Published:Updated:

`குஜராத் ஸ்வீட் பாக்ஸ்; சிசிடிவி காட்சிகள்!’ - உ.பி இந்து சமாஜ் தலைவர் கொலையில் விலகாத மர்மம்

கம்லேஷ் திவாரி
கம்லேஷ் திவாரி ( Facebook/@KamleshTiwari )

உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்து சமாஜ் கட்சியின் தலைவர் நேற்று முன் தினம் தன் வீட்டிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான கம்லேஷ் திவாரி. இவர் அந்த மாநிலத்தில் உள்ள இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். நேற்று முன் தினம் கம்லேஷின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உள்ளே சென்ற சில மர்ம நபர்கள் அவரின் கழுத்தை அறுத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். பிரபலமான ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டது அந்தப் பகுதியைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

கம்லேஷ் திவாரி
கம்லேஷ் திவாரி
Facebook/@KamleshTiwari

தன் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் மாநிலம் முழுவதும் பிரபலமானவர் கம்லேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உள்ளூர் போலீஸார் இவருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஆனால், சம்பவம் நடந்த போது பாதுகாப்பு காவலர்கள் யாரும் அருகில் இல்லை.

கம்லேஷ் கொலை விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக லக்னோ காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையை அடுத்து கம்லேஷின் வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனையிடப்பட்டன. அதில் நான்கு பேர் கையில் ஸ்வீட் பாக்ஸுடன் கம்லேஷ் வீட்டை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் தீபாவளி இனிப்புகள் வழங்குவதாகக் கூறி அவரது வீட்டிற்குள் சென்று, கம்லேஷை கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்
ANI

இறுதியாக கம்லேஷைப் பார்த்தவரும் இதையேதான் கூறியுள்ளார். “இறுதியாக கம்லேஷைச் சந்திக்க இரண்டு பேர் வந்தனர். அதில் ஒருவர் காவி நிறத் துண்டு அணிந்திருந்தார், மற்றொருவர் கையில் இனிப்பு வைத்திருந்தார். இருவரும் கம்லேஷிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் சென்று விட்டு வந்து பார்த்தபோது கம்லேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

`3 கொலைகள்; டிக்டாக் வில்லன்; போதை அடிமை!' -  உ.பி காவலர்களைத் திணறடித்த `ஜானி தாதா'

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டும், தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையிலும் இந்தக் கொலையில் தொடர்புடைய 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் தாங்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ‘2015-ம் ஆண்டு கம்லேஷ் எங்களைப் புண்படுத்தும் விதமாக மேடையில் பேசினார். அதற்குப் பழி வாங்க நீண்ட நாள்கள் திட்டம் தீட்டி அவரை கொலை செய்தோம்’ என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
ANI

இருப்பினும் சிசிடிவி கேமராவில் உள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீஸார். ``இன்னும் 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை நாங்கள் கைது செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு ஸ்வீட் பாக்ஸ் கிடைத்துள்ளது. அது குஜராத்தில் உள்ள ஒரு கடையினுடையது. இதனால் அம்மாநில டி.ஜி.பியுடன் தொடர்புகொண்டு இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தக் கூறியுள்ளோம். அந்த மாநிலக் காவலர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்” என உத்தரப்பிரதேச டி.ஜி.பி ஓ.பி சிங் கூறியுள்ளார்.

தன் தந்தை கொலை செய்யப்பட்டது பற்றிப் பேசியுள்ள மகன் சத்யம் திவாரி, ``என் தந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ விசாரணை வேண்டும். இங்குள்ள யாரையும் நாங்கள் நம்பப்போவதில்லை. பாதுகாவலர்கள் உடன் இருக்கும்போதே அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் எப்படி இங்கு இருப்பவர்களை நம்புவது” என வேதனையுடன் பேசியுள்ளார்.

சத்யம் திவாரி
சத்யம் திவாரி
ANI

கம்லேஷ் திவாரி கொலை தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது உத்தரப்பிரதேச அரசு. இந்த விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் விரைவாக நடந்து அந்த அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.

பின் செல்ல