Published:Updated:

சங்கராபுரம்: 7 பேரின் உயிரைக் குடித்த வெடி விபத்து!-பாஜக மாவட்டச் செயலாளர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சங்கராபுரம் பட்டாசுக் கடைகள் தீ விபத்து
சங்கராபுரம் பட்டாசுக் கடைகள் தீ விபத்து

விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் குவிக்கப்பட்ட வெடிபொருள்களுடன், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையின் அலட்சியப் போக்கால் இந்த வருடமும் தமிழகத்தில் அப்பாவி மக்களின் உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது பட்டாசு விபத்து.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவற்றை விற்கும் கடைகளில் ஏற்படும் கோர விபத்துகள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்துவருகின்றன. தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மருந்துகளைக் கையாள்வது, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட விதிகளைக் கடைப்பிடிக்கப்படாத காரணத்தால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும், கரன்ஸி கட்டுகளுக்காக அப்பாவி மக்களின் உயிர்களை அம்போவென விட்டுவிடுகிறார்கள் அதிகாரிகள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது அரங்கேறியிருப்பதும் அதுதான். ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் புழக்கத்தைக்கொண்டிருக்கும் சங்கராபுரம் மும்முனை சந்திப்புக்கு அருகில் மளிகைக் கடை நடத்திவரும் செல்வகணபதி பா.ஜ.க-வின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர். அந்த மளிகைக் கடையிலேயே பட்டாசுக் கடையையும் நடத்திவந்திருக்கிறார். அத்துடன் விதிகளை மீறி அதே கட்டடத்தின் முதல் மாடியை வெடிபொருள்களின் குடோனாகவும் பயன்படுத்திவந்திருக்கிறார்.

சங்கராபுரம் வெடி விபத்து
சங்கராபுரம் வெடி விபத்து

கடந்த அக்டோபர் 26-ம் தேதி மாலை சுமார் 6:30 மணிக்கு அந்தப் பட்டாசுக் கடையில் பயங்கரச் சத்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்து, அந்தக் கட்டடத்தின் கான்கிரீட் சுவர்களைப் பல மீட்டர் தூரத்துக்கு பிய்த்து வீசியிருக்கிறது. பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலுள்ள டீக்கடைக்குப் பரவியதில், அங்கிருந்த நான்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. பட்டாசு மருந்துகளும், சிலிண்டர்களும் சேர்ந்து உயிர்ப்பித்த தீப் பிழம்புகள் பல அடி தூரத்துக்கு எழும்பி போர்க்களமாக காட்சியளித்தது. அதையடுத்த சில நிமிடங்களில் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமானது அந்த இரண்டு அடுக்குக் கட்டடம். இந்தக் கோர விபத்தில் பட்டாசுக் கடையின் உரிமையாளர் செல்வகணபதியின் அம்மா வள்ளி என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

பட்டாசுக் கடையிலிருந்து பறந்து வந்த கான்கிரீட் கற்கள் தாக்கியதில் நான்கு கடைகள் தள்ளி நின்றிருந்த ஷா ஆலம், காலித் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல அந்தப் பகுதியில் பூ விற்றுக்கொண்டிருந்த 72 வயதான பஷீர், நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செம்பியன் என்ற அய்யாசாமி, அங்கு ஒரு கடையில் படுத்துக்கொண்டிருந்த நாசர் என்ற மாற்றுத்திறனாளி போன்றவர்களும் பிய்த்து எரியப்பட்ட கான்கிரீட் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவன தனபால்
உயிரிழந்த சிறுவன தனபால்

27-ம் தேதி காலை வரை நடந்த மீட்புப் பணியில் செல்வகணபதியின் தம்பி மகனான 11 வயது தனபாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் பட்டாசுக் கடையிலிருந்து மூன்றாவது கடையான மளிகைக் கடையை அதன் உரிமையாளர் சுத்தம் செய்வதற்கான பணிகளைத் தொடங்கினார். அப்போது தலைகீழான நிலையில் சுவரோடு ஒட்டியபடி தீக்காயங்களுடன் சிறுவன் தனபால் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிரிழந்த ஷா ஆலம் என்பவரின் சகோதரர் ஷான் நவாஸிடம் பேசினோம். ``விபத்து நடந்த இடத்துல இருந்து நாலு கடை தள்ளி எங்களோட மொபைல் கடை இருக்கு. அப்பாதான் அதை பார்த்துக்கறாரு. தம்பி சாயங்கால நேரத்துல அங்க வந்து நண்பர்கள்கிட்ட பேசிக்கிட்டிருப்பான். அன்னைக்கும் அதேபோல எங்க கடைக்கு வெளியில் நின்னு சித்தப்பா பையன் காலித் என்பவருடன் பேசிக்கிட்டிருந்தான்.

உயிரிழந்த ஷா ஆலம்
உயிரிழந்த ஷா ஆலம்

அப்போ திடீர்னு அந்தப் பட்டாசுக் கடை பயங்கர சத்ததோட வெடிக்க ஆரம்பிச்சதும், அங்கே இருந்த எல்லாருமே ஓடிப்போயிட்டாங்க. ஆனா எங்க தம்பிகள் மட்டும் ஓடிப்போய் விபத்துல சிக்கிக்கிட்ட சிலரைக் காப்பாற்றி வெளியே இழுத்துட்டு வந்துட்டாங்க. அப்போ அங்க இருந்து ஓடிப்போனவங்க எல்லோரும் என் தம்பிகளை வந்துவிடும்படி கத்தியிருக்காங்க. ஆனால் விபத்துல வேற யாராவது சிக்கி இருக்காங்களான்னு மறுபடியும் பார்க்கப் போயிருக்காங்க.

அப்போ பட்டாசுக் கடையில இருந்து பிச்சுக்கிட்டு வந்த இரும்புக்கம்பியோட இருந்த கான்கிரீட் கல்லு காலீத் தம்பியோட முகத்துல அடிச்சதுல அங்கேயே அவன் உயிர் போயிடுச்சு. இன்னொரு கான்கிரீட் கல்லு ஷா ஆலம் மேல அடிச்சிருக்கு. அதுல தலையில் பலமா அடிபட்டு சுருண்டு விழுந்து துடிச்சிருக்கான் தம்பி. அந்த விபத்தை ஆயிரம் பேர் சுற்றி நின்னுக்கிட்டு செல்போன்ல வீடியோ எடுத்தாங்க. ஆனா அவங்கள்ல யாரும் தம்பியைக் காப்பாற்றவில்லை.

பட்டாசு கடை உரிமையாளர்
பட்டாசு கடை உரிமையாளர்

சத்தம் கேட்டு அங்க ஓடிப்போன எங்க அப்பாதான் தம்பியைத் தூக்கியிருக்கிறார். அப்போ அரை மயக்கத்துல கிடந்த தம்பி ‘என்னைக் காப்பாதுங்கப்பா’ன்னு சொல்லிக்கிட்டே எங்களை விட்டுப் போயிட்டான். என் தம்பியைப் பிரிந்து நாங்கள் படும் கஷ்டம் இனி யாருக்கும் வரக் கூடாது. பட்டாசுக் கடைகளை இனி ஊருக்கு வெளியில்தான் நடத்தணும்னு அரசு உத்தரவு போடணும்” என்றார் வருத்தமாக.

விபத்தின் தொடர்ச்சியாக பட்டாசுக் கடையின் உரிமையாளரும், பா.ஜ.க-வின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளருமான செல்வகணபதி மீது ஏழு பிரிவுகளில் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. அனுமதியின்றி அளவுக்கதிகமான பட்டாசுகளைத் தேக்கிவைத்ததுதான் விபத்துக்கான காரணம் என முதர்கட்ட விசாரணை தெரிவிக்கும் நிலையில், மருத்துவமனையில் நம்மிடம் பேசிய செல்வகணபதி, பேக்கரியிலிருந்து கிளம்பிய நெருப்புதான் விபத்துக்குக் காரணம் என்றும், அத்துடன் தீயணைப்புத்துறை வாகனத்தில் போதுமான தண்ணீர் இல்லாததுதான் உயிரிழப்புகள் அதிகரித்ததற்குக் காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்.

கள்ளக்குறிச்சி: `பட்டாசுக் கடையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு; முதல்வர் இரங்கல்!'

இதற்கிடையில் செல்வகணபதி சட்டவிரோதமாகக் கிணறு தோண்டுவதற்குப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததும், அவரின் சகோதரர் முருகன் கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை வாங்கிப் பதுக்கி வைத்திருந்ததும்தான் விபத்துக்கு காரணம் என்று டி.எஸ்.பி-யிடம் புகாரளித்திருக்கிறார் உயிரிழந்த ஷா ஆலமின் தந்தை சையத் அஜிஸ். இந்தக் கோர விபத்தை வழக்கு பதிவுடன் நிறுத்திக்கொள்ளாமல், விபத்து நடப்பதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு