Published:Updated:

தஞ்சாவூர்: மாறிய உடல்; பதறிய மகன்! -அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கலங்கும் குடும்பம்?

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலைச் சுற்றித் துணியால் மூடப்பட்டிருந்தது. துணியை விலக்கி முகத்தைக் காண்பித்தபோது, என் மகன் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இந்தநிலையில், தன் கணவரின் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அந்தப் பெண்ணிடம் மாற்றிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலகிருஷ்ணன் மனைவி சங்கீதா
பாலகிருஷ்ணன் மனைவி சங்கீதா

பட்டுக்கோட்டை, கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (46), கூலி வேலை செய்துவந்திருக்கிறார். இவரின் மனைவி சங்கீதா (38). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும்,12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2-ம் தேதி பாலகிருஷ்ணனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. பாலகிருஷ்ணனை அவர் மனைவி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பாலகிருஷ்ணன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதைத் தொடர்ந்து டாக்டர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ம் தேதி அதிகாலை பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, முகத்தை மூடிய நிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்

பின்னர் பட்டுக்கோட்டையிலுள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிக் காரியத்துக்கான ஏற்பாட்டைச் செய்தனர். அப்போது பாலகிருஷ்ணனின் மகன் ரோகேஷ் அப்பா முகத்தைக் கடைசியா ஒரு முறை பாத்துக்குறேன் எனக் கண் கலங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்தவர் துணியை விலக்கி முகத்தைக் காட்ட, `ஐயோ இது என் அப்பா இல்லை’ என ரோகேஷ் கதற அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னரே மருத்துவக் கல்லூரியில் உடலை மாற்றிக் கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே மாறி வந்த உடலை எடுத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்கு வந்து முறையிட்டுள்ளனர்.

அப்போது மருத்துவமனையில் அலட்சியமாக பதில் கூறியதாச்க சொல்லப்படுகிறது. இறந்துபோன கணவரின் உடல் என்ன ஆனது என்பது தெரியாமல், அவருக்குச் செய்ய வேண்டிய காரியத்தையும் செய்ய முடியால் சங்கீதா தனது இரு பிள்ளைகளுடன் கதறிக்கொண்டிருக்கிறார். ஆனால் மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ அலட்சியமாக, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மகனுடன் பாலகிருஷ்ணன்
மகனுடன் பாலகிருஷ்ணன்

இது குறித்து சங்கீதாவிடம் பேசினோம். ``நல்லா இருந்த என் கணவருக்கு திடீரென உடம்புக்கு முடியாமப்போச்சு. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் முடிவுகள் வருவதற்குள்ளேயே கொரோனா பாசிட்டிவ் எனக் கூறி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சேர்ந்ததும் புதிதாக என் கணவருக்கு எந்த டெஸ்ட்டும் எடுக்கவில்லை. மேலும் மூன்று மணி நேர காத்திருப்புக்கு பின்னரே எங்களுக்கு பெட் கிடைத்தது. முறையான சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை. அவ்வப்போது ஆக்ஸிஜன் மட்டும் கொடுத்துவந்தனர். மருந்து, மாத்திரைகூட ஒழுங்காகத் தரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் எனக்கு வசதியில்லை. என் கணவர் பொழச்சா போதும்னு எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டேன்.

ஆனால் 6-ம் தேதி காலை என் கணவர் என்னையும், புள்ளங்களையும் விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டார். உடனே உடலை பிரேத பரிசோதனைக்காக மார்ச்சுவரிக்கு எடுத்துச் சென்றனர். அப்பதான் அவர் முகத்தைக் கடைசியாகப் பார்த்தேன். ஃபார்மலிட்டிஸ் முடிஞ்ச பிறகு முகத்தை மூடி, உடலை எங்களிடம் ஒப்படைத்தனர். குடும்பத்தை கவனித்து வந்தவரின் உயிரைப் பறிகொடுத்துட்டு நாங்க கலங்கி நின்னோம். ஆனால் ரூ.1,000 கொடுத்த பிறகே உடலை எங்ககிட்ட கொடுத்தாங்க.

மகளுடன்
மகளுடன்

சரின்னு நொந்து கொண்டு உடலை பட்டுக்கோட்டைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு சுடுகாட்டில் இறுதிக் காரியம் செய்வதற்கான அனைத்தையும் உறவினர்கள் செய்தனர். அப்ப என் மகன் கடைசியாக அப்பாவின் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டு கண்கள் கலங்கக் கேட்டிருக்கிறான். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலைச் சுற்றி மூடப்பட்டிருந்த துணியை விலக்கி முகத்தைக் காண்பித்தனர். அப்போது என் மகன் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவக் கல்லூரியில் என் கணவரின் உடலை மாற்றிக் கொடுத்துவிட்டனர்.

பதறிய அனைவரும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் சொல்லிவிட்டு, மாறிய உடலை எடுத்து கொண்டு மீண்டும் சென்றனர். மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் என கணவர் உடல் இல்லை. பணியிலிருந்தவர்கள், `உடலைக் காணவில்லை; என்னாச்சுன்னு தெரியலை’ என்று வார்த்தையில் பதில் சொன்னார்கள். என் கணவரின் உடலை வேறு யாருக்காவது மாற்றிக் கொடுத்துவிட்டார்களா... எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது யார் உடல் என எந்தஜ்க் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

பாலகிருஷ்ணன் மனைவி சங்கீதா
பாலகிருஷ்ணன் மனைவி சங்கீதா

ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் வந்த டாக்டர்கள் எங்களைச் சமாதானம் செய்து அனுப்பும் நோக்கத்திலேயே செயல்பட்டதுடன், அடுத்த நாள் வரச் சொல்லி அனுப்பிவைத்தனர். மூன்று நாள் ஆகுது, எந்த நடவடிக்கையும் இல்லை.கொரோனாவுக்குக் கணவரை பறிகொடுத்த துர்பாக்கிய நிலை ஒரு பக்கம் என்னையும் என் பிள்ளைகளையும் கலங்கடிக்கிறது. அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியத்தை இன்னும் செய்யாமல், எங்க வீட்டுக்கும் செல்ல முடியாமல் தஞ்சாவூரிலுள்ள அண்ணன் வீட்டில் முடங்கியிருக்கிறோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம். என் கணவர் உடல் எனக்கு வேண்டும். அவர் முகத்தை நானும் என் பிள்ளைகளும் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும். இதற்கான ஒரு தீர்வை எனக்குத் தர வேண்டும்’’ எனக் கண்ணீர்விட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்தபோது `இது குறித்த விசாரணை நடைபெற்றுவருவதாக’த் தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு