சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கடந்த சில வருடங்களாக கஞ்சா, பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துவருகிறது. சுற்றுலாப்பயனிகளைக் குறிவைத்து தொடங்கிய இந்த விற்பனை தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் தாராளமாகப் புழங்க ஆரம்பித்திருக்கிறது. கஞ்சா விற்பனையும், அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப்போலவே, அதனால் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி.சந்திரன், “புதுச்சேரியில் கஞ்சா பயன்பாட்டைத் தடுப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறோம். புதுச்சேரியில் கஞ்சாவை உற்பத்தி செய்ய முடியாது எனும் நிலையில், வெளிமாநிலங்களிலிருந்துதான் அவை எடுத்து வரப்படுகின்றன.
நம் பக்கத்து மாநிலமான தமிழகத்திலிருந்து கார், டூ வீலர், லாரி போன்றவை மூலம் கஞ்சா நம் மாநிலத்துக்குள் வருகிறது. அதேபோல பல மாநிலங்களிலிருந்து நம் மாநிலத்துக்குள் வரும் ரயில்கள் மூலமும் அதிகமாக கஞ்சா எடுத்துவரப்படுகிறது. அதனால் எஸ்.பி தலைமையில் இயங்கிவரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், வெளிமாநிலங்களிலிருந்து வரும் அனைத்து ரயில்களையும் சோதனையிடுகின்றனர். சந்தேகப்படும்படும்படி அதில் வருபவர்களையும் தனியாக அழைத்து சோதனை செய்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரியில் தங்கி வேலை செய்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் புதுச்சேரியைவிட்டு வெளியே செல்லும்போதும், திரும்பி வரும்போதும் எங்களுக்குத் தகவல் கொடுக்கும்படி வலியுறுத்தியிருக்கிறோம். அப்படி வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி போய் வருபவர்களின் நடவடிக்கைகளை கவனித்துவருகிறோம். இதுவரை சிறிய அளவில் கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் மீது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இனிமேல் சொந்தப் பயன்பாட்டுக்காக சிறிய அளவில் கஞ்சா வைத்திருந்தாலும் அவர்கள்மீது உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், பள்ளி கல்லூரிகளில் அவர்களது நண்பர்களின் நடவடிக்கைகள் என அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை நாங்கள் அழைத்து வரும்போது, படிப்பு வீணாகிவிடும் என்று அவர்களின் பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆனால் இனி பள்ளி மாணவர்கள் கஞ்சாவைப் பயன்படுத்தினாலும் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நாளுக்கு நாள் கஞ்சா வழக்குகள் அதிகரித்துவருவதால் பல்வேறு நடவடிக்கைளை எடுக்கவிருக்கிறோம். மேலும் ரசாயனம் சார்ந்த போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. 2016-ல் மூன்று வழக்குகளில் 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020-ல் 36 வழக்குகளில் 107 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 2021-ல் 72 வழக்குகளில் 91 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 129 பேர் கைதுசெய்யப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை 20 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கஞ்சா பரவலாகக் கிடைக்கும் 20 பள்ளி, கல்லூரிகளை அடையாளம் கண்டிருக்கிறோம். முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப்பொருள் தடுப்பு அமைப்பை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு, அது விற்பனை செய்யப்படும் இடம், பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்டவை குறித்து 112 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதேபோல 94892 05039 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் புகாரளிக்கலாம். சைபர் க்ரைம் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம். சைபர் குற்றங்களை உடனடியாக பதிவுசெய்யாவிட்டால் 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். அப்படியும் நடவடிக்கை இல்லையென்றால் www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகாரளிக்கலாம்” என்றார்.