Published:Updated:

புதுச்சேரி: வாத்துப் பண்ணையில் கொத்தடிமை; கூட்டு பாலியல் வன்முறை! - 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுச்சேரி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை
புதுச்சேரி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை ( விகடன் )

வாத்துப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு பேரை கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் குடும்பத்துடன் புதுச்சேரி வில்லியனுரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் தங்கி, கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுவந்தனர். வறுமையின் காரணமாக தங்களின் பெண் குழந்தைகளை சொற்ப பணத்துக்கு அதே பகுதியிலுள்ள ஒரு வாத்துப் பண்ணைக்கு வேலைக்கு அனுப்பிவைத்தனர். வாத்து மேய்ப்பதற்காகச் சென்ற அந்தச் சிறுமிகள் கொத்தடிமைகளாக இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினருக்கு புகார் வந்தது.

அதையடுத்து அங்கு விரைந்த குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் கொத்தடிமைகளாக இருந்த ஐந்து சிறுமிகளை மீட்டனர். ஒரு சிறுமிக்கு 3,000 ரூபாய் என அவர்களின் பெற்றோர்களுக்குக் கொடுத்த பண்ணை நிர்வாகிகள், 7 முதல் 13 வயது வரையிலான சிறுமிகளை வருடக்கணக்கில் கொத்தடிமைகளாக வேலை வாங்கிவந்திருக்கின்றனர். மூன்று வேளை உணவைக்கூட ஒழுங்காக வழங்காமல், பண்ணையிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் அந்தச் சிறுமிகள். மேலும், அவர்களுக்கு மது போதை ஏற்றியும் பாலியல் வன்கொடுமையைச் செய்திருக்கின்றனர்.

 கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

முதலில் இரண்டு சிறுமிகளும், அவர்கள் அளித்த தகவலின்படி மற்ற மூன்று சிறுமிகளும்ம் மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. அவர்களில் இரண்டு சிறுமிகள் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை செய்தது மற்றும் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்ததுடன், அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்தது குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழு. அதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஐந்து சிறுமிகளும் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதும், அவர்களில் 13 வயதுகொண்ட ஒரு சிறுமி கர்ப்பமாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

 கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்தச் சிறுமிகளின் பெற்றோர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆடு மேய்க்கும் வேலைகளை செய்பவர்கள். அதே வேலைக்காக புதுச்சேரி வந்தவர்கள், தங்கள் குழந்தைகளை வாத்து மேய்க்கும் வேலைக்கு அனுப்பினர். சிறுமிகள் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர், அவரின் மகன், உறவினர்கள் மற்றும் அங்கே வேலை செய்துவரும் நபர் என சுமார் 10 பேர் சிறுமிகளைத் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கின்றனர்.

தாங்கள் வன்கொடுமை செய்யப்படுகிறோம் என்பதுகூட தெரியாமல், முதலாளிகள் என்ற முறையில் அந்தக் கொடுமையை அனுபவித்துவந்திருக்கின்றனர் அந்த அப்பாவிச் சிறுமிகள். அவர்களில் நான்கு சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் தகவலும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தற்போது தலைமறைவாக இருக்கும் அவர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வலை விரித்திருக்கிறது காவல்துறை.

Vikatan

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எஸ்.பி பிரக்தீக்‌ஷா கொடாரா, ``புதுச்சேரி கீழ்சாத்தமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஐந்து சிறுமிகள் வழக்கில் ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கிறது. அவர்களைப் பிடிப்பதற்கு ஐ.பி.எஸ் அதிகாரி திவ்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு