திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகேயுள்ள தாளக்குடி சாய்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நரசிம்மராஜ் - சிவரஞ்சனி தம்பதியர். இந்தத் தம்பதிக்கு 10, 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ டிரைவரான நரசிம்மராஜ் தன் மனைவி, குழந்தைகள், தாய் வசந்தகுமாரி ஆகியோருடன் வசித்துவந்திருக்கிறார். பெரும் கடனில் சிக்கியிருந்த நரசிம்மராஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சமயபுரம் சக்தி நகரில் இருந்த தனது சொந்த வீட்டை விற்றிருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைவைத்து, தனக்கிருந்த கடனை செட்டில் செய்ததோடு, புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு சில லட்சங்களைக் கையில் வைத்திருந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு நரசிம்மராஜ் அடிமையாகிக் கிடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே அதன் காரணமாக பெரும் பணத்தை இழந்து கடனில் சிக்கிய நரசிம்மராஜ், வீட்டை விற்றுக் கையிலிருந்த லட்சக்கணக்கான பணத்தையும் ரம்மி விளையாட்டிலேயே இழந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொழில் தொடங்குவதற்காக வைத்திருந்த பணம் குறித்து மனைவி சிவரஞ்சனி அடிக்கடி கணவர் நரசிம்மராஜிடம் கேள்வி எழுப்பிவந்திருக்கிறார். அதற்கு நரசிம்மராஜோ, `பணத்தை ஷேர் மார்கெட்ல போட்டிருக்கேன். பணம் ரெட்டிப்பாகி வந்ததும் பிசினஸை ஆரம்பிச்சுடலாம்’ என ஏதேதோ காரணங்களைச் சொல்லிவர, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில நாள்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, தினமும் குடும்பத்தாரிடம் போனில் பேசிவந்த சிவரஞ்சனியிடமிருந்து எந்த போனும் இல்லாமல் இருந்ததோடு, போன் ஸ்விட்ச்ஆஃப் ஆகி இருந்திருக்கிறது. அவருடைய கணவர் நரசிம்மராஜ் போனும் ஸ்விட்ச் ஆஃப் என்றிருக்க, சிவரஞ்சனி குடும்பத்தாருக்குப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. உடனே ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருக்கும் நரசிம்மராஜின் அக்கா வீட்டுக்கு சிவரஞ்சனியின் குடும்பத்தார் போன் செய்துள்ளனர்.

அப்போது போனை எடுத்த சிவரஞ்சனியின் குழந்தைகள், `அம்மாவுக்கு கொரோனான்னு அப்பா எங்களைக் கொண்டு வந்து இங்கே விட்டுடுட்டுப் போயிட்டாங்க. அம்மாவுக்கு கொரோனா சரியானதும்தான் எங்களை வந்து கூட்டிட்டுப் போவேன்னு சொல்லியிருக்காங்க’ என்றனர். இதைக் கேட்ட பிறகு சிவரஞ்சனியின் குடும்பத்தாருக்கு சந்தேகம் அதிகமாகியிருக்கிறது. உடனே சிவரஞ்சனியின் குடும்பத்தார், தாளக்குடி சாய் நகரிலுள்ள சிவரஞ்சனியின் வீட்டுக்கு வந்துள்ளனர். ``மூன்று நாள்களாக வீடு பூட்டித்தான் கிடக்கிறது” என வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார்.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, சிவரஞ்சனியின் கால்கள் மட்டும் தெரிந்தன. அதைப் பார்த்து அதிர்ந்துபோன குடும்பத்தினர், வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்க, பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கட்டிலுக்குக் கீழே சிவரஞ்சனி உடல் அழுகிய நிலையில் இருந்திருக்கிறார். சிவரஞ்சனியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததோடு, உடலின் மீது மஞ்சள்தூள் தூவப்பட்டு இருந்திருக்கிறது. சிவரஞ்சனியின் சடலத்தைப் பார்த்து கதறியழுத குடும்பத்தார், சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிவரஞ்சனியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சிவரஞ்சனி இறப்பு குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நரசிம்மராஜைக் கண்டித்ததால், அவர் மனைவி சிவரஞ்சனியை கொலை செய்திருக்கக்கூடும் என போலீஸார் கருதுகின்றனர். மேலும், சம்பவத்துக்குப் பிறகு கணவர் நரசிம்மராஜும், அவருடைய தாயார் வசந்தகுமாரியும் தலைமறைவாகியிருக்கின்றனர். ``அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தால் மட்டுமே என்ன நடந்ததென்ற உண்மை தெரியவரும்’’ என்கின்றனர் போலீஸார்.