Published:Updated:

பெண் பெயரில் ஃபேஸ்புக் ஐடி; நிர்வாண சாட்டிங் - பணம் கேட்டு மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!

தற்கொலை

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் நிர்வாண சாட்டிங் செய்த இளைஞர் ஒருவர், மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண் பெயரில் ஃபேஸ்புக் ஐடி; நிர்வாண சாட்டிங் - பணம் கேட்டு மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் நிர்வாண சாட்டிங் செய்த இளைஞர் ஒருவர், மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை

புதுச்சேரி வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முன்பு பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், “ஹாய் பிரண்ட்ஸ், ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு ஃபிரெண்ட் மெசேஜ் செய்து, வீடியோ கால் செய்து நான் முழு நிர்வாணமாக இருந்தேன். அந்த வீடியோவை எனக்கே அனுப்பி மிரட்டி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறான். அதனால் நான் சாகப்போகிறேன். அவர் நம்பரை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். அவனை விட்டுடாதீங்க ப்ரோ...” என்று முடிகிறது. அதையடுத்து அந்த இளைஞர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அந்த வீடியோவில் பேசிய இளைஞர் சந்துரு, புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமாகாத அவர், சமீபநாள்களாக செல்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறார். அறையைச் சாத்திக்கொண்டு தனியாகப் பேசிவந்திருக்கிறார். அப்படி நேற்று முன்தினம் இரவும் தனது வீட்டு வாசலில் தனியாக அமர்ந்து சாட்டிங் செய்துகொண்டிருந்திருக்கிறார். அதையடுத்து நேற்று அதிகாலை சுமார் 1:30 மணிக்கு அந்த இளைஞரின் சகோதரர் இயற்கை உபாதைக்காகக் கண்விழித்திருக்கிறார்.

ஆபாச சாட்டிங்
ஆபாச சாட்டிங்

அப்போது வீட்டுக்கு வெளியே இருக்கும் கொய்யா மரத்தில் சந்துரு நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். அதையடுத்து அவரின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சந்துருவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். அதையடுத்து உயிரிழந்த சந்துருவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து சந்துருவின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகளில் ஒருவர், ``பெண் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் வந்த போலி ஐடி-யுடன் நட்பான சந்துரு, அந்த நபருடன் பேசிவந்திருக்கிறார். அதன் பிறகு வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசிவந்திருக்கிறார். அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்து சந்துருவுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். அதனால்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். சந்துருவின் போனை சைபர் க்ரைம் பிரிவுக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைதுசெய்வோம்” என்றார்.