Election bannerElection banner
Published:Updated:

ம் என்றால், சிறைவாசம்... ஏனென்றால் வனவாசம்... எமர்ஜென்சி கிலி கிளப்பும் என்.ஐ.ஏ!

விசாரணை
விசாரணை

ஊபா மற்றும் என்.ஐ.ஏ சட்டங்கள், சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது.

`விசாரணை'... வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாள் கணக்கில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலருண்டு. இவர்களில் பலர், காவல்நிலைய படிகளையே மிதித்திராதவர்கள்!
ஆம், போலீஸின் அநியாயக்கரங்கள் எந்த எல்லைக்கும் நீளும் என்பதை ரத்தமும் சதையுமாகக் காட்டி, இந்திய போலீஸின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தையும் உரித்துப்போட்ட படம் அது. ஊரை அடித்து உலையில் போட்டவர்களையெல்லாம் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கும் காவல்துறை, சாலையில் வெறுமனே நடைபோடுபவர்களைக்கூட வன்மத்துடன் அணுகுவது; கொலைகாரர்கள் என்று உருமாற்றி உள்ளே உட்கார வைத்து உரிஉரி என்று உரித்தெடுப்பது என போலீஸின் அராஜகங்களைப் பட்டவர்த்தனமாகக் காட்டி, நடுநடுங்க வைத்திருப்பார் வெற்றிமாறன்.

இதற்கு நேற்றைய உதாரணம்... சாத்தான்குளத்தில் அடித்துக் கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன்! டாக்டர், மாஜிஸ்திரேட், சிறைத்துறையினர் என அத்தனை பேருமே ஒன்றுக்குள் ஒன்றாகக் கைகோத்து நடத்திய உச்சபட்ச கொடுமைதான் சாத்தான்குளம் சம்பவம்.

இன்றைய (ஏப்ரல் 12, 2021) உதாரணம்... கோயம்புத்தூரில் ஓர் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை, கொரோனாவைக் காரணம் காட்டி ஒரு சப்இன்ஸ்பெக்டர் தன் லத்தியை கண்மூடித்தனமாகச் சுழற்றிச் சுழற்றிக் கதறடித்ததுதான். அதிலும் பெண்கள் சிலருக்கு ரத்தக்காயம் வரும் அளவுக்கு அடிகள் விழுந்தன. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ வைரலான சூழலில், இடமாற்றம் செய்யப்பட்ட அந்த எஸ்.ஐ, வேறுவழியில்லாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் இதுபோன்ற கயவாளி போலீஸுக்கெல்லாம் அதிகபட்ச தண்டனையே. பின்னே, பெண் எஸ்.பி-யிடம் அத்துமீறிய டி.ஜி.பி-க்கு ராயல் சல்யூட் அடிக்கும் நாடாயிற்றே!

காவல்துறையின் `விசாரணை'யே இப்படியென்றால்... உச்சபட்ச அதிகாரம் படைத்த தேசிய போலீஸான என்.ஐ.ஏ (தேசியப் புலனாய்வு முகமை - NIA - The National Investigation Agency) அமைப்பின் `விசாரணை'கள் எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

Police
Police
Photo: Vikatan

அல்லல்படும் `ஆன்ட்டி இண்டியன்'கள்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே பல்வேறு உருமாற்றங்கள் பெற்று பெற்று, தற்போது என்.ஐ.ஏ என்பதாக வந்து நிற்கிறது தேசிய அரசின் `கொற்றக் கரங்கள்'. அதிலும், தற்போது அரசாங்க லகான் பி.ஜே.பி-யின் கைகளில் இருப்பதால்... என்.ஐ.ஏ-வின் பாய்ச்சல், அளவிட முடியாததாகவே மாறி நிற்கிறது. மாநில அரசுகளின் அதிகார வரம்புகளையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, தன் இஷ்டம்போல ஆக்டோபஸ் கரங்களை நீட்டி, அநியாயம் செய்ய ஆரம்பித்துள்ளது என்.ஐ.ஏ. அரசாங்கத்தின் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் கடந்த ஆறு ஆண்டுகளாக `ஆன்ட்டி இன்டியன்' என்றாக்கி வைத்திருப்பவர்கள், தற்போது அனைவரையும் சிறையில் தள்ளும் வேலையையும் ஆரம்பித்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் காவல்துறையால் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பிய, நியாயம் கேட்ட செயற்பாட்டாளர்கள் பலரும் ஊபா (UAPA) எனும் சட்டத்தைப் பயன்படுத்தி இப்போது இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ பாய்ச்சல்

கடந்த மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவின் 4 மாவட்டங்களிலுள்ள 31 இடங்களில், மனித உரிமை, பெண்ணுரிமை, தலித், தொழிற்சங்க, சமூக மற்றும் கலாசார செயற்பாட்டாளர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அமைப்பு அதிரடி சோதனை நடத்தியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பீமா கோரேகான் சிற்றூரில் நடைபெற்ற தலித் எழுச்சி திருவிழா கலவரத்தில் முடிய, மாவோயிஸ்ட்கள்தாம் இதற்குக் காரணம் என்று சொல்லி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் 16 பேர் `மாவோயிஸ்ட் தொடர்பாளர்கள்' என்கிற முத்திரை குத்திக் கைது செய்யப்பட்டனர். அதேபோலவே, `ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாகச் செயல்படுகிறார்கள்' என்பதையே இப்போதும் காரணமாக முன் வைத்துள்ளது என்.ஐ.ஏ.

இந்நிலையில், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசின் கரங்களாக ஊபா சட்டம் பயன்படுத்தப்படு வதைக் கண்டிக்கும் எதிர்க்குரல்கள் தற்போது பெருக ஆரம்பித்துள்ளன. அகில இந்திய அளவில் செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), ஏப்ரல் 9 அன்று இதுகுறித்து கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் என்.ஐ.ஏ மற்றும் ஊபா (UAPA - Unlawful Activities (Prevention) Act ) சட்டங்களைப் பயன்படுத்தி செயற்பாட்டாளர்கள் எவ்வாறு தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள் என்று விரிவாகவே விளக்கப்பட்டிருக்கிறது. அதன் சாராம்சமே இக்கட்டுரை.

Police Walkie Talkie
Police Walkie Talkie
Photo: Vikatan / Sakthi Arunagiri.V

இம்சிக்கும் இரு வழக்குகள்!

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முஞ்சிங்பட் (Munchingput) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் மார்ச் 7, 2021 அன்று எப்.ஐ.ஆர் ஒன்றை பதிவு செய்துள்ளது என்.ஐ.ஏ.

இந்திய தண்டனைச் சட்டம் (அரச விரோதம் (124 A) உள்ளிட்டப் பிரிவுகள்), ஊபா (UAPA), AP Public Safety Act, Arms Act உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதேபோல, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் பிடுகுரல்லா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றும் கூடிய விரைவில் என்.ஐ.ஏ-வால் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கிலும் மேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் செயற்பாட்டாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் ஆந்திர காவல்துறையால் கைதும் செய்யப்பட்டுள்ளனர். முஞ்சிங்பட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் முதலில் 64 பேரும், பிறகு 19 பேரும், மொத்தத்தில் 83 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பிடுகுரல்லா வழக்கில், 27 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேர், முஞ்சிங்பட் எஃப்.ஐ.ஆரிலும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் 10 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் முஞ்சிங்பட் வழக்குடன் தொடர்புடையவர்கள். இந்த இரு வழக்குகளில் தொடர்புடைய 23 பேர், ஆந்திரா உயர் நீதிமன்றத்தை அணுகி கைதுக்கு எதிராகத் தடையாணை பெற்றுள்ளனர்.

வாச்சாத்தி வழியில்!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு... காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போய் தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட வனக்கிராமமான வாச்சாத்தியில் நடத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைவெறி தாண்டவத்தை மறக்க முடியுமா? இதே போன்றதொரு கொடூர சம்பவம், ஒருங்கிணைந்த ஆந்திராவின் வகப்பள்ளி கிராமத்தில் 2007-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. பழங்குடிப் பெண்கள் 11 பேரை, சிறப்புக் காவல்துறையினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதற்காக நீதி கேட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்றது தொடங்கி, 2018-ல் அந்த வழக்கின் விசாரணை தொடங்குவது வரை உதவிக்கரம் நீட்டிய செயற்பாட்டாளர்களில் பலர்தான், இப்போது என்.ஐ.ஏ மூலமாகக் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

nia raid
nia raid

ரெய்டில் கிடைத்தது என்ன?

என்.ஐ.ஏ நடத்திய ரெய்டில், 40 மொபைல் போன்கள், 44 சிம் கார்டுகள், 184 சிடி/டிவிடிகள், 70 ஸ்டோரேஜ் உபகரணங்கள், 19 பென் டிரைவ்கள், டேப்லெட் கருவிகள், ஆடியோ ரெக்கார்டர்கள், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளின் பயனர் விவரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள் மற்றும் சிறையில் உள்ளவர்களின் வீடுகளும் ரெய்டிலிருந்து தப்பவில்லை. 31 செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரிடமும் கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

உள்நோக்கம் கொண்ட ரெய்டு!

எந்த பயங்கரவாத செயல்களும் நடைபெறவில்லையெனினும், `மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகச் சதித்திட்டம் தீட்டினார்கள்’ என்ற குற்றச்சாட்டை வைத்துக்கொண்டே செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் `டூல் கிட்’டை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. செயற்பாட்டாளர்களின் வீடுகள் இருக்கும் தெருக்களை பிளாக் செய்வது, கூட்டம்கூட வைப்பது, முன்பே தகவல் கொடுத்து, காட்சி ஊடகங்களில் ரெய்டை பரவலாக ஒளிபரப்பச் செய்வது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு செயற்பாட்டாளர்களைப் பயங்கரவாதிகள் போன்று சித்திரிக்க முயல்கிறது என்.ஐ.ஏ. இதன் மூலம், ஊபா சட்டத்தில் வழக்கு தொடர்ந்தால் மீளவே முடியாது என்கிற அச்சத்தை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதே அவர்களின் ஒரே குவியமாக இருக்கிறது.

பா.ஜ.க அரசின் கைப்பாவையா என்.ஐ.ஏ?

கடந்த சில ஆண்டுகளாக என்.ஐ.ஏ விசாரிக்கும் வழக்குகளை, முக்கியமாக `ஊபா' சட்டப்படி பதிவான வழக்குகளை உற்றுநோக்குவோம். குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள இத்தகைய ஊபா வழக்குகளை எல்லாம் என்.ஐ.ஏ அமைப்பு மூலமாக மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள விரும்புகிறது என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது. என்.ஐ.ஏ சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் என்.ஐ.ஏ அனுமதி பெற வேண்டியதில்லை. ஊபா சட்டமும் இந்தப் பட்டியலில் உள்ளதால், முஞ்சிங்பட் வழக்கை என்.ஐ.ஏ எடுத்துக்கொண்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கிலும் இதேபோல்தான் நடந்தது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தபோது நடந்த சம்பவம் அது. வழக்கை புனே காவல்துறைதான் முதலில் விசாரித்தது. பிறகு, பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளிவந்த சிவசேனா ஆட்சி அமைத்ததும், வழக்கு மறுஆய்வு செய்யப்பட்டு, செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, `பீமா கோரேகான் வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்கும்' என்று மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலேயே அறிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியல் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மனம்போன போக்கிலும், ஒருதலைபட்சமாகவும் என்.ஐ.ஏ போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. கடும் கண்டனத்துக்கும் உரியது.

National Investigation Agency, NIA
National Investigation Agency, NIA

என்.ஐ.ஏ மற்றும் ஊபா ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

என்.ஐ.ஏ ஒரு வழக்கைக் கையிலெடுத்தால், குற்றப்பத்திரிகையில் சாட்சியங்களைக் குறிப்பிடாமல் விட்டுவிடலாம் என்று ஊபா சட்டத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மற்றும் பன்னாட்டு குற்றவியல் சட்டங்களின் (ICCPR) அடிப்படைத் தத்துவங்களுக்கு எதிரானது. இந்தியா (ICCPR) -ல் கையெழுத்திட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குற்றம்சாட்டப்பட்டவருக்குச் சாட்சியங்கள் யாரென்று தெரியவில்லையெனில், அது எந்த அளவுக்கு நியாயமான விசாரணையாக இருக்க முடியும்?

ஊபா சட்டம் என்பது பாதுகாப்புச் சட்டங்களிலேயே மிகக் கடுமையானதாகவும், சட்டத்துக்குப் புறம்பானதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒன்றாகவும் இருக்கிறது. இதுபோன்ற சட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.

தடா, பொடா போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் முந்தைய காலங்களில் நடைமுறையிலிருந்தபோது, அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்வதற்கும் வழிவகைகள் இருந்தன. 1995-ல், தடா சட்டத்தை எதிர்க்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையமே (NHRC), நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதியது. பொடா அத்துமீறல்களை ஆவணப்படுத்துவதிலும், அதைத் திரும்பப் பெற வைப்பதிலும் இதுபோன்ற அமைப்புகள் முக்கியப் பங்காற்றின. தற்போது, ஊபா சட்டம் திமிர்த்தனமாகத் தவறாகவும், உள்நோக்கத்தோடும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படுகிறது என்று பல அறிக்கைகள் வெளிவந்த பிறகும், தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீதிமன்றங்கள் எனக் கிட்டத்தட்ட அனைத்துவிதமான ஜனநாயக அமைப்புகளும் அமைதி காக்கின்றன. ஊபா சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை கிடைப்பதுகூட குதிரைக் கொம்பாக உள்ளது.

NIA
NIA

நிவாரண நிதி திரட்டினாலும் ஊபா!

தமிழகத்தில், முகநூல் பதிவுக்கு ஊபா சட்டத்தின்கீன் வழக்குப் பதிவு செய்யப்பட்ட அவலங்கள் எல்லாம் நடந்துள்ளன. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கேரள மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டிக்கொண்டிருந்த ஒரு மாணவி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு ஊபா சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில், தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. அந்த வருடத்தில் தமிழகத்தில் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 308 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையே தண்டனை!

நிதர்சனம் என்னவெனில், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் விசாரணையின்போது குறைந்தது 3 - 8 வருடங்கள் வரை சிறையில் கழிக்க வேண்டியுள்ளது. அவர்கள் நிரபராதி என்று பின்னர் விடுவிக்கப்பட்டாலும்கூட, விசாரணையே அவர்களுக்குத் தண்டனையாக மாறிவிடுகிறது. ஊபா வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் வெறும் 5% மட்டுமே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுகின்றனர் என்பதுதான் இங்கே நிதர்சனமாக இருக்கிறது. ஆகக்கூடி 95% நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதே முழு உண்மை.

நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டாலும்கூட, `காவல்துறையினர் உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள்' என்று தண்டிக்க எந்தச் சட்ட வழிமுறைகளும் இல்லை என்பது கொடுமை. நிரபராதிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைப்பதில்லை. வாழ்க்கை சிறையிலேயே கழிவதுதான் மிச்சம். மொத்தத்தில், அரசின் கொள்கைகளை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் கருவியாக ஊபா உருவெடுத்துள்ளது-அவ்வளவே!

பங்கி நாகண்ணா!

முஞ்சிங்பட் எஃப்.ஐ.ஆர் மிகவும் பலமற்ற அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மிக முக்கியமாக ஊபா சட்டத்திலும் சரி, இந்திய சாட்சியச் சட்டத்திலும் (பிரிவுகள் 25-30), காவல்துறை அதிகாரி கொடுக்கும் வாக்குமூலத்தை சாட்சியமாகக் கருத முடியாது. ஆனால், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதியப்பட்டு, கைதுகளும், என்.ஐ.ஏ-வின் அதிரடிச் சோதனைகளும் நடைபெற்றுள்ளன என்பதுதான் கொடுமை.

முஞ்சிங்பட் எஃப்.ஐ.ஆரின் படியும், நீதிமன்றக் காவலுக்கான காவல்துறையின் விண்ணப்பத்திலும், ``முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பங்கி நாகண்ணா என்பவர் தாமாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்; அவர் மாவோயிஸ்ட் ஆதரவாளராகச் செயல்பட்டார்; காவல்துறை நடமாட்டத்தை மாவோயிஸ்ட்களுக்குத் தெரிவித்தார்; காவல்துறையினரின் செயல்பாட்டைத் தடுக்கவும், அரசுக்கு எதிராகப் போராடவும் பழங்குடி மக்களைத் தூண்டினார்; மாவோயிஸ்ட்டுகளுக்காக மருந்து, பாட்டரிகள், வயர்கள், சிவப்புத் துணி, சிம் கார்டுகள், மொபைல் போன்கள், மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க உதவினார்; அரசு ஊழியர்களையும், அரசியல் தலைவர்களையும் கொல்லச் சதித் திட்டம் தீட்டினார்; நகரங்களில் வசிக்கும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை, காட்டில் வசிக்கும் மாவோயிஸ்ட்களிடம் அழைத்துச் சென்று, அதன் மூலம் இளைஞர்கள், வேலையற்றோர், பெண்கள் ஆகியோரிடம் மாவோயிஸ்ட் கட்சியின் கொள்கைகளைப் பரப்ப உதவினார்" என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Court (Representational Image)
Court (Representational Image)

ஒப்புதல் இல்லா வாக்குமூலம்

இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஏன் நம்பத்தகுந்ததாக இல்லையெனில், பங்கி நாகண்ணாவை ஒரு செக்போஸ்டில், 23 நவம்பர், 2020 அன்று மதியம் 2.30 மணிக்கு காவல்துறை கைது செய்ததாகவும், 3.00 மணி முதல் 07.00 மணி வரை, தானாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், 7.30 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், வெறும் 4 மணி நேரத்தில், கடந்த 3 வருடத்தில் நடந்த சம்பவங்கள், பழங்குடி மக்கள் உட்பட 64-க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள், அவர் யாரையெல்லாம் காட்டுக்குள் அழைத்துச் சென்றார் என்ற விவரம், எந்த மாவோயிஸ்ட் தலைவர்களை அவர்கள் சந்தித்தனர், அந்தச் சந்திப்பின்போது யார் உடனிருந்தார்கள் என்ற விவரம், நகரத்தில் இருக்கும் மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பிற விரிவான விவரங்களை அவர் கூறியுள்ளதாக எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

கேள்வி கேட்டால் வழக்கு

எஃப்.ஐ.ஆரின்படி பங்கி நாகண்ணாவைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தப்பிக்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தப்பிக்க முயன்றவர் எந்தத் தயக்கமுமின்றி 4 மணி நேரத்தில் இவ்வளவு விவரங்களைத் தானாகவே முன்வந்து சொன்னதுதான் எப்படி என்று தெரியவில்லை. முக்கியமான சமூகச் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நோக்குடனே இந்த எஃப்.ஐ.ஆர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. இதில், சிவில் உரிமைகள் குழு - ஆந்திர பிரதேசம் (CLC-AP), மனித உரிமைகள் குழு (HRF), கவிஞர் வரவர ராவ் சார்ந்திருக்கும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் (ViRaSam) போன்ற 12 அமைப்புகளின் 25 பிரதிநிதிகள் மற்றும் 39 மாவோயிஸ்ட் மற்றும் பழங்குடித் தலைவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே காவல்துறையின் அத்துமீறல்கள், அநீதியான விசாரணைகள், அரசின் திட்டங்கள் ஆகியவற்றைக் கேள்விக்கு உட்படுத்துபவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்.ஐ.ஏ விசாரணை நடத்தியிருக்கும் செயற்பாட்டாளர்கள் எவருக்குமே இந்த பங்கி நாகண்ணாவைத் தெரியாது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

investigation
investigation

ஜனநாயகம் தழைக்கட்டும்!

பொதுவாக மக்களே கிளர்ந்தெழுந்து அநியாயங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது அருகிவிட்டது. இத்தகைய சூழலில், சமூக செயற்பாட்டாளர்கள்தாம் ஓரளவுக்கு நம்பிக்கை நாயகர்களாகத் தெரிகிறார்கள். அப்படியிருக்கும்போது, அவர்களின் குரல்வளையையும் நெரிப்பது சர்வாதிகாரமே! மக்களுக்காகக் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள், அநாவசியமாகக் கைது செய்யப்படுவதும், சிறையில் காலம் கழிப்பதும், அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் துன்பப்படுவதும் வாடிக்கையாகி வருவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே, மூஞ்சிங்பட் மற்றும் பிடுகுரல்லா எஃப்.ஐ.ஆர்-கள் ரத்து செய்யப்படுவதோடு, இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; ஊபா மற்றும் என்.ஐ.ஏ சட்டங்கள், சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது.

சர்வாதிகாரிகளின் காதுகளில் இதெல்லாம் ஏறுமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு