தமிழ்நாட்டில் விசாரணையில் இருந்துவரும் முக்கிய வழக்குகளில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது... அரசியல் முக்கியத்துவம் கொண்டதும்கூட.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலைசெய்யப்பட்ட சம்பவம், பின்னர் கொடநாடு பங்களாவில் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் எடப்பாடி, சமுத்திரம் சித்திரைபாளையத்தைச் சேர்ந்த கனகராஜ், ஆத்தூரில் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கனகராஜ் மனைவி கலைவாணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் அந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர். பின்னர் கொடநாடு வழக்கோடு கனகராஜ் வழக்கையும் சேர்த்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்து சாட்சியை கலைத்ததாக கனகராஜின் அண்ணனான தனபாலை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
இறந்த கனகராஜின் மனைவி கலைவாணி சென்னை கே.கே.நகரில் தனது குழந்தைகளுடன் வசித்துவந்தார். சில நாள்களுக்கு முன்பு கலைவாணியை கனகராஜின் மற்றொரு அண்ணனான பழனிவேல் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அதில், கனகராஜ் பெயரில் பணிக்கனூரிலுள்ள இடத்தை விற்றுத் தருவதாகவும் அதற்காக ஊருக்கு வரும்படியும் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதற்காக, கடந்த 3-ம் தேதி தன் அண்ணனுடன் கலைவாணி தாரமங்கலத்துக்கு வந்திருக்கிறார். அங்கு வந்த பழனிவேல், கலைவாணியை பணிக்கனூரிலுள்ள கோவிந்தராஜ் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குவைத்து நிலத்தை வாங்க வந்தவர்களை அறிமுகப்படுத்திப் பேசியிருக்கிறார். அப்போது திடீரென இடம் வாங்க வந்தவர்களை அனுப்பிவிட்டு, `நிலத்தை விற்க முடியாத அளவுக்குச் செய்துவிடுவேன்’ என்று பழனிவேல் மிரட்டியிருக்கிறார்.
`ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என கலைவாணி கேட்டதற்கு, `உனது புகாரால்தான் என் அண்ணன் தனபால் சிறையிலடைக்கப்பட்டார். இதுவரை 4 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கு. அதனால் செலவான பணத்தைக் கொடுத்துவிட்டு, வழக்கையும் வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்’ என மிரட்டல் விடுத்து சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்திருக்கிறார்.
அங்கிருந்து தப்பிய கலைவாணி, ஜலகண்டாபுரம் போலீஸில் புகார் கொடுத்தார் அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு பழனிவேல் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர்.