தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதலாம் ஆண்டு மருத்துவம் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேனி சிபிசிஐடி போலீஸார் முதற்கட்டமாக மாணவர் உதித் சூர்யா, அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மருத்துவ மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், மாணவி - பிரியங்கா, ரிஷிகாந்த், பவித்ரன் மற்றும் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகம்மது சபி, மைனாவதி, மாதவன், ரவிச்சந்திரன் என 14 பேரைக் கைதுசெய்தனர்.
மேலும் இடைத்தரகர்கள் மனோகரன், ஆறுமுகம், வேதாச்சலம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பிறகு இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகரான ரஷீத் தாமாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுவரை மொத்தம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 18 பேர் கைதாகி, பிறகு நீதிமன்ற ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஓராண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்கள் மூன்று பேரை தேனி சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்துள்ளனர். மாணவர் இர்பானுக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவியாக பெங்களூரில் வசித்துவந்த பீகார் பொறியியல் பட்டதாரிகள் கிருஷ்ணா முராரியைக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைதுசெய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாஹத்குமார் சிம்ஹா, ரகுவந்த் மணி பாண்டே ஆகிய மூன்று பேரிடம் தேனி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கைதுசெய்யப்பட்ட மூவரும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் மூன்று இடைத்தரகர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்த முக்கியக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படலாம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.