Published:Updated:

கொடநாடு: மறு விசாரணைக்கு வருகிறது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு!

கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி, கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷின் தற்கொலை வழக்கை மறு விசாரணை நடத்த அனுமதி கோரி காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2017, ஏப்ரல் 23 நள்ளிரவு கொடநாட்டில் நடந்த கொலை. கொள்ளைக்குப் பிறகு அடுத்துதடுத்து நடந்த நிகழ்வுகள் த்ரில்லர் படத்தின் காட்சிகளையே விஞ்சும் அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. விலகாத மர்மங்களோடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கில், ஒவ்வொரு நாளும் புதிய புதிய திருப்பங்கள் ஏற்பட்டுவருகின்றன.

கொடநாடு வழக்கு
கொடநாடு வழக்கு

இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் ஆத்தூரில் வாகன விபத்தில் உயிரிழந்தது, இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சயானின் கார் அடுத்த 24 மணி நேரத்துக்குள் கேரள மாநிலம், பாலக்காட்டில் விபத்துக்குள்ளாகி சயானின் மனைவி, மகள் உயிரிழந்தது, கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி, கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் 2017, ஜூலை மாதம் 3-ம் தேதி தற்கொலை செய்தது என அடுத்தது உயிர்ப்பலிகள் ஏற்பட்டன.

ஏறக்குறைய தீர்ப்பு வழங்கும் கட்டத்தை எட்டிய இந்த வழக்கை, தற்போது காவல்துறையினர் கையிலெடுத்து கூடுதல் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். சயானிடம் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த வழக்கின் கூடுதல் விசாரணை ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்றுவருகிறது. இந்த விசாரணையின் அடுத்தகட்ட நகர்வாக கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி, கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷின் மரண வழக்கை மறு விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி கோத்தகிரி வட்டாட்சியரிடம் விசாரணை அதிகாரிகள் மனு அளித்துள்ளனர்.

தினேஷ் குடும்பம்
தினேஷ் குடும்பம்

இந்த மறு விசாரணை குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``தினேஷ்குமார் தற்கொலை குறித்தும் மறு விசாரணை செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமானால், அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். இதன் அடிப்படையிலே தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரணை மேற்கொள்ள கோத்தகிரி தாசில்தார் சீனிவாசனிடம் மனு அளித்திருக்கிறோம். எஸ்டேட் நிர்வாகிகள், தினேஷின் உறவினர்களிடம் ஓரிரு நாள்களில் விசாரணையைத் தொடங்குவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு