Published:Updated:

`கட்சியில சேர்றதைப்பத்தி பேசணும்'- பைக்கை நிறுத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகிமீது கொடூர தாக்குதல்

பகவான் நந்து
பகவான் நந்து

கை, வயிறு, முதுகு என உடலில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்திருக்கிறது. அதில் இரண்டு வெட்டு நன்கு ஆழமாக விழுந்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். இதுமட்டுமன்றி கணக்கம்பாளையம் பகுதியில் `எஸ்.ஆர்.எலெக்ட்ரிகல்ஸ்’ என்ற பெயரில் மிக்ஸி, கிரைண்டர் ரிப்பேர் செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் கடையை மூடிவிட்டு, காந்தி நகரில் உள்ள அவருடைய வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். கடையிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள காலியிடத்தைக் கடந்தபோது சிலர் வண்டியை மறித்திருக்கின்றனர்.

பகவான் நந்து
பகவான் நந்து

`ஜி... கொஞ்சம் நில்லுங்க. கட்சியில சேர்றதைப் பத்தி கொஞ்சம் விசாரிக்கணும்’ எனச் சொல்ல, பகவான் நந்துவும் வண்டியை நிறுத்தியிருக்கிறார். வண்டியை நிறுத்திய அடுத்த நொடியே சுற்றியிருந்த மர்மநபர்கள் அனைவரும் சேர்ந்து, பகவான் நந்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். வெட்டுக் காயங்களுடன் அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றவர், அருகிலிருந்த நண்பர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பகவான் நந்துவை மீட்டு, திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். கை, வயிறு, முதுகு என உடலில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் விழுந்திருக்கிறது. அதில் இரண்டு வெட்டு நன்கு ஆழமாக விழுந்திருக்கிறது. வெட்டுப்பட்ட இடங்களில் மொத்தம் 180 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

பகவான் நந்து
பகவான் நந்து

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொழில் போட்டியா... கட்சி ரீதியான முன்பகையா... என்ன காரணத்துக்காக இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆட்களை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக இருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் திருப்பூர் அரசு மருத்துவமனையின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் குவிந்து வருகின்றனர். தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் பேச்சுவார்த்தை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு