Published:Updated:

` 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்?' - உச்சக்கட்ட பாதுகாப்பில் கோவை

குருபிரசாத்
தி.விஜய்

`தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என்ற உளவுத்துறை தகவலால், கோவையில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

வாகன சோதனை
வாகன சோதனை

மத்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், `` லஷ்கர்-இ-தொய்பா-வின் 6 உறுப்பினர்கள், இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளனர். அந்த 6 தீவிரவாதிகள் கோவையில் குடியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 6 பேரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள் என்று தெரியவருகிறது.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

இதில், இலியாஸ் அன்வர் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நம்பகத்தன்மையை உளவுத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

Vikatan

இதையடுத்து, கோவை உட்பட தமிழகம் முழுவதும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில், போலீஸார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கோவையில் போலீஸ் பாதுகாப்பு
கோவையில் போலீஸ் பாதுகாப்பு

சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேற்று இரவே கோவை வந்துள்ளார். அவர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடந்துவருகின்றன. மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கேரள எல்லையோரத்தில் பாதுகாப்பைக் கண்காணித்து வருகிறார்.

கோவை சிட்டியில் மட்டும், 24 மொபைல் பேட்ரோல், 35 பைக் பேட்ரோல், 20 சோதனைச் சாவடிகள், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால்கள், லாட்ஜ்கள் ஆகிய இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாகன சோதனை
வாகன சோதனை

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக்கிய குற்றவாளிகள், ரவுடிகளைக் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி, கோவை போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, தீவிரவாதியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்மித்சரண் இன்று செய்தியாளர்ளிடம் கூறும்போது, "பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன தணிக்கை, போலீஸார் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாரும் பிடிபடவில்லை. சந்தேகத்துக்குரிய நபர்களின் புகைப்படம் என எதுவும் நாங்கள் வெளியிடவில்லை.

Airport
Airport

சிறப்புக் காவல் படையினர், அதிவிரைவுப் படையினர் , மாநகர போலீஸார் என மொத்தம் 2 ஆயிரம் கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் விமானப் படைக்கும் தயார் நிலையில் இருக்குமாறு தகவல் தெரிவிக்கப்படுள்ளது'' என்றார்.