Published:Updated:

`புதுச்சேரியை உலுக்கிய இரட்டைக் கொலை!’ - பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் கைது

பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ்
News
பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ்

புதுச்சேரியில் பிரபல ரெளடியும், அவரின் நண்பரும் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க-வின் இளைஞரணி மாநிலச் செயலாளரைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை.

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரெளடி `பாம்’ ரவி. இவர்மீது ஆறு கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ரவி, புதுச்சேரியில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார். அதற்காகத் தனது பகுதியில் சொந்தச் செலவில் சாலைகள் சீரமைப்பு, கழிவுநீர் வாய்க்கால்களைச் சரிசெய்வது போன்ற சிறு சிறு பணிகளைச் செய்துவந்திருக்கிறார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மாலை 3:30 மணியளவில் அந்தோணி (எ) பரேட் உள்ளிட்ட தனது இரு நண்பர்களுடன் அலேன் வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் `பாம்’ ரவி.

இரட்டைக் கொலை
இரட்டைக் கொலை

அப்போது திடீரென அவர்களை வழிமறித்த ஐந்து பேர்கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம் ரவியின் தலையைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால், அது அந்தோணியின் தலையில் விழுந்ததால் அவர் படுகாயங்களுடன் கீழே விழுந்தார். அதில் அதிர்ச்சியடைந்த பாம் ரவியும் அவருடன் சென்ற மற்றொரு நண்பரும் அங்கிருந்து தப்பித்து ஓட, அரிவாள்களுடன் அவர்களை விடாமல் துரத்தியது அந்தக் கும்பல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறிது தூரத்தில் ரவியின் மீதும் நாட்டு வெடிகுண்டை வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது அந்தக் கும்பல். அதில் ரத்தவெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார் ரவி. அதேபோல தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்தோணியும் நீண்ட நேரத்துக்குப் பிறகு உயிரிழந்தார்.

கைதுசெய்யப்பட்ட பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ்
கைதுசெய்யப்பட்ட பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ்

ஒட்டுமொத்த புதுச்சேரியையும் உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், வேறொரு வழக்கில் கைதாகி, காலாப்பட்டு மத்தியச் சிறையில் இருக்கும் வினோத், தீனு என்ற தீனதயாளன் இருவரும் சிறைக்குள்ளிருந்தே கூலிப்படைவைத்து இந்த இரட்டைக் கொலையை நடத்தியிருப்பது தெரியவந்தது. அவர்கள்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கூலிப்படையினர் தங்குவதற்காக இடம் கொடுத்த வினோத்தின் தாய் உட்பட ஒன்பது பேரைக் கைதுசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து கொலைச் சம்பவத்தை நடத்த நாட்டு வெடிகுண்டு கொடுத்து உதவியதாக லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஐந்து பேரைக் கைதுசெய்தனர். அவர்களைத் தொடர்ந்து அருண், பிரவீன் என்ற இரண்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்ததால் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் புதுச்சேரி பா.ஜ.க-வின் இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ் என்ற ஷார்ப் விக்கியை நேற்று காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``பாம் ரவி, அந்தோணி கொலை வழக்கில் சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்ட வினோத்தையும் தீனாவையும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தோம்.

சிறையில் இருக்கும் தாதா மணிகண்டனுக்கும், பாம் ரவிக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்தது. அதனால் பாம் ரவியைக் கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் தாதா மணிகண்டன். அதேபோல முன்விரோதம் காரணமாக வினோத்தும் ரவியைக் கொலை செய்ய காத்துக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் கைகோத்துக்கொண்ட நிலையில், விக்னேஷ் தாதா மணிகண்டனுக்கு உதவி செய்திருக்கிறார். இந்த வழக்கில் ரெளடிகளைத் தவிர்த்து சில அரசியல்வாதிகளும் விரைவில் சிக்குவார்கள்” என்றனர்.