்
பிடதி ஆசிரமம்
`ஆனந்த நடனம்; அன்னாசிப் பழ கர்ப்பம்’ வீடியோவில் நித்யானந்தா குறிப்பிட்ட ஜூ.வி கட்டுரை சொல்வது என்ன?

மஞ்சுளா, 2017-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள தோழி ஒருவரைக் காணவந்துள்ளார். 25 ஆண்டுகாலமாக சிவ வழிபாட்டில் தீவிர நாட்டமுடையவர் மஞ்சுளா என்பதால், அவருடைய பெங்களூரு தோழி பிடதி ஆசிரமத்தைப் பற்றியும் நித்யானந்தாவின் ஆன்மிகப் பணிகளைப் பற்றியும் மஞ்சுளாவிடம் சொல்லியிருக்கிறார். சிவனின் அவதாரமே நித்யானந்தாதான் என்று தோழி ஒருவர் சொன்னதை நம்பி, நித்யானந்தாவைப் பார்ப்பதற்காக அவருடைய தோழியுடன் பிடதி ஆசிரமத்துக்குச் சென்றுள்ளார் மஞ்சுளா. 10 நாள்கள் தொடர்ந்து ஆசிரமத்தில் தங்கி பயிற்சி எடுத்துள்ளார். அதற்கு பிறகு நித்தியின் தீவிர பக்தையாகவே ஆசிரமத்தைவிட்டு வெளியே வந்துள்ளார்.

அகமதாபாத் திரும்பிய மஞ்சுளாவின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிக்கடி கையை அழுத்திக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிடுவாராம். என்னால் இரும்பைக் கூட தங்கமாக மாற்றமுடியும், எனது குரு நித்யானந்தாவின் அருள் எனக்கு இருப்பதால் எல்லாம் சாத்தியம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார். இந்த நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே நித்யானந்தாவின் குறிக்கோள் என்றும் புதிது புதிதாகப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். தன்னை மா மஞ்சுளா என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் அனைவரிடமும் சொல்லியிருக்கிறார். குஜராத் மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இந்தப் பெண்ணுக்கு இருப்பதை அறிந்த நித்யானந்தா, தனக்கு குஜராத் மாநிலத்தில் ஆசி்ரமம் ஒன்று அமைக்க விருப்பம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

குருவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தனது பள்ளி வளாகத்திலேயே ஆசிரமம் அமைக்க இடமும் கொடுத்துள்ளார் மஞ்சுளா. பப்ளிக் ஸ்கூலோடு, ஆசிரமத்தையும் நித்தியின் கையில் ஒப்படைத்துள்ளார் மஞ்சுளா. பிடதி ஆசிரமத்திலிருந்து நித்யானந்தா வெளியேறிய பிறகு தனக்குப் பாதுகாப்பான ஒரு இடம் வேண்டும் என்று முடிவு செய்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்துக்குதான் நித்யானந்தா சென்றுள்ளார். அங்கு சில காலம் இருந்தவர் அங்கிருந்து உத்தரப்பிரதேசம் வழியாக நேபாளம் சென்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

`உன் தலைவன் யார்... நீ என்ன சீமான் கட்சியா?’ -இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்

ஜனார்த்தன ஷர்மாவின் மூன்று குழந்தைகளும் இந்த ஆசிரமத்தில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நவம்பர் 1-ம் தேதி ஜனார்த்தன ஷர்மா தன் பிள்ளைகளை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் அளித்ததும் மஞ்சுளாவின் உதவியுடன் ஜனார்த்தன ஷர்மாவின் இரண்டாவது மகளை இங்கிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்ல முடிவு செய்திருக்கிறார் நித்யானந்தா. போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருந்ததால் ஆசிரமத்திலிருந்து ஒரு காரில் பொருள்களை ஏற்றிச்செல்வது போல கார் டிக்கியில் ஜனார்த்தன ஷர்மாவின் மகளை அடைத்து வெளியே கூட்டிச் சென்றுள்ளனர். இந்தத் தகவல்கள் இப்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன. ஆனால், நித்தியை பல்வேறு மாநில போலீஸாரும் தேடும் நிலையிலும் இப்போது வரை நித்யானந்தாவின் புகழை மஞ்சுளா பாடிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் குஜராத் போலீஸார். மேலும், அவர் ஆசிரமத்துக்கு வழங்கிய இடமும் சட்டத்துக்குப் புறம்பான இடம் என்று குஜராத் போலீஸார் வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

மாநிலக்கல்வித் திட்டத்தில் இருந்த தனது பள்ளியை மத்திய கல்வித் திட்டத்துக்கு மாற்றம் செய்ததிலும் முறைகேடான ஆவணங்களை மஞ்சுளா தாக்கல் செய்திருப்பதாக அவர் மீது குஜராத் மாநிலக் காவல்துறை இப்போது வழக்கு பதிவுசெய்துள்ளது. இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்று வெளியே இருந்தாலும் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. குறிப்பாக நித்யானந்தாவின் கைலாசா தீவுக்குச் செல்லும் திட்டத்தில் மஞ்சுளா இருந்ததால் அவரை முடக்கவே அவர் மீது கிடப்பில் இருந்த விவகாரத்தை வைத்து வழக்கு பதிவுசெய்திருப்பதாகவும் நித்யானந்தா விவகாரங்களை விசாரிக்கும் போலீஸார் விவரம் தெரிவிக்கின்றனர். நித்யானந்தாவின் லீலைகளைப் பற்றி அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களைக் கேட்டு தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா போலீஸார் அனைவரும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.