பொழுதுபோக்குப் பூங்கா, நட்சத்திர விடுதி, மதுபானத் தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனங்களை நடத்திவரும் பிரபல எம்.ஜி.எம் குழுமத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். இந்தச் சோதனை குறித்து வெளியான முதற்கட்ட தகவலின்படி, எம்.ஜி.எம் குழுமத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. சென்னை, திண்டிவனம், காஞ்சிபுரம், நெல்லை, பெங்களூரு ஆகிய நகரங்களில், எம்.ஜி.எம் குழுமத்துக்குச் சொந்தமான சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.

அதாவது சென்னையிலுள்ள எம்.ஜி.எம் தலைமை அலுவலகம், அதன் உரிமையாளர்களின் அலுவலகம் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுவருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றுவரும் இந்தச் சோதனையின் விவரங்கள் சோதனைக்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
