Published:Updated:

கார் கண்ணாடி உடைப்பு; 50 ரூபாய் சேதமென வழக்கு பதிவு - ஒண்டிவீரன் நினைவுநாளில் பதற்றம்!

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி
உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

``கார் கண்ணாடியை உடைச்சு, கொலை முயற்சிக்கான தாக்குதலில் ஈடுபட்டிருக்காங்க. ஆனால், போலீஸாரோ வெறும் 50 ரூபாய் சேதாரம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செஞ்சுருக்காங்க!”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதியன்று விடுதலைப் போராளி ஒண்டிவீரன் நினைவுநாளையொட்டி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல இடங்களில் தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் சார்பாக வீர வணக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி இரவு 7 மணியளவில் ஈரோடு மாவட்டம், உலகடம் அருகேயுள்ள குட்டைமேடு என்ற கிராமத்துக்கு நிர்வாகிகளுடன் தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மதிவண்ணன் சென்றிருக்கிறார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு குட்டைமேட்டில் உள்ள சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தமிழ்மணி என்பவரின் வீட்டுக்கு இரவு உணவுக்காகச் சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கு தகராறு செய்துகொண்டிருந்த கும்பல் ஒன்று, மதிவண்ணனின் கார்மீது கல்லை வீசித் தாக்குதல் நடத்தியதோடு, சங்கத்தின் பொருளாளர் தமிழ்மணியை அசிங்கமான வார்த்தைகளில் திட்டிப் பேசியிருக்கிறது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு, வெறும் 50 ரூபாய்க்கான சேதாரம் ஏற்பட்டது என்கிற பிரிவின்கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து `கல்லை வீசி கார் கண்ணாடியை உடைத்து கொலை முயற்சி நடந்திருக்க, வெறும் 50 ரூபாய்க்கான சேதாரம் ஏற்பட்டிருக்கிறது என போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்?’ எனக் கொதித்தெழுந்துள்ளனர் தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்கத்தினர்.

காரினுள் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கல், நொறுங்கிக் கிடைக்கும் கண்ணாடித் துகள்கள்
காரினுள் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கல், நொறுங்கிக் கிடைக்கும் கண்ணாடித் துகள்கள்

என்ன நடந்ததென தமிழ்நாடு சாக்கிய அருந்ததிய சங்கத்தின் தலைவர் மதிவண்ணன் அவர்களிடம் பேசினோம். ``ஒண்டிவீரன் நினைவுநாளுக்காக வீரவணக்க நிகழ்வை திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள 12 ஊர்களில் ஏற்பாடு செஞ்சிருந்தோம். எல்லா நிகழ்வுகளையும் முடிச்சுட்டு கடைசியாகத்தான் ஈரோடு மாவட்டத்திலுள்ள குட்டை மேடு பகுதிக்குப் போனோம். அங்கே காலையிலேயே இன்னோர் அமைப்பு தோழர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் ஏதோ தகராறு நடந்துருக்கு. நாங்க போனப்பவும் ஏதோ சண்டை நடந்துக்கிட்டு இருந்தது. ‘நீங்க வண்டியிலயே இருங்க தோழர்’னு சொல்லிட்டு நிர்வாகிகள் சிலர் கீழே இறங்கிப் போய் என்ன பிரச்னைனு பார்த்தாங்க. அப்போ சண்டை போட்டுக்கிட்டு இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருத்தர், திடீர்னு ஒரு பெரிய செங்கலை எடுத்து என்னோட காரோட பின்பக்க கண்ணாடியில வீசிட்டாரு. அதுல காரின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைஞ்சுடுச்சி. நல்லவேளை கார்ல இருந்த எனக்கோ, டிரைவருக்கோ எந்த அடியும்படலை.

என்.எல்.சி: `லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!’ - லாரிகளுக்குத் தீ வைத்து எரித்ததால் பதற்றம்!
மதிவண்ணன்
மதிவண்ணன்

அந்தக் குட்டைமேடு என்கிற ஊரில்தான் சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் முதல் கிளையைத் திறந்தோம். அதுபோக உள் ஒதுக்கீட்டால் எட்டு டாக்டர்கள், 25 இன்ஜினீயர்கள் என அதிகம் பயன்பெற்ற ஊர் அது. இவற்றின் அடிப்படையில் எனக்கு சென்டிமென்ட் ஆன ஊர் அது. அதனால எந்தப் பிரச்னையும் நடந்துவிடக் கூடாதுனு நேர போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தோம். முதல்ல எங்க புகாரை வாங்க போலீஸார் தயாராகவே இல்லை. `நீங்க புகாரை வாங்கலைன்னா எஸ்.பி-யைப் பார்த்து நாங்க புகார் கொடுத்துக்குறோம்’ எனச் சொன்னதும் புகாரை வாங்கிக்கிட்டாங்க. கடைசியில எஃப்.ஐ.ஆர்-ஐப் பார்த்தப்போ, வெறும் 50 ரூபாய் சேதாரமானது என்ற ஐ.பி.சி 427-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செஞ்சிருந்தாங்க. ஒரு அமைப்பின் தலைவரோட காரை அடிச்சிருக்காங்க. முதல்ல இது ஒரு கொலை முயற்சிதானே... யாரை திருப்திபடுத்துவதற்காக வெள்ளித்திருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் இப்படிச் செயல்படுகிறார்ன்னு தெரியலை. இந்துத்துவா சார்பான அ.தி.மு.க ஆட்சி இன்னும் தொடர்வதான நினைப்பில் இருக்கிறாரா? இந்த விவகாரம் சம்பந்தமாக ஈரோடு எஸ்.பி-யை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கவிருக்கிறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் மொத்தம் 511 செக்‌ஷன்கள் இருக்கு. கார் கண்ணாடியை உடைச்சுருக்காங்கன்னு புகார் கொடுத்தா ஐபிசி 427-ன் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும்.

இது சம்பந்தமாக வெள்ளித்திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமாரிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்டவங்க என்ன புகார் கொடுத்தாங்களோ, அதுக்கு என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முடியுமோ அதைத்தான் போட்டிருக்கோம். நடந்த சம்பவத்தை இன்ஸ்பெக்டரே நேரடியாகப் போய்ப் பார்த்து, எஸ்.பி- கிட்ட பேசி முறையாகத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புகாரில் என்ன எழுதிக் கொடுத்தாங்களோ அதையொட்டித்தான் வழக்கு போட்டிருக்கோம். அப்படியிருக்க, எங்க மேல எப்படி தப்பு சொல்ல முடியும்... இந்திய தண்டனைச் சட்டத்தில் மொத்தம் 511 செக்‌ஷன்கள் இருக்கு. கார் கண்ணாடியை உடைச்சிருக்காங்கன்னு புகார் கொடுத்தா ஐபிசி 427-ன் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான், சம்பந்தப்பட்ட வழக்கில் என்ன அபராதமோ, தண்டனையோ என்பதைச் சொல்வார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு